கோலிவுட் ஜங்ஷன்: மனைவியின் கதை!

By செய்திப்பிரிவு

கிரிக்கெட் நட்சத்திரம் மகேந்திரசிங் தோனி தனது மனைவி சாக் ஷியின் கதையைக் கொண்டுத் தயாரித்துள்ள தமிழ்ப் படம் ‘எல்.ஜி.எம்’ (LGM - Let’s get married). நதியா, ஹரீஷ் கல்யாண், இவானா நடித்துள்ள இப்படத்தை, ரமேஷ் தமிழ் மணி இயக்கியிருக்கிறார். மருமகளும் மாமியாரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள ஒரு ‘ட்ரிப்’ போகிறார்கள். அந்த ’ட்ரிப்’ அவர்கள் இருவருக்கும் எப்படி ‘ட்ராப்’ ஆக மாறிவிடுகிறது என்பதுதான் கதை. இப்படத்தின் இசை, ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சிக்காகக் குடும்பத்துடன் சென்னை வந்திருந்தார் தோனி.

இசைக் கூட்டணி! - யுவன் ஷங்கர் ராஜா - சிலம்பரசன் ஆகிய இருவரது இசைக் கூட்டணி ரசிகர்களால் கொண்டாடப் பட்டு வந்திருக்கிறது. தற்போது இந்தக் கூட்டணி மேடையிலும் இணைந்திருக்கிறது. ‘ஹை ஆன் யுவன்’ (High on U1) என்று தலைப்பு சூட்டப் பட்டிருக்கும் பிரம்மாண்ட ‘லைவ்’ இசை நிகழ்ச்சியை மலேசியத் தமிழர்களான கார்த்திக் இளம்வழுதி, கவிதா சுகுமார் ஆகிய இருவரும் ஒருங்கிணைந்துள்ளனர்.

மலேசியாத் தலைநகரான கோலாலம்பூரில் ஜூலை 15 ஆம் தேதியான நாளை நடைபெறவிருக்கும் நிலையில் இந்நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக, யுவன் - சிலம்பரசன் கூட்டணியில் வெளிவந்த படங்களில் இடம்பெற்ற பாடல்களை சிலம்பரசன் பாடவிருக்கிறார். இந்த இசைப் பயணக் கூட்டணி, உலகின் பல நாடுகளுக்கும் தொடர இருக்கிறது.

பெரிய திரை அனுபவம்! - குடும்பம், சென்டிமென்ட் கதைக் களத்தில் தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வந்தவர் இயக்குநர் விஜய். முதல் முறையாக அவர், அருண் விஜயை வைத்து முழுநீள ஆக் ஷன் படத்தை இயக்கியிருக்கிறார். ‘மிஷன் - சேப்டர் 1 - அச்சம் என்பது இல்லையே’ என்கிற தலைப்பில் லைக்கா நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. படம் குறித்து இயக்குநர் விஜய் கூறும்போது “கரோனா காலத்துக்குப் பிறகு ரசிகர்களைத் திரையரங்குகளுக்கு வரவழைக்க வேண்டுமானால் பெரிய திரைக்கான திரை அனுபவத்தைப் பிரம்மாண்டமாகக் கொடுக்கும் கதையும் காட்சியாக்கமும் தேவை.

இந்தப் படத்தில், ஒரு தந்தைக்கும் மகளுக்குமான பாசப் பிணைப்பு, ஆக் ஷனுக்கான பின்னணிக் காரணமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. லண்டன் சிறையிலிருந்து நாயகன் தப்பிக்கும் காட்சிகளும் படம் முழுவதும் வரும் ஆக் ஷன் பிளாக்குகளும்; ‘கே.ஜி.எஃப்’ மாதிரியான படங்களை விஞ்சும் வகையில் இருக்கும்” என்றார். இப்படத்தில் எமி ஜாக் ஷன் சிறை அதிகாரியாக வருகிறார்.

விஜய பிரபாகரனின் பாதை! - விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன். அவர் பாடி, நடித்திருந்த ‘என் உயிர்த் தோழா’ என்கிற தனியிசைக் காணொளி, இரு ஆண்டுகளுக்கு முன் இணையத்தில் வெளியாகி ஹிட் அடித்தது. தனது தம்பி சண்முகப் பாண்டியனைப் போல் சினிமாவில் நடிக்க வராமல், சர்வதேச இசை நிகழ்ச்சி நடத்தும் துறையில் கால் பதித்திருக்கிறார்.

இதற்காக, ‘டிராக்டிகல் கான்சர்ட்ஸ்’ என்கிற இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் விஜய பிரபாகரன் கூட்டணி அமைத்துள்ளார். கிராமி விருது வென்ற அமெரிக்க ஹிப் ஹாப் பாடகரான கர்டிஸ் 50 சென்ட் ஜாக்சன் கலந்துகொண்டு பாடும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நவம்பர் 25ஆம் தேதி மும்பையில் நடத்துகிறார். கர்டிஸ் 50 சென்ட், தனது புகழ்பெற்ற ஆல்பங்களிலிருந்து பில்லியன்களில் ஹிட்டடித்த பாடல்களை இந்த நிகழ்ச்சியில் பாட இருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE