வயது, அனுபவம், மொழி, இனம் என எந்த வேறுபாடுகளும் இளையராஜாவின் இசைப் பரவலைத் தடுக்க முடிவதில்லை. வயிற்றில் இருக்கும் குழந்தை தொடங்கி, பல் கொட்டிய முதியவர்கள் வரை அவரது இசையின் பன்முகத் தன்மையில் கரைந்து போகிறார்கள். இத்தனை ஆண்டுகளில் எந்தப் பாணியையும் கைகொள்ளாத இளையராஜா, தானே ஒரு வகையாகிப் பல இசையமைப்பாளர்களுக்கு வாழ்வளித்திருக்கிறார். அவருக்குத்தான் 80 வயதே தவிர, அவரது இசைக்கு முதுமை என்பதே இல்லை என்று கூறும்படி இன்றைய புதிய தலைமுறை இயக்குநர்களுக்கும் தன் இசை நதியை வழிந்தோடச் செய்கிறார். அவருடன் உரையாடிய நேர்காணலின் நிறைவுப் பகுதி இது.
இசையும் மொழியும் இணையும்போதுதான் இசையின் ஆயுள் கூடுகிறதா? - நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த ஒரு பாடலின் வரிகள் மறந்துபோய்விட்டன என்று வைத்துக்கொள்ளுங்கள். அதைப் பற்றி அந்தப் பாடலின் இசையால் கவரப்பட்டவர் வரிகள் இல்லாமலே இசையை மட்டும் பாடுவது எப்படி? இந்த இடத்தில் மொழியை இசை வென்றுவிடுகிறது இல்லையா? ஒரு சிறு எடுத்துக்காட்டு.
சமீபத்தில் ஆந்திராவில் இசை நிகழ்ச்சி நடத்தினேன். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள், தமிழ்ப் பாடல்களை வரி பிசகாமல் பாடுகிறார்கள். இதற்குக் காரணம் அவர்களுக்குத் தமிழும் தெரியும் என்பதல்ல; இசைக்கு மொழி தேவைப்படுவதில்லை என்பதுதான்.
ஒரு பாடல்போல் இன்னொரு பாடல் இல்லாதபடி எப்படி இசையமைக்க முடிகிறது? - அதுதானே நான். எனது இசையுலகம் காற்றுடன் சம்பந்தப்பட்டது. உயிர்களோடும் வானோடும் சம்பந்தப்பட்டது. செவி என்பது என் இசையை உள்வாங்கும் ஒரு கருவி. அதற்குத் தெரியாது, நம்மைக் கடந்து செல்லும் இசை ஆன்மாவுக்குள் ஊடுருவிச் செல்வது என்று.
» கிரீஸ் அருகே கப்பல் கவிழ்ந்ததில் உயிரிழப்பு 79 ஆக உயர்வு
» ஜூன் 16, 1924 | டி.ஆர். மகாலிங்கம் நூற்றாண்டு: நினைவில் வாழும் கந்தர்வக் குரல்!
எனது இசை உயிர்களை வாழ்விப்பது. ஏழு சுரங்களுக்குள்தான் இருக்கிறது இசை என்று இந்தப் பிறவியில் நாம் கண்டுபிடித்திருக்கிறோம். ஆனால், அதைத் தாண்டி ஏதோ ஒன்றை எனது இசையில் இறைவன் புகுத்துகிறான். அதைப் புகுத்த நான் சரியான தெரிவு என்று கடவுள் நினைத்ததால் என்னிடம் நீங்கள் வியந்து நிற்கிறீர்கள்; அவ்வளவே!
உங்கள் இசையைக் காட்சி மொழியின் வழியாகக் கௌரவம் செய்த புத்தாயிரத்துக்குப் பிறகான இயக்குநர்கள் என்று யாரையெல்லாம் சொல்வீர்கள்? - அப்படி யாரையும் குறிப்பிட்டுச் சொல்வது அறமல்ல; இந்தக் கேள்வியைத் தவிர்த்துவிடலாம்.
‘சத்மா’, ‘மகாதேவ்’ என நீங்கள் இந்தியில் இசையமைத்த படங்கள் வெள்ளி விழா கண்டன. ஆனால், பாலிவுட்டில் தொடர்ந்து இசையமைக்கவில்லையே ஏன்? - என்னைப் பற்றி அங்கிருப்பவர்களுக்குப் பயம் இருக்கிறது. இவரை நம்மால் நெருங்க முடியவில்லையே என்கிற அகம் அவர்களுக்கு. அதனால், நிறைய கட்டுக்கதைகளைப் பரப்பி விட்டார்கள். அதைப் பற்றி நான் கவலைப் படவில்லை. அவர்களை நான் ‘இம்ப்ரெஸ்’ பண்ண வேண்டும் என்று ஏதுமில்லை. எனது பாடல்கள், மொழி கடந்து, இனம் கடந்து சென்று மக்களை ‘இம்ப்ரெஸ்’ செய்வது எனக்குப் போதும்.
இந்தி இசை மேதை நௌஷாத் அலி “காலம் தான் இளையராஜாவின் இசைச் சாதனையை மதிப்பிட முடியுமே தவிர, வேறு யாராலும் அல்ல; வெளிப்படையாகச் சொல்வதென்றால் இந்தப் பிறவி மேதையிடமிருந்து நான் கற்றுக்கொண்டது நிறைய” என்று உங்களைப் பாராட்டினார். இப்படிப்பட்டவர்களும் உங்கள் பாடல்களைக் கேட்டுப் பெற்றுப் பயன்படுத்திய இசையமைப்பாளர்களும் பாலிவுட்டில் இருக்கத்தானே செய்கிறார்கள்..
என் இசைக்குத்தான் எல்லாப் பெருமையுமே தவிர, தனி மனிதனாக இந்த இளையராஜாவுக்கு அல்ல. அவர்களைப் பொறுத்தவரை எனது இசையும் நானும் ஒன்று என்றே நினைத்துப் பாராட்டுகிறார்கள். உலகம் முழுவதிலும் அப்படியே நினைக்கிறார்கள். அது எனக்கு இறைவன் வழங்கிய அருட் கொடை.
நௌஷாத் அலி, என்னைக் குறித்து நிறைய விசாரித்துவிட்டுத்தான் என்னை அணுகி வந்தார். எத்தனையோ முறை சந்தித்திருக்கிறோம். ஒவ்வொரு முறையும் என்னை மிகவும் மரியாதையாக நடத்தினார். நான் சிறு வயது முதல் அவரது பாடல்களைக் கேட்டு ரசித்து, வளர்ந்தவன்.
உங்கள் மீது சொல்லெறிபவர்களை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்? - உலகை எந்தக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறோமோ அப்படித்தான் அது நமக்குப் புலப்படும். மனிதருக்கு மனிதர் இந்த conceptions மாறுபடுகிறது. ஒரு கம்யூனிஸ்ட், ‘உலகம் முழுவதும் ஏற்றத்தாழ்வு என்பதே இல்லாத ஒரே தேசமாக ஏன் இருக்கக் கூடாது’ என்று பார்ப்பார். ஒரு கவிஞன். ‘கடவுள் எவ்வளவு சிறந்த படைப்பாளி!’ என அவரது படைப்பில் இருக்கும் உன்னதங்களை எண்ணி வியந்துபோவார்.
இது மனதின் விசாலத்தன்மையை, தொலைநோக்குச் சிந்தனையை, கடவுள் தந்த படைப்பாற்றலைப் பொறுத்து மாறுபடுகிறது. ஆனால், எல்லாரிடமும் இதை எதிர்பார்க்க முடியாது. மனதால் குறுகிப் போன, இறுகிப் போனவர்கள் என் மீது குறை காண்பது அவர்களுடைய பார்வையின் கோளாறு. என் மீது குறை காண்பவர்களால் ஒருபோதும் என்னை மாற்ற முடியாது. அப்படிப்பட்டவர்கள்தான் என் மீது பந்தை அடிக்கிறார்கள். எத்தனை முறை வீசினாலும் நான் பந்தைத் தொடுவதில்லை. ஏனென்றால் நான் ‘மேட்ச்’ ஆடுபவன் அல்ல.
ஹங்கேரி இசைக்கலைஞர்கள் உடனான உங்கள் பந்தம் எப்படித் தொடங்கியது? - இசை வானத்தைத் தொட்டுக்கொண்டிருக்கும் கலை. இது சென்னையின் வானம், இது டெல்லியின் வானம், இது ஹங்கேரியின் வானம் என்று அது பார்ப்பதில்லை. எனக்கு எல்லா வானமும் ஒன்றுதான்.
மத்திய அரசு அளித்த மாநிலங்களவை எம்பி நியமனத்தை மக்களுக்காகப் பயன்படுத்த முடிகிறதா? - என்னையும் எனது இசை வாழ்க்கையையும் மத்திய அரசு மதித்திருப்பதன் அடையாளமே எம்.பி.பதவி. ‘நான் கட்சியில் சேர்ந்துவிட்டேன்’ என்று அதைத் தவறாகப் பிரச்சாரம் செய்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். எனது இசையின் ரசிகர்களாக இருக்கும் மக்களுக்குத் தெரியும், ‘ராஜா அரசியலுக்கு அப்பாற்பட்டவன்’ என்பது. எம்.பி. பதவியை மக்களுக்காகப் பயன்படுத்த முடிகிறதா என்று கேட்டீர்கள். அவையில் நான் பேசவிருக்கும் எனது முதல் உரையைக் கொடுத்திருக்கிறேன். அது வெளியாகும்போது இதற்கான பதில் கிடைக்கும்.
பிரதமர் நரேந்திர மோடி மீது நல்ல மதிப்பை வைத்துள்ள உங்களுக்கு, அவரது செயல்பாடுகளில் பிடித்தவை பற்றிக் குறிப்பிட முடியுமா? - இந்தியாவை உலக அரங்கில் முன்னிறுத்துவதையே தனது முதன்மை இலக்காகக் கொண்டு செயல்படுகிறார். இதற்கு முன்னர் இருந்த எந்தப் பிரதமரும் நம் நாட்டின் புகழையும் பெருமைகளையும் பண்பாட்டையும் உலகறியச் செய்தது இல்லை. இது ஒன்றுபோதுமே அவரது செயல்பாடுகளின் தொலைநோக்கைப் புரிந்துகொள்வதற்கு.
- ஆர்.ஷபிமுன்னா; ஆர்.சி.ஜெயந்தன்
| முந்தைய பகுதி > அன்னக்கிளி முதல் அமேசான் வரை - இளையராஜா நேர்காணல் |
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago