அன்னக்கிளி முதல் அமேசான் வரை - இளையராஜா நேர்காணல்

By செய்திப்பிரிவு

உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் மட்டுமல்ல; இசையால் இணைந்த இசைஞானி இளையராஜாவின் பன்மொழி ரசிகர்கள் அவரது எண்பதாவது பிறந்த நாளை பலவிதங்களில் கொண்டாடிக் களித்திருக்கிறார்கள். 5 முறை தேசிய விருது, 9 மொழிகளில் 1420 படங்களுக்கு 7300 பாடல்கள் என, கடந்த 46 ஆண்டுகளில் அவருடைய சாதனை பிரம்மாண்டமானது.

அவற்றில் ராஜா தனது சொந்தக் குரலில் பாடியவை மட்டுமே 400 பாடல்கள். ‘அன்னக்கிளி’யில் தொடங்கிய அவரது திரையிசைப் பயணம், அமேசான் ஓடிடி வரை நவீனத் தலைமுறைப் படைப்பாளிகளோடு இணைந்து ஒரு தீராத நதியாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அவரது இசைப்பணியை கௌரவம் செய்யும் விதமாக, நாடாளுமன்ற மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக ஆக்கியிருக்கிறது மத்திய அரசு. அரசியல் குறித்து உரையாட ராஜாவுக்கு அவ்வளவாக விருப்பம் இல்லாவிட்டாலும் இசை குறித்த கேள்விகளுக்கு உயிர்ப்பு மிக்க பதில்களைத் தந்தார்.. இந்து தமிழ் திசைக்காக இளையராஜா அளித்த பிரத்யேகப் பேட்டியிலிருந்து முதல் பகுதி:

நீங்கள் பார்த்து, கேட்டு வளர்ந்த முதல் பாடகி யார்? - அம்மாவைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்! எல்லாக் கிராமத்து அம்மாக்களிடமும் புழக்கத்தில் இருந்த தாலாட்டுப் பாடல்களைக் கேட்டே நானும் வளர்ந்தேன்.

மூன்றாம் வகுப்பு படிக்கும்போது ‘லைலா மஜ்னு’ படத்தின் இசை உங்கள் உள்ளம் தொட்டது குறித்துச் சொல்லியிருந்தீர்கள்.. அதுபற்றி நிறையப் பேசிவிட்டேன். அப்போது பண்ணைப்புரத்தில் பெருமாள் வாத்தியார் நடத்தி வந்த தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு 10 வயது. எனது அண்ணன் பாஸ்கரும் நானும் எங்கள் கிராமத்தின் டூரிங் தியேட்டருக்கு அடிக்கடிப் போய் படங்களைப் பார்ப்போம். அப்படித்தான் ‘லைலா மஜ்னு’ படத்தைப் பார்த்தோம்.

பானுமதியும் நாகேஸ்வர ராவும் நடித்திருந்தார்கள். படத்தின் பாடல்களுக் காகவே மீண்டும் மீண்டும் போய் பார்த்தோம். அந்தப் படத்துக்கு சி.ஆர்.சுப்பராமன் இசையமைத்தார் என்பதெல்லாம் அந்த வயதில் தெரியாது. ‘லைலா மஜ்னு’ படம் பார்த்த மறுநாள் பள்ளியில் ஆசிரியர் எழுதச் சொன்ன பாடத்துக்கு பதிலாக ‘லைலா’ என்று சிலேட்டில் எழுதிவிட்டேன். ஆசிரியர் துவைத்து எடுத்துவிட்டார்.

‘ஆதியந்தம் இல்லாத அருட்ஜோதியே’ என்கிற பாடலைப் பள்ளியில் மாணவர்கள் முன் பாடிய தருணம் நினைவில் இருக்கிறதா? - எப்படி மறப்பது? ‘கோம்பை’ நகரில் நடுநிலைப் பள்ளியில் படிக்கும்போது ‘மாநில மீதினிலே மாதா உந்தன் மலர்ப் பதமே பணிந்தோம்..’ என்று சரஸ்வதியைப் பற்றிய கடவுள் வாழ்த்துப் பாடலை ‘பிரேயர்’ அணிவகுப்பில் பாடுவேன். பிறகு உத்தமப்பாளையம் அருகில் உள்ள தேவாரம் என்கிற ஊருக்கு 2 மைல் தூரம் தினசரி நடந்துபோய் 9 வகுப்பில் சேர்ந்து படித்தேன்.

பள்ளியில் சேர்ந்து 3 மாதம் ஓடியிருந்தது. நான் நன்றாகப் பாடுவேன் என்பதை ஆசிரியர்கள் அறிந்துகொண்டார்கள். ஆனால், மாணவர்கள் யாரும் என்னுடன் பழக முன்வரவில்லை. நடுநிலைப் பள்ளியில் இருந்த கொண்டாட்டமும் குறும்பும் உயர்நிலைப் பள்ளியில் இல்லை.

அங்கே ‘ஆதியந்தமும் இல்லாத அருட்ஜோதியே’ பாடலை பிரேயர் அணிவகுப்பில் குருசாமி என்பர் பாடுவார். அன்றைக்கு அவருக்கு உடல்நலம் குன்றி, குரல் சரியில்லை. என்ன தோன்றியதோ “ராஜய்யா.. இன்னைக்கு நீ பிரேயர் சாங் பாடிடு” என்று என்னைக் கூப்பிட்டு நிறுத்திவிட்டார்.

அதுவரை இல்லாத வழக்கமாக ஒரு புதுப் பையனைக் கூப்பிட்டுப் பாடச் சொல்கிறார்களே என்று நான் பாடத் தொடங்கும் முன்னரே ‘பின் டிராப் சைலன்ஸ்’. பிரேயர் பாடல் பாடி முடித்ததும் சலசலப்புடன் மாணவர்கள் கலைந்து அவரவர் வகுப்புகளுக்குச் செல்வது வழக்கம்.

ஆனால், நான் பாடி முடித்தபோது அந்தச் சலசலப்பும் இல்லை.. எல்லா மாணவ, மாணவிகளும் ‘யார் இந்தப் பையன்?’ என்று என்னைக் கூர்ந்து பார்த்தபடி அமைதியாகச் சென்றார்கள். அதன்பிறகு என்னோடு எல்லோரும் மனம் விட்டுப் பழகினார்கள். கலையால் விளைந்த பயனைப் பள்ளிப் பருவத்திலேயே உணரத் தொடங்கிவிட்டேன்.

உங்களுடைய இப்போதைய குரல்தான் எல்லார் மனதிலும் பதிந்திருக்கிறது. இந்தக் குரல் சிறு வயது முதலே இருந்ததா? - இல்லை.. எல்லாரையும்போல்தான் எனக்கும் குரல் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. 13 வயதில் பெண் குரலில் இருந்தபோதுதான் அண்ணனுடன் மேடைகளில் பாடச் சென்றேன். திருவெறும்பூர் கம்யூனிஸ்ட் தொழிலாளர் மாநாட்டில் பாடுவதற்கு இரண்டு பாடல்களைச் சொல்லிக்கொடுத்து அண்ணன்கள் என்னை அழைத்துச் சென்றிருந்தார்கள். 50 ஆயிரம் தொழிலாளர்கள் கூடியிருந்த மக்கள் கடல் அது.

நான் பாடி முடித்ததும் ஐம்பதாயிரம் பேரும் கைதட்டிப் பாராட்டியது எனக்குப் புது அனுபவமாக இருந்தது. பாடலுக்கும் பாடிய எனது குரலுக்கும் கிடைத்த அங்கீகாரம் அது. அடுத்து வந்த வருடத்தில் பருவ மாற்றம் காரணமாக எனது குரல் உடைந்து அதிலிருந்த பெண் தன்மை போய்விட்டது. குரல் மாறிவிட்டது, ஜோடிப் பாடல் பாட இனி தோதுபட மாட்டான் என்று தெரிந்ததும் என்னை விட்டுவிட்டு அண்ணன்கள் கச்சேரிகளுக்குப் போகத் தொடங்கிவிட்டார்கள். இனி பாட வாய்ப்புக் கிடைக்காது என்று தெரிந்தபிறகுதான் நான் ஆர்மோனியம் வாசிக்கக் கற்றுக் கொண்டேன்.

ஊரில் இருக்கும்போதே நாடகங்களுக்கு இசையமைக்கத் தொடங்கிவிட்டீர்களா? - இல்லை. சென்னை வந்த பிறகுதான் அதிக நாடகங்களுக்கு இசையமைத்தேன். அதற்கு முன்னர், பாரதிராஜா தேனியில் ஒரு நாடகம் போட்டார். அதற்குத்தான் முதன் முதலில் இசையமைத்தேன்.

சென்னை வந்த பிறகு இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம் 150 படங்களுக்கு உதவியாளராகப் பணிபுரிந்திருக்கிறீர்கள்! இது எப்படிச் சாத்தியமானது? - எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். ஏனென்றால் 68 முதல் 74 வரை 6 ஆண்டுகள் அவரிடம் பணி புரிந்திருக்கிறேன். அவருக்கு வேலையில்லாத நேரங்களில் சலில் சௌத்ரி, கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி., மலையாளத்தில் தேவராஜன், உமர் உட்படப் பல இசையமைப்பாளர்களுக்கு வேலை செய்திருக்கிறேன்.

காம்போ ஆர்ஹன், கிட்டார் என இவர்கள் அனைவருக்கும் இன்ஸ்ட்ருமெண்ட்டும் வாசித்திருக்கிறேன். ஒரே வருடத்தில் தேவராஜன் மாஸ்டருக்கு 53 படங்களுக்கு வாசித்திருக்கிறேன். சதா அண்ணன் இதையறிந்து “வருடத்துக்கு 52 வாரம் தானய்யா இருக்குது!” என்று ஆச்சர்யப்பட்டார். நான் இசையமைப்பாளர் ஆனபிறகு ஒரே வருடத்தில் 57 படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். இசையை வாசிப்பதும் இசையை பிரசவிப்பதும் மன அழுத்தம் தருவதல்ல; மனதை இலகுவாக்குவது.

‘அன்னக்கிளி’ படத்துக்கு பாடல் பதிவு செய்யப்பட்டபோது மின் தடை ஏற்பட்டது உண்மைதான் என்று கூறியிருக்கிறீர்கள். அப்போது உங்கள் உணர்வுநிலை எப்படிப்பட்டதாக இருந்தது? - அப்போது நான் வெற்றிபெற்ற இளைய ராஜா கிடையாதே..! அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை ஒரு சாமானியன் சந்தித்தால் என்ன உணர்வை எதிர்கொள்வானோ அதையேதான் நானும் எதிர்கொண்டேன்.

இன்றைக்கு இசைக்குள் தொழில்நுட்பம் அதிகமாக ஆதிக்கம் செலுத்துகிறது. குறிப்பாக ‘ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ்’ இசைத் துறைக்குள் நுழைவதை எப்படிப் பார்க்கிறீர்கள்? - அதை நான் எதற்குப் பார்க்க வேண்டும்? நான் பார்க்க வேண்டும் என்று நீங்கள் ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? இது கோபத்தில் பேசுவதல்ல; நான் நானாகத்தான் இருக்க முடியும். மனிதன் என்றாலும் பிற உயிர்கள் என்றாலும் ஒவ்வொன்றும் ஒரு தனித்தன்மையுடன் இறைவனால் படைக்கப்பட்டவை. அவை இயற்கைக்கு முரணாக மாறும்போது, இறைவன் வரமாக வழங்கிய தனித் தன்மையை இழந்து விடுகின்றன. இசையும் அப்படித்தான்.

டெக்னாலஜி என்பது டெக்னிக் என்கிற புகுத்தப்பட்ட உத்தியை உள்ளே வைத்திருக்கிறது. ‘டெக்னிக்’கை வைத்துக்கொண்டு இசையைப் பிரசவிக்க முடியாது. இசை என்பது இசைதான். அதைப் படைக்கத்தான் முடியும், அதைப் படைப்பதும் பாடுவதும், இசைப்பதும் கலைஞனின் கற்பனையிலிருந்து இயற்கையாகப் பிரசவிக்கப்படுவது. அதை உத்தி வழியே உற்பத்தி செய்ய முடியாது. அப்படிச் செய்தால் அது இசையல்ல.

- ஆர்.ஷபிமுன்னா, ஆர்.சி.ஜெயந்தன்

? இசையும் மொழியும் இணையும்போது தான் இசையின் ஆயுள் கூடுகிறதா?

? உங்கள் மீது சொல்லெறிபவர்களை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

? ஒரு பாடல்போல் இன்னொன்று இல்லாமல் இருக்கும் மாயத்தை எப்படி உங்களால் செய்ய முடிகிறது?

? ‘சத்மா’, ‘மகாதேவ்’ என நீங்கள் இந்தியில் இசையமைத்த படங்கள் வெள்ளி விழா கண்டன. ஆனால் அங்கே தொடர்ந்து இசையமைக்கவில்லையே ஏன்?

? மத்திய அரசு அளித்த மக்களவை எம்பி நியமனத்தை மக்களுக்காகப் பயன்படுத்த முடிகிறதா?

? பிரதமர் நரேந்திர மோடி மீது நல்மதிப்பை வைத்துள்ள உங்களுக்கு அவரது செயல்பாடுகளில் பிடித்தவை பற்றிக் குறிப்பிட முடியுமா?

இளையராஜாவின் பதில்கள்
அடுத்த வாரமும் தொடரும்..

- ஆர்.ஷபிமுன்னா; ஆர்.சி.ஜெயந்தன்

படங்கள்: பு.க.பிரவீன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்