இயக்குநரின் குரல்: இது காவலர்களின் உலகம் - ‘தீரன் அதிகாரம் ஒன்று’ இயக்குநர் வினோத்

By கா.இசக்கி முத்து

“‘சதுரங்க வேட்டை'க்குப் பிறகு சில படங்கள் பேச்சுவார்த்தையிலே இருந்தன. ஒரு நாள் தயாரிப்பாளர் பிரகாஷ்பாபு அழைத்து, 'கதையிருந்தால் சொல்லுங்கள்' என்று கேட்டவுடன் மூன்று கதைகள் சொன்னேன். அப்போது 'தீரன் அதிகாரம் ஒன்று' கதையைப் படமாக்கலாம்” என்றார். அப்படித் தொடங்கப்பட்ட படம், இன்று மனதுக்கு நெருக்கமான படமாக வந்திருக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் பேசத் தொடங்கினார் இயக்குநர் வினோத்.

'தீரன் அதிகாரம் ஒன்று' கதையின் புள்ளி எங்கிருந்து தொடங்கியது?

2005-ம் ஆண்டு ஒரு செய்தியைப் பல்வேறு நாளிதழ்களில் தொடர்ச்சியாக வாசித்தேன். அனைத்திலுமே ஒரு குழப்பமான செய்தியாக அது இருந்தது. நம் ஊரில் இப்படியொரு விஷயமா என்று அச்செய்தியை வைத்துக் கதையொன்றை எழுதினேன். சாலை வழியில் நடைபெறும் முழுமையான ஆக்‌ஷன் கதை. ஒரு கட்டத்தில் அந்தக் கதையை மறந்துவிட்டேன்.

'சதுரங்க வேட்டை' படத்துக்குப் பிறகு ஒரு நாள் கடையில் சிற்றுண்டி பார்சல் வாங்கி வந்தேன். பார்சல் கட்டிய பேப்பரைத் தூக்கிப்போடும்போது, அதில் எந்தச் செய்தியை வைத்து முன்பு கதை எழுதினேனோ, அதே செய்தி மீண்டும் வந்திருந்தது. அதன் பிறகு அந்தச் செய்தியின் பின்னால் உள்ள வழக்கை போலீஸ் அதிகாரிகள் மூலம் முழுமையாக அறிந்தேன். பல அதிகாரிகளிடம் பேசும்போது நிறைய புதுப்புது விஷயங்கள் கிடைத்தன. இதைப் படமாக்க நிறைய செலவாகுமே என்ற யோசனையும் இருந்தது. ஒரு முன்னணி நாயகனை வைத்து இந்தப் படத்தைச் செய்தால் மட்டுமே ‘பெப்’பான படமாக வரும் என்று முடிவு செய்தேன். கார்த்தியிடம் கதையை முழுமையாகச் சொன்னவுடன் “இக்கதை எனக்கு ஏற்கெனவே தெரியுமே, ‘சிறுத்தை' படத்துக்காகக் காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்த போது, இக்கதையை என்னிடம் கூறியிருக்கிறார்களே” என்று சொல்லி அதிர்ச்சியளித்தார்.

‘சிறுத்தை'யில் கார்த்தி காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். இதில் என்ன கதாபாத்திரம்?

‘சிறுத்தை’ ஒரு கற்பனை கதை. இப்படத்தில் ஒரு நிஜமான காவல்துறை அதிகாரி எப்படியிருப்பாரோ அப்படியிருப்பார். நாயகனின் காவல்துறை வாழ்க்கையில் காதல் அத்தியாயம், பணி அத்தியாயம் உள்ளிட்ட பலவற்றைக் காட்டியிருக்கிறோம். இப்படிப் பல அத்தியாயங்கள் சேர்ந்ததுதான் 'தீரன் அதிகாரம் ஒன்று'.

அப்படியென்றால் இதன் 2, 3-ம் பாகங்கள் சாத்தியமா?

அதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இது தொடர் பாகங்கள் செய்யக்கூடிய கதைதான். மக்களுக்கு இம்மாதிரியான படங்கள் பிடிக்கிறதா, எப்படி ரசிக்கிறார்கள் என்பதைப் பொருத்து 2-ம் பாகம் அமையலாம்.

டீசர், ட்ரெய்லரைப் பார்க்கும்போது கார்த்தியை மணலுக்குப் புதைந்து வைத்தெல்லாம் படமாக்கி இருக்கிறீர்களே?

இயக்குநர் எழுதிய கதைக்கு என்ன செய்யச் சொன்னாலும் கடினமாக உழைத்துச் செய்துவிடுபவர் கார்த்தி. மழை, வெயில், சேறு, மண் எனப் படத்தில் புரண்டிருக்கிறார். மண்ணில் புதைய சொன்னால் பலரும் யோசிப்பார்கள். சும்மா புதைந்து வெளியே வருவது கிடையாது. ஒன்றரை நிமிடம் உள்ளே இருக்க வேண்டும். டீசர் மற்றும் ட்ரெய்லரில் வரும் காட்சி சுமார் 45 விநாடிகள் வரக்கூடிய காட்சி. கேமரா அவர் இருக்கும் இடத்துக்குப் போகிற வரைக்கும் மணலுக்குள் இருக்க வேண்டும். அவர் மட்டுமன்றி அவரோடு 13 பேர் மணலுக்குப் புதைந்து நடித்தார்கள். வறண்ட காற்று, கடுமையான வெயிலுக்கு மத்தியில் எந்ததொரு முன்னெச்சரிக்கையும் இன்றி, பள்ளம் வெட்டி, மணலை உள்ளே கொட்டி எடுத்தோம். சின்ன முகச்சுளிப்புகூட இல்லாமல் சிரித்துக் கொண்டே நடித்துக் கொடுத்தார்.

காவல்துறையைப் பற்றி பல விமர்சனங்கள் நிலவிவரும் நிலையில் இதில் நீங்கள் கூறியிருப்பது என்ன?

காவல்துறையினர் ஒன்றும் சூப்பர்மேன்கள் அல்ல. அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், வழக்கை எடுத்தால் அதற்குப் பின்னால் இருக்கும் கஷ்டங்கள் பற்றியெல்லாம் படத்தில் பேசியிருக்கிறேன். அவர்கள் குடும்பத்துக்காக நேரம் செலவழிக்க முடியாது. குழந்தைகளைப் பார்க்க முடியாது. அவர்களுக்கு யூனியனோ, வரையறுக்கப்பட்ட பணி நேரமோ கிடையாது. அவர்களுடைய பணியில் இருக்கும் பிரச்சினைகளை இப்படம் முழுமையாக அலசி ஆராயும். காவல்துறைப் பணி என்பது உண்மையிலேயே கடினமானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்