த
மிழ் சினிமாவிலும் திரைக்கதை உண்டு, அதற்கு இணையான பிரம்மாண்டம் உண்டு என்பதை உலகத்துக்கு உரக்கச் சொன்ன முதல் படம் வாசன் இயக்கித் தயாரித்த ‘சந்திரலேகா’. ஆம்! ‘சந்திரலேகா’ படத்தின் கால அளவைக் குறைத்து, அதன் ஆங்கில மொழியாக்கப் பதிப்பை, அமெரிக்கா, ஜப்பான், பல ஸ்காண்டிநேவியன் நாடுகள் எனத் துணிந்து திரையிட்டு, தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்த்தார் வாசன். அப்படிப்பட்ட பிரம்மாண்டக் காவியத்தின் கதாநாயகியாக வாசனால் முதலில் தேர்வு செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டவர் கே.எல்.வி.வசந்தா.
ஜெமினியின் தயாரிப்பான ‘நந்தனார்’(1942) படத்தின் பாட்டுப் புத்தகத்தின் உள் அட்டையில் ‘சந்திரலேகாவாக ‘கானமயில்’ கே.எல்.வி.வசந்தா நடிக்கிறார்’ என்று விளம்பரமே வெளியிட்டிருந்தது ஜெமினி. வசந்தா, ஜெமினியின் முதல் தயாரிப்பான ‘மதன காமராஜன்’ படத்தின் அன்றைய வசீகரக் கதாநாயகி. ஆறுமாதங்கள் ஓடோ ஓடென்று ஓடி ஜெமினியை ராசியான சினிமா சாம்ராஜ்ஜியம் என்று கூறவைத்த படம். அப்படிப்பட்ட ‘மதன காமராஜன்’ நாயகி வசந்தாவை, வாசன் சந்திரலேகாவாக அறிமுப்படுத்த விரும்பியதில் ஆச்சரியமில்லை.
கானக் குயிலாக பாடும் திறமை, அதிவேகமாகப் பரதம் ஆடுவதிலும் திறமை, கண்களால் நடிக்கத் தெரிந்த தமிழ்க் காரிகை எனப் பல தகுதிகள் கொண்ட வசந்தாவுக்குப் பதிலாக டி.ஆர்.ராஜகுமாரியை வாசன் ஏன் அமர்த்திக்கொண்டார்?
சென்னையைக் காலிசெய்த வசந்தா
அங்கேதான் சிக்கல். ஒரு வெற்றிப் படத்தின் கதாநாயகி, அதே நிறுவனத்தின் அடுத்த வாய்ப்புக்காக வருடக்கணக்கில் காத்துக்கொண்டிருக்க முடியுமா? இருந்தும் பொறுமை காத்தார் வசந்தா. ‘மதன காமராஜன்’ படத்துக்குப் பின்னர் ‘நந்தனார்’, ‘பால நாகம்மா’, ‘மங்கம்மா சபதம்’ என மூன்று வெற்றிப் படங்களை அடுத்தடுத்து தயாரித்த வாசன், ‘சந்திரலேகா’வின் கதையை உருவாக்கும் பொறுப்பைத் தனது கதை இலாகாவிடம் ஒப்படைத்திருந்தார்.
கதை தயாராகி முடிந்தபோது அதுகோரி நின்ற பிரம்மாண்டம், அதன் மையக் கதாபாத்திரமான சந்திரலேகாவுக்குத் தேவைப்படும் அப்சரஸ் தோற்றம் ஆகியவற்றுக்கு வசந்தா பொருத்தமாக இருக்க மாட்டார் என்று முடிவுசெய்த வாசன், தனது கதாநாயகியாக டி.ஆர்.ராஜகுமாரியைத் தேர்வு செய்தார். இது தெரிந்ததும் காத்திருந்த வசந்தாவுக்கு வருத்தமாகிவிட்டது. அது வளர்ந்து சொந்த ஊரான சென்னையை விட்டே கிளம்பும் வைராக்கியத்தை வசந்தாவுக்குக் கொடுத்துவிட்டது.
கோபத்தில் சேலத்துக்குக் குடிபெயர்ந்த வசந்தா, மாடர்ன் தியேட்டர்ஸின் ‘கம்பெனி நடிகராக’ தன்னை இணைத்துக்கொண்டார். அதன் பிறகு மாடர்ன் தியேட்டர் அதிபர் டி.ஆர். சுந்தரம் தயாரிக்க, தமிழ் தெரியாத எம்.எல்.டாண்டன் இயக்கிய ‘ராஜ ராஜேஸ்வரி’யில் (1944) கதாநாயகியாக நடித்தார். பிலிம் ரோல் தட்டுப்பாடுகளால் சிக்கித் தவித்த சுந்தரம் போன்ற பெரிய சினிமா முதலாளிகள், பிரிட்டிஷ் சர்க்காரை ஆதரித்து யுத்தப் பிரச்சாரப் படங்களை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள். அப்படி டி.ஆர்.சுந்தரம் தயாரித்து இயக்கிய படம்தாம் ‘பர்மா ராணி’(1945). வசந்தாதான் பர்மா ராணி.
அதில் ஜப்பானிய ராணுவத் தளபதியாக டி.ஆர்.எஸ்ஸே நடித்து அசத்தினார். படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு மார்டர்ன் தியேட்டர் தயாரித்த புராணப் படம் ‘சுபத்ரா’வில் நடித்தார். அன்றைய வில்லன் நடிகரான டி.எஸ். பாலையா நாயகனாக நடிக்க அடுத்து தயாரான படம் ‘சித்ரா’. அதில் ‘டைட்டில்’ ரோலில் நடித்தார் வசந்தா. இதுவும் இரண்டாம் உலகப் போர் பின்னணியில் உருவான படம்தான்.
இதன் பிறகு மாடர்ன் தியேட்டர்ஸின் ‘சுலோச்சனா’ 1946-ல் வெளியானது. இதிலும் வசந்தாவுக்கு டைட்டில் ரோல்தான். வசந்தாவுடன் கதாநாயகனாக இந்திரஜித் வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்த பி.யூ.சின்னப்பா, டி.ஆர்.எஸுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் படப்பிடிப்புக்கு வராமல் டிமிக்கி கொடுத்தார். சின்னப்பாவுக்கு கல்தா கொடுத்துவிட்டு கண்டிப்புக்குப் பெயர்போன சுந்தரமே இந்திரஜித்தாக நடித்தார். ‘புரட்சிக்கவி’ பாரதிதாசன் வசனம் எழுதிய ‘சுலோச்சனா’ சுமாரான வெற்றியையே பெறமுடிந்தது. இதற்கிடையில் கோவை செண்ட்ரல் ஸ்டூடியோ தயாரித்த ‘சாலி வாஹனன்’படத்தில் கதாநாயகன் ரஞ்சனின் சகோதரியாக நடித்தார். இதில் எம்.ஜி.ஆருக்கு(ராமச்சந்தர்) வில்லன் வேடம்.
30-களில் தொடங்கி...
1923-ம் ஆண்டு குன்றத்தூரில் பிறந்த கே.எல்.வி.வசந்தா, சிறு வயது முதலே வாய்ப்பாட்டு, நடனம் ஆகிய கலைகளைக் கற்றுத் தேர்ந்தார். தனது வேடங்களுக்கான பாடல்களைப் பாடி, அற்புதமாக நடனமாடி ஒல்லியான உடல்வாகுடன் ரசிகர்களைக் கவர்ந்தவர். ‘மதன காமராஜன்’ படத்தில் ‘ ஒரு நாளும் உமைப் பிரியவிடேன்’ என்று தேன் சொட்டும் குரலில் பாடியபடி ‘பிரேமவள்ளி’யாக அன்றைய ரசிகர்களைக் கிறங்கடித்த நடிப்பை வழங்கியவர்.
‘மதன காமராஜன்’ படத்தில் இடம்பெற்ற ‘ரதி- மன்மதன்’ நாட்டிய நாடகத்தில் வசந்தாவின் எழில்மிகு பரத நாட்டியம் இன்றும் பேசப்படுகிறது. எம்.கே.டி. நடிக்க, கே.சுப்ரமணியம் இயக்கிய ‘பவளக்கொடி’(1934) படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, 1939-ல் வெளியாகி 25 வாரங்கள் ஓடிய ‘ரம்பையின் காதல்’ படத்தின் கதாநாயகியாகப் புகழ்பெற்றார். கே.எல்.வி.வசந்தா நடித்த படங்களின் எண்ணிக்கை 17 மட்டும்தான். பாடல், ஆடல், நடிப்பு ஆகிய திறமைகளில் தனித்து விளங்கிய கே.எல்.வி.வசந்தா, சென்னை திரும்பி அமைதியான வாழ்க்கை வாழ்ந்தார். தனது 85-ம் வயதில் மறைந்தார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago