ஆதலால், நட்பு கொள்வீர்!

By முகமது ஹுசைன்

நம் சமூகத்தின் அனைத்துவித மதிப்பீடுகளுக்கும் தேவைகளுக்கும் அப்பாற்பட்டது நட்பு. இருப்பினும், காதல் கொண்டாடப்படும் அளவுக்கு நட்பு கொண்டாடப்படவில்லை. எதிர்பார்ப்பு எதுவும் அற்ற நட்பைவிட உன்னதமானது எதுவும் இல்லை.

எனக்கு முதல் நட்பு கிடைத்தபோது, மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். அவன் பெயர் உமர் ஷெரிஃப். யாரிடமும் அதிகம் பேசமாட்டான். எப்போதாவது என்னைப் பார்க்க நேர்ந்தால், அரிதாகப் புன்னகை புரிவான். இந்தப் புன்னகையே அவனுக்கும் எனக்குமான நட்புக்கான சான்று.

அந்தக் காலகட்டத்தில் எனக்குப் பேசுவதில் தடுமாற்றம் தொடங்கியது. உடன் படிக்கும் மாணவர்கள் எனது பேச்சைக் கேலிசெய்தபோது, அதைச் சிரித்தபடியே கடந்துவிடுவேன். ஒருநாள், உடன் படித்த ஒருவன் என்னைக் கிண்டல் செய்தபோது, நானும் உடன் சேர்ந்து சிரிக்க முயன்றேன். ஆனால், நான் சற்றும் எதிர்பார்க்காத வகையில், அங்கே உமர் பெரும் கோபத்துடன் வந்தான். கிண்டல் செய்த மாணவனிடம் சண்டையிட்டான். வாய்ச்சண்டை கைகலப்பானது. சட்டை பொத்தான்களும் அறுந்துவிழுந்தன. அவன் உதட்டோரம் வழிந்த ரத்தம் துளித்துளியாய் என் நினைவில் சேகரமாகியுள்ளது.

எனக்காக அவன் சண்டையிட்டது பெருமிதமாக இருந்தது. எனது குடும்பத்துக்கு வெளியே முதன்முறையாக அன்பையும் பாதுகாப்பையும் உணர்ந்த தருணம் அது. அதற்குப் பின்னரும் நாங்கள் பெரிதாகப் பேசிக்கொண்டது இல்லை. பார்க்கும்போது புன்னகைப்பான், அவ்வளவுதான். ஆனால், தினமும் வகுப்புக்குள் நுழைந்தவுடன் கண்கள் தாமாக அவன் இருக்கையைத் தேடும். அவன் இருந்தால் ஒருவித மகிழ்ச்சியில் மனம் திளைக்கும். ஒருவேளை வரவில்லை என்றால், மனம் வாடிவிடும். அரையாண்டு விடுமுறை முடிந்து, பள்ளிக்குச் சென்றபோது அவனது இருக்கை மட்டுமே இருந்தது. எனக்குக் கிடைத்த முதல் நட்பு மட்டுமல்ல; முதல் பிரிவும் அவனுடையதே. இன்றும், காலியான சில இருக்கைகள், உமரை ஞாபகப்படுத்தும்; மனத்தில் வெறுமை நிரம்பும்.

மேல்நிலைப் பள்ளியில் படித்தபோது, இரண்டு நண்பர்கள் எனக்குக் கிடைத்தனர். அதில் ஒருவர் இன்றும் எனது நெருக்கமான நண்பர். இன்னொரு நண்பர் ஜான்பிரிட்டோ. கமலின் தீவிர ரசிகன் அவன். கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் வகுப்பில் ஒன்றாக அமர்ந்திருந்தோம். என்னிடம் பேசிக்கொண்டே இருப்பான்; கதைகள் சொல்வான்; எனக்காக சீனியர்களிடம் கூடச் சண்டைக்குச் சென்றிருக்கிறான். ஏழு நாள்களும் பள்ளி இருக்கக் கூடாதா என அவனுடைய நட்பு ஏங்கவைத்திருக்கிறது. திடீரென்று ஒருநாள் அவன் பள்ளியிலிருந்து நின்றுவிட்டான். அவனுக்கு என்ன ஆனது? தெரியவில்லை. 'டிசி' வாங்கி சென்றுவிட்டதாகத் தெரிந்தது. சிறிது சிறிதாக எனது அன்றாட வாழ்க்கையிலிருந்து மறைந்துவிட்டான். இருந்தாலும், முகநூலில் அவன் பெயரை இன்றும் தேடுகிறேன்.

கல்லூரிக் காலகட்டத்தில் எனக்குக் கிடைத்த ஐந்து நண்பர்கள் இன்று எனக்கு மட்டுமல்லாமல்; என் குடும்பத்துக்கும் எல்லாமுமாக இருக்கிறார்கள். ஃபைவ் ஸ்டார் திரைப்படம் வரும் முன்னரே, ஒரே வீட்டில் அனைவரும் வாழ வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் நாங்கள். கல்லூரி முடிந்த பின்னர், பெரிய துயரச் சுழலில் அகப்பட்டு, திக்குத் தெரியாமல் மனம் திண்டாடியபோது, என்னை அரவணைத்துக் காப்பாற்றியவர்கள் அவர்களே. எங்களுக்கு இடையே வேலிகளோ இடைவெளிகளோ ஒப்பனைகளோ இருந்ததில்லை. அந்த நிலை இன்றும் தொடர்கிறது.

அறிந்தவர், தெரிந்தவர், அருகில் வசிப்பவர், உடன் பணிபுரிபவர் என அனைவரையும் நட்பு எனும் பொது அடைப்புக்குறிக்குள் சுருக்குவதால், நட்பு என்பதன் இலக்கணமே இன்று நீர்த்துப்போய்விட்டது. கல்லூரி நட்புக்குப் பின்னர் எளிதில் எவரையும் நண்பராகக் கருதுவதில்லை. ஒப்பனையற்ற நட்பு பலரை விலக்கியுள்ளது; சிலரை நெருக்கமாக்கியிருக்கிறது.

இன்றைய நடைமுறை வாழ்க்கையில் உண்மையான நட்பு பலருக்குச் சாத்தியமற்றதாகவே இருக்கிறது. விதிவிலக்காகச் சிலருக்கு மட்டும், உண்மையான நட்பு கிடைத்துவிடுகிறது; அத்தகைய நட்பு வரம்தான்.

நட்பு நாளை ஒட்டி நண்பர்கள் வாழ்த்து அட்டைகளைப் பரிமாறிக்கொள்ளும் வழக்கம் இன்றும் நிலவுகிறது. நட்பு நாள் உருவானதற்கும் வாழ்த்து அட்டைக்கும் தொடர்புள்ளது. நட்புக்கென்று ஒரு நாளை ஒதுக்க வேண்டும் என்னும் கோரிக்கையை 1930இல் முன்வைத்தவர் ஜாய்ஸ் ஹால்மார்க் என்னும் அமெரிக்க தொழிலதிபர். இவர்தான் ஹால்மார்க் கார்ட்ஸ் என்னும் வாழ்த்தட்டை விற்பனை நிறுவனத்தின் உரிமையாளர். ஆகஸ்ட் 2ஐ அவர் நட்பு நாளுக்காகத் தேர்ந்தெடுத்திருந்தார். இவருடைய கோரிக்கை தொடக்கத்தில் வணிகம் நலன் சார்ந்ததாகவே பார்க்கப்பட்டது. 1958இல் பராகுவேவைச் சேர்ந்த உளவியல் மருத்துவர் ரமோன் அர்டீமியோ பிராச்சோவின் பரிந்துரையின் அடிப்படையில் சர்வதேச நட்பு நாள் கொண்டாடப்பட்டது. 1997இல் சர்வதேச நட்பு நாள் கொண்டாடப்படுவதற்கான பரிந்துரையை யுனெஸ்கோ அமைப்பு முன்வைத்தது. நாடுகளுக்கிடையிலான மோதல்களைத் தணிக்கவும் வன்முறையைத் தடுக்கவும் நட்பை வளர்த்தெடுப்பது அவசியம் என்றது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 30 அன்று சர்வதேச நட்பு நாள் கொண்டாடப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் பொது அவை அறிவித்தது. அதே நேரம் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நட்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE