அந்தி வானில் பிஎஸ்எல்வி இட்ட அழகிய கோலங்கள்

By ஆதி வள்ளியப்பன்

சமீப நாட்களாக சென்னையின் வானிலை சட்டென்று மாறுகிறது. பகலில் வெயில் அடித்தாலும், இரவில் மழை பெய்கிறது. வெக்கை தணிந்ததே என ஆசுவாசம் கொள்வதற்குள்ளாக, அடுத்த நாள் வெயில் காய்ச்சி எடுத்துவிடுகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் சூரியன் மறைவதற்கு முன்னதாக வானை எட்டிப் பார்த்தவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. லேசர் விளக்குகளால் ஏதோ ஒளிக்கோலம் போட்டது போன்ற ஒரு தோற்றம் வடமேற்கு வானில் தென்பட்டது. திடீரென இந்தத் தோற்றம் உருவானது எப்படி?

நேற்று மாலை பிஎஸ்எல்வி ஏவுகலம் ஏவப்பட்டது குறித்து அறியாதவர்களுக்கு இந்தத் தோற்றம் புதிராகத் தோன்றியிருக்கலாம். பிஎஸ்எல்வி ஏவுகலம் ஏவப்பட்டதற்கும் இதற்கும் நேரடித் தொடர்பிருக்கிறது.

வானில் தோன்றிய ஒளிக்கோலம்

சிங்கப்பூரின் செயற்கைக்கோள்கள் உட்பட 3 செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-53 ஏவுகலம் மூலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வியாழக்கிழமை ஏவியது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து மாலை 6.02 மணிக்கு இந்த ஏவுகலம் விண்ணில் ஏவப்பட்டது. அடுத்த 19வது நிமிடத்தில் அந்த செயற்கைக்கோள்கள் நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.

பிஎஸ்எல்வி ஏவுகலம் ஏவப்பட்டதை ஆவலாகப் பார்த்தவர்கள் எல்லோருமே சென்னையின் வடமேற்கு வானில் தோன்றிய இந்த ஒளிக்கோலத்தைப் பார்த்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அதே நேரம் வானில் தோன்றிய இந்த ஒளிக்கோலம் ஆச்சரியத்தையும், அது எப்படி ஏற்பட்டது என்கிற கேள்வியையும் சேர்த்தே எழுப்பியிருக்கும்.

எப்படி உருவாகிறது?

உயரமான வளிமண்டல அடுக்கில் வெப்பநிலை குளிராக இருக்கும். வழக்கத்தைவிட உயரமான அப்பகுதியில் பறந்துசெல்லும் சிறு விமானங்கள் வெளியிடும் நீராவி, தூசு போன்றவை வெள்ளைக் கோடு போன்ற புகைக்கீற்றை உருவாக்கும். நேரம் செல்லச்செல்ல அந்தப் புகைக்கோடு காற்றோடு கலந்து மறைந்துவிட்டிருக்கும்.

செயற்கைக்கோள் ஏவுகலங்களும் இதேபோல் நீராவி, தூசி அடங்கிய புகையை வெளியிடுகின்றன. ஒரு ஏவுகலம் விண்ணில் பாயும்போது முழுமையாக எரியாத எரிபொருள் துகள்கள், நீராவி போன்றவை புகையாக வெளியேறி முதலில் சுருங்கும், உறையும், பிறகு விரிந்து மேல் வளிமண்டல அடுக்குக்குச் செல்லும். விமானங்களுக்கு மாறாக, ஏவுகலங்கள் ஸ்டிராட்டோஸ்பியர், மீசோஸ்பியர் போன்ற வளிமண்டல அடுக்குகளுக்கும் செல்கின்றன. செயற்கைக்கோள் ஏவுகலங்கள் அதிகாலையிலோ அந்தி மாலையிலோ ஏவப்படும்போது மேற்கண்ட வான் ஒளிக்கோலங்களைப் பார்க்க முடியும்.

பொதுவாக அதிகாலையிலும் அந்தி மாலையிலும் சூரிய ஒளி பூமியை முழுமையாக வந்தடைந்து இருக்காது. ஆனால், உச்சி வானைச் சூரியன் ஒளி வந்தடைந்திருக்கும் (காரணம், பூமி ஒரு கோளமாக இருப்பதால்தான்). இந்தப் பின்னணியிலேயே வானில் மாறுபட்ட ஒளிக்கோலங்கள் தோன்றுகின்றன.

அந்தி ஒளித்தோற்றம்

ஏவுகலங்களின் புகையில் உள்ள துகள்கள் ஒருபுறம் விரிவடையத் தொடங்கும்போது, அப்பகுதியிலுள்ள காற்றும் அந்தத் துகள் கூட்டத்தை நகர்த்தவும் விரிவடையவும் வைக்கும். இந்த நேரத்தில் சூரிய ஒளி அவற்றின் மீது சாய்வாகப் பாடுவதால் இந்த அழகிய ஒளிக்கோலங்கள் உருவாகின்றன. இதற்கு அந்தி ஒளித்தோற்றம் (Twilight phenomenon) என்று பெயர். ஏற்கெனவே அமெரிக்காவில் 2022 ஏப்ரல், 2017 டிசம்பர் ஆகிய மாதங்களில் இதேபோல் ஏவுகலங்கள் செலுத்தப்பட்டபோது அந்தி ஒளித்தோற்றங்கள் உருவானது பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

இயற்கை புதுப்புது ஆச்சரியங்களையும் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய நடைமுறைகளையும் கொண்டிருக்கிறது. அந்த அழகைக் குழந்தைகளைப் போல வாய் பிளந்து ரசிப்பதுடன், அறிவியலின் துணையுடன் அவற்றைப் புரிந்துகொள்ளவும் முயல்வோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்