நீரும் மீனுமாய் சீனமும் தமிழும்!

By செய்திப்பிரிவு

சீனாவும் இந்தியாவும் தொன்மையான நாகரிகங்கள் கொண்ட இருபெரும் தேசங்கள். இவ்விரு நாடுகளுக்கிடையே ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவரும் பண்பாட்டுப் பரிமாற்றம் இன்றும் தொடர்கிறது. இதில், சீன - தமிழ் தொடர்பு குறிப்பாக, இவ்விரு மொழிகள் சார்ந்து நடைபெற்றுவரும் மொழிபெயர்ப்புப் பணிகள் குறிப்பிடத்தக்கவை.

சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் தமிழ் இலக்கியம்

'எல்லாப் பொருளும் இதன்பால் உள' என்று மதுரைத் தமிழ் நாயனாரால் புகழப்பட்ட திருக்குறளே தமிழிலிருந்து சீனத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட முதல் இலக்கியப் படைப்பு. 1967ஆம் ஆண்டில், ச்செங் சியோங் என்பவர் இம்மொழிபெயர்ப்புப் பணியை மேற்கொண்டார். நெறிமுறை, அறநெறி முதலிய குணங்களோடு எழுதப்பட்ட பிரபலமான இந்திய இலக்கியமான திருக்குறள் கூலாட்சென்யன் (Gula zhenyan) என்னும் சீனப் பெயர் பெற்று சீன -தமிழ் இலக்கியத்திற்கான பரிமாற்றக் கதவைத் திறந்தது.

அதன்பின், சீனக் கவிஞரான ட்சாங் சிலின் ((Zhang Xilin) திருக்குறள் குறித்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டார். திருவள்ளுவர் மற்றும் சீனத்தின் பெரும் சிந்தனையாளரான கன்பூசியஸ் இருவரையும் ஒப்பிட்டு, அவர் தம் படைப்புகளுக்குள் இருந்த ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் சுட்டிக்காட்டினார். இத்தகைய ஒப்பீட்டு ஆய்வானது, இரு நாடுகளின் சிந்தனை வளர்ச்சி குறித்த புரிதலை மேம்படுத்த உதவியது. இதுபோன்ற முயற்சிகள் இரு நாடுகளின் கலாச்சாரத் தொடர்புகளை ஊக்குவித்ததோடு கிழக்கு நாகரிகத்தின் அற்புதமான மரபுகளையும் பரப்பியது.

1960 மற்றும் 1970ஆம் ஆண்டுகளில், சீன - தமிழ் இலக்கியப் பரிமாற்றம் மந்தமான நிலையிலிருந்தது. ஆனால், 1980களில் சீனாவில் ஏற்பட்ட ஆசிய-ஆப்பிரிக்க இலக்கிய மொழிபெயர்ப்பு அலையை அடுத்து, சில தமிழ் இலக்கியப் படைப்புகள் சீனத்துக்கு நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டன.

அக்காலத்துத் தமிழ் எழுத்தாளரான அகிலன் எழுதிய புதினங்களான பெண், பொன்மலர் முதலியவற்றையும், அவரின் சிறுகதைத் தொகுதிகளான சக்திவேல், ஆண் பெண், குழந்தை சிரித்தது முதலியவற்றையும் ட்சாங் சிலின் சீன மொழியில் மொழிபெயர்த்தார்.

இந்த மொழியாக்கப் பணி, இந்தியச் சுதந்திரத்திற்கு முன், பின் சமூகக் கண்ணோட்டத்தையும் மக்களின் வாழ்க்கையையும் சீன வாசகர்களுக்கு அறிமுகம் செய்து அவர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது. இன்றும் ஈர்த்தும் வருகிறது. சீனாவில் தமிழ் அறிந்த சீனர்கள் மிகவும் குறைவு என்பதால், அகிலனுக்குப் பிறகு தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் சீன வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தப்படவில்லை.

புதிய நூற்றாண்டு புதிய வளர்ச்சி

இந்த நிலையில், 2021ஆம் ஆண்டில் சீன மொழியில் வெளியிடப்பட்ட பெருமாள் முருகன் படைப்பான 'பூனாச்சி' என்கிற நாவல் சீனாவில் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. சீனாவிலுள்ள இரண்டு இணையவழி புத்தகக் கடைகளின் தரவுகளின்படி, தற்போது வரை 1000 பிரதிகள் விற்றுள்ளன. சீன வாசகர் ஒருவர், புனைகதை வடிவில் இருக்கும் இப்புத்தகம் சுவாரசியமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், மிக ஆழமான உள்ளடக்கத்துடன், பல சமூகக் கண்ணோட்டங்களைக் கொண்டதாகவும், குறிப்பாகப் பெண்களைப் பற்றிய கண்ணுக்குத் தெரியாத பாரபட்சங்களை உள்ளடக்கியுள்ள இப்படைப்பு முக்கியமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மொழியில் சீனச் செவ்வியல் நூல்கள்

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவிலும் சீனாவிலும் சுதந்திரப் போராட்டங்கள் நடைபெற்றன. இக்காலகட்டத்தில் சீனாவின் புரட்சிகர எழுத்தாளரான லூ சுன் போன்ற எழுத்தாளர்களின் இலக்கியங்கள் இந்திய மொழிகளில் பரவலாக வெளிவந்தன. லூ சுன்னின் சிறுகதைகளை கே. கணேஷ் என்பவர் 'போர்க்குரல்' என்னும் தலைப்பில் மொழியாக்கம் செய்து வெளியிட்டார். இந்நூலானது பொதுமை வெளியீடாக 1981ஆம் ஆண்டு இந்தியாவில் வெளியானது.

லூ சுன் படைப்புகள் போலவே, பல பண்டைய சீன இலக்கியங்களும் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டன. ஷி ஜிங் (Shi Jing) என்பது சீனாவின் மிகத் தொன்மையான நூலாகும். இந்த நூலின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளை இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரியான ஸ்ரீதரன் மதுசூதனன் என்பவர் பயணி என்னும் பெயரில் சீனத்திலிருந்து தமிழுக்கு நேரடி மொழியாக்கம் செய்து வெளியிட்டார். இந்நூலானது 'வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை' என்னும் பெயரில் 2012ஆம் ஆண்டு காலச்சுவடு பதிப்பகத்திலிருந்து வெளியானது. இவர், புகழ்பெற்ற சீன எழுத்தாளரான மோயென் எழுதிய Change என்னும் படைப்பை 'மாற்றம்' என்னும் பெயரில் காலச்சுவடு பதிப்பகத்தின் வழி நேரடியாகத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

இலக்கியங்கள் தவிர, வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட பல்வேறு தளங்கள் சார்ந்தும் சீனப் படைப்புகள் தமிழில் வெளியாகியுள்ளன. அதற்குரிய சிறந்த எடுத்துக்காட்டாக, 'ஜி சியன்லின் – ஒரு விமர்சனப்பூர்வ வாழ்க்கை வரலாறு' என்னும் நூலைக் குறிப்பிடலாம். சீனாவின் இந்தியவியல் - பௌத்த மத அறிஞரான ஜி சியன்லின்னின் வாழ்க்கை வரலாறான இந்நூலை, சீனாவின் ஷாந்தோங் எஜுகேஷனல் அச்சகமும், ஆழி பதிப்பகமும் இணைந்து 2020ஆம் ஆண்டு வெளியிட்டன. அது போன்றே, சீனாவின் புகழ்பெற்ற படைப்பாளரான ஜாங் வெய்யின் படைப்பான 'கூச்சுவன்' என்னும் நாவலை 'காலத்தின் கப்பல்' என்னும் பெயரில் அரவிந்தன் மொழிபெயர்த்துள்ளார். சீனாவில் புரட்சிக்குப் பின் உள்மாகாணங்களில் ஏற்பட்ட முரண்பாடுகளைப் பேசும் இந்நாவலை ஆழி பதிப்பகம் 2019ஆம் ஆண்டு வெளியிட்டது.

அண்மைக்காலமாக சீன - தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்பு சார்ந்து மதிப்புக்குரிய பரிமாற்றங்கள் நடந்துவருகின்றன. இத்தகைய பரிமாற்றங்கள் ஒருதலைப்பட்சமானவை அல்ல. மொழிபெயர்ப்போ, தனிப் படைப்போ எதுவாயினும் அவை, சீன - தமிழ் இலக்கியத் தொடர்பின் உயிர்சக்தியையும் உள்ளார்ந்த ஆற்றலையும் வெளிக்காட்டுபவையாகத் திகழ்கின்றன. முக்கியமாக, அவை உலகின் இருபெரும் நாகரிகங்களின் செழுமைக்கும் ஆழமான புரிதலுக்கும் வலு சேர்க்கின்றன.

கட்டுரையாளர்: யுவான் மிங்சி (Yuan Mingxi),
பெய்ஜிங் அயல்மொழி ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்