சீன மாணவர்களிடம் அதிகரிக்கும் தமிழ் ஆர்வம்

By செய்திப்பிரிவு

சீனாவில் 1959ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்மொழிக் கல்வியானது கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து வருகிறது. சீனர்கள் தமிழைக் கற்றுக்கொள்வதால், இரு தரப்புகளுக்கிடையேயான பரிமாற்றம் அதிகரித்துள்ளது; சீன மாணவர்கள் தமிழ்ப் பண்பாட்டை அறிந்துகொள்ளும் வாய்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.

முதல் தமிழ் ஆசிரியர்

1959இல், பெய்ஜிங் ஒலிபரப்புக் கல்லூரி (Beijing Broadcasting Institute) முதன்முறையாகத் தமிழ் வகுப்பைத் தொடங்கியது. அப்போதைய சீன மத்திய ஒலிபரப்புப் பணியகத்தின் தமிழ் வானொலி ஒலிபரப்பிற்காக அக்கல்லூரி 8 சீன மாணவர்களுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தது.

சீனர்களுக்குத் தமிழ் கற்பித்த முதலாவது தமிழர், இலங்கையைச் சேர்ந்த மாதகல் வ. கந்தசாமி. ''தாடி மீசை நிபுணர் எனப் பெயர்பெற்ற கந்தசாமியை ஆசிரியர் என்று நாங்கள் அழைப்பது வழக்கம். அவர் எங்கள் மொழிபெயர்ப்பையும் உச்சரிப்பையும் திருத்தி வந்தார். ஆசிரியர் கந்தசாமியின் உதவியின்றி, சீன தமிழ்க் கல்வியும் வானொலி தமிழ் ஒலிபரப்பும் முறைப்படி தொடங்கியிருக்க முடியாது'' என்று அப்போதைய மாணவர் சுன் குவோச்சியாங் தெரிவித்தார்.

பெய்ஜிங் அயல்மொழி ஆராய்ச்சிப் பல்கலைக்கழகத்தின் மாணவர்களும் ஆசிரியர்களும்.

படிப்படியான உயர்வு

அதன்பிறகு, பெய்ஜிங் ஒலிபரப்புக் கல்லூரி 1975இல் ஒரேயொரு மாணவருக்கு (ஜு ஜுவான்ஹுவா) மட்டும் பயிற்சி அளித்தது. அதன்பின் 1975இல் 2 நபர்கள், 1986இல் 3 நபர்கள், 1990 மற்றும் 1994ஆம் ஆண்டுகளில் நான்கு நபர்கள் என இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தது. இம்மாணவர்கள் அனைவரும் வெளிநாட்டு ஒலிபரப்புக்காக மட்டுமே தமிழ் கற்றுக்கொண்டனர். படிப்பு முடிந்த பிறகு அவர்கள் அனைவரும் சீன வானொலியின் தமிழ்ப் பிரிவில் பணியில் ஈடுபட்டனர்.

அதன்பின் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, 2003இல், பெய்ஜிங் ஒலிபரப்புக் கல்லூரியில் 12 மாணவர்கள் தமிழ் பயின்றனர். இவர்கள் வானொலிக்காக அல்லாமல் விருப்பத்தின் அடிப்படையில் தமிழ்மொழி வகுப்பில் சேர்ந்து பயின்றனர்.

சீனத் தகவல் தொடர்புப் பல்கலைக்கழகம்

2006ஆம் ஆண்டில், கல்லூரியின் பெயரானது சீனத் தகவல் தொடர்புப் பல்கலைக்கழகம் (Communication University of China) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பெயர் மாற்றம் செய்யப்பட்ட மறு ஆண்டான 2007ஆம் ஆண்டு 12 மாணவர்கள் தங்களின் விருப்பப் பாடமாகத் தமிழைத் தேர்வு செய்து படித்தனர். அதன்பின் சீனாவில் தமிழ் கற்பிக்கும் போக்கில் நீண்ட இடைவெளி உருவானது. 2017ஆம் ஆண்டில், யுன்னான் மின்சு பல்கலைக்கழகத்தின்(Yunnan Minzu University) தெற்காசிய, தென்கிழக்கு ஆசிய மொழிகள் - பண்பாட்டுப் பள்ளியில் தமிழ்த்துறை தொடங்கப்பட்டு அதன்வழி ஆறு மாணவர்கள் தமிழை விருப்பப் பாடமாக எடுத்துப் பயிலத் தொடங்கினர்.

2018ஆம் ஆண்டு, பெய்ஜிங் அயல்மொழி ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் (Beijing Foreign Studies University) இளங்கலை தமிழ் படிப்பைத் தொடங்கியது. அந்த ஆண்டு 9 மாணவர்கள் தமிழ் மொழி கற்க விரும்பி வகுப்பில் சேர்ந்தனர். இதனிடையில் யுன்னான் மின்சு பல்கலைக்கழகத்தின் முதல் தொகுதி தமிழ் மாணவர்கள் பட்டம் பெற்றதை அடுத்து, அப்பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் 2020ஆம் ஆண்டில் மேலும் 12 மாணவர்கள் சேர்ந்தனர்.

தமிழ்த்துறையைப் பொருத்தமட்டில் இந்தியாவில் உள்ளது போல ஆண்டுதோறும் மாணவர்கள் சேர்க்கப்படுவதில்லை. மாறாக, சீனப் பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறையில் ஒரு தொகுதி மாணவர்கள் பட்டம் பெற்ற பிறகே, அடுத்த தொகுதி மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். சீனாவிலேயே முதன்முறையாகத் தமிழ் மொழியைக் கற்பித்த கல்வி நிறுவனமான பெய்ஜிங் தகவல் தொடர்புப் பல்கலைக்கழகம் 2020ஆம் ஆண்டில் தமிழ் மொழி பாடப்பிரிவை மீண்டும் தொடங்கி தமிழ் தெரிந்த சீனர் ஒருவரை ஆசிரியராகவும் நியமித்தது. ஆனால், அங்கு தற்போதுவரை மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை.

1960களில் தமிழ் கற்ற சீன மாணவர்கள்

பெய்ஜிங் அயல்மொழி ஆராய்ச்சிப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக் கல்வி

பெய்ஜிங் அயல்மொழி ஆராய்ச்சிப் பல்கலைக்கழகத்தில் (BFSU) 2018ஆம் ஆண்டு தமிழ்த்துறை நிறுவப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக, ஆசிரியர்கள் மாணவர்களின் மொழித்திறனையும் ஆராய்ச்சித் திறனையும் வளர்ப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

பெய்ஜிங் அயல்மொழி ஆராய்ச்சிப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையானது, மொழிப் பயன்பாட்டு ஆற்றல், ஆராய்ச்சிப் பயிற்சி என இரண்டு நிலைகளில் பாடங்களைக் கற்பித்து வருகின்றது. மொழிப் பயன்பாட்டு ஆற்றலைப் பொறுத்தவரையில், கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல், மொழிபெயர்த்தல் ஆகியவை அடங்கும்.

தமிழ்ப் பிரிவில் பயிலும் மாணவர்கள் ஆராய்ச்சிப் பயிற்சியைப் பெறும் வகையில், தமிழ் வரலாறு, இந்திய வரலாறு, இந்திய பிராந்திய ஆய்வு, இலக்கியம், தத்துவம், சமூகவியல், இதழியல், பொருளாதாரம் என வெவ்வேறு வகுப்புகளைத் தெரிவு செய்யலாம். இதன் மூலம் பிராந்திய ஆய்வுகளின் மீது மாணவர்கள் அதிக ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளலாம்.

தமிழ்மொழி சார் நடவடிக்கைகள்

2018ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தமிழ்ப் பிரிவானது, மாணவர்கள் தமிழகத்தின் சுவையை அறிந்துகொள்ளும் நோக்கில் தேநீர், உணவு உள்ளிட்டவை குறித்த அறிமுக வகுப்பையும் அவற்றைச் சுவைத்து அறிந்துகொள்ளும் வகையிலான நடவடிக்கையை மேற்கொண்டது.

மேலும், தமிழர்களின் பாரம்பரிய ஆடைகளை அணிதல், தமிழ் கையெழுத்துப் போட்டி, தமிழில் காணொலி தயாரித்தல் முதலிய போட்டிகளையும் நடத்தியது. குறிப்பாகத் தமிழ் மாணவர்கள் துறைசார் வல்லுநர்களோடு உரையாடி தங்களின் அறிவை வளர்த்துக் கொள்ளும் வகையில் கர்நாடக இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா, எழுத்தாளர் மாலன், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் மெக்கார்ட்னி முதலிய நிபுணர்களுடன் நேரடியாக உரையாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

அதோடு, மாணவர்கள் தெற்காசிய அறிவுப் போட்டிகளிலும் பல ஆராய்ச்சி மன்ற நடவடிக்கைகளிலும் பங்கேற்றனர். பெய்ஜிங், தியஞ்சின் ஆகிய தமிழ்ச் சங்கங்களின் திருவிழா கொண்டாட்டங்களிலும் பங்கெடுத்தனர். உலகெங்கும் உள்ள தமிழர்களோடு இணைந்து பரிமாற்றத்தை வலுப்படுத்த விரும்பி, மலேசியாவின் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஏற்பாடு செய்த 'நாட்டுப்புறக் கதைகள்' எனும் இணையவழிக் கதைசொல்லல் போட்டியில் மாணவர்கள் பங்கேற்றனர். உலகளாவிய பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக மாணவர்கள் தேசிய நிலை ஆராய்ச்சித் திட்டமான 'சீன-தென்னிந்தியச் சுற்றுலா சந்தை ஒத்துழைப்பு' என்ற ஆய்வுப் பணியையும் நிறைவேற்றினர்.

தமிழ் படிக்கும் சீன மாணவர்களின் உணர்வு

தமிழ் கற்றல் என்பது கடினமாக இருந்த போதிலும் இனிமையான தமிழ்மொழி குறித்த புரிதல் சீன மாணவர்களிடையே அதிகரித்துள்ளது. அதோடு, தமிழ் மொழியைக் கற்றுக் கொள்வதன் மூலம் இந்தியப் பண்பாடு, வரலாறு குறித்த ஆர்வம் அதிகரித்துள்ளது. சீனத்தைப் போன்றே செம்மொழியாக விளங்கும் தமிழ் மொழியானது, திராவிட நாகரிகத்தின் நீண்ட வரலாறு கொண்ட மொழியாகும். அதன் ஞானம் என்றும் கற்றுக்கொள்ளத்தக்கது. சீனம், தமிழ் ஆகிய மொழிகளைப் போன்றே, சீன-தமிழ்க் கலாச்சாரப் பரிமாற்றத்திற்கும் நீண்ட வரலாறு உண்டு. அந்தப் பரிமாற்றத்தை இரு தரப்பினரும் புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பின் வழி அதிகரித்து தமிழ்ப் பண்பாட்டின் வளர்ச்சியைக் கூட்டாக ஊக்குவிக்க வேண்டும்.

கட்டுரையாளர்: சொவ் ஜியாயுவான் (Zhao Jiayuan),
பெய்ஜிங் அயல் மொழி ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 mins ago

சிறப்புப் பக்கம்

46 mins ago

சிறப்புப் பக்கம்

52 mins ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

மேலும்