அறிவுக்கு ஆயிரம் கண்கள் 20: வான் மேகங்களே

By இ. ஹேமபிரபா

வானில் தெரியும் மேகங்களைப் பார்த்து விலங்குகள், பறவைகள், மனிதர்களின் முகங்கள் என்று விதவிதமாக அடையாளப்படுத்தி மகிழ்ந்திருப்போம். மேகங்கள் நம் கற்பனைக்கு விளையாட்டு பொம்மைபோல் இருந்தாலும், அவை பருவநிலையோடு நெருங்கிய தொடர்புடையவை. அதனால், வளிமண்டலம் சார்ந்த ஆய்வுகளில் மேகங்கள் பற்றிய பிரிவான ‘முகிலியல்’ (Nephology) முக்கியத்துவம் பெறுகிறது.

மேகங்களுக்கு ஆயிரம் பெயர்களைச் சூட்டி மகிழ்ந்தாலும் திரள் முகில் (cumulus), தாழ் அடுக்கு முகில் (stratus), கீற்று முகில் (cirrus) என்னும் மூன்று பெரும்பிரிவுகளில் மேக வகைகள் அடங்கிவிடும். பார்ப்பதற்குப் பஞ்சு பஞ்சாகப் பொங்கல் பானையிலிருந்து பொங்கியது போன்ற வடிவில் இருக்கும் மேகங்கள் திரள் முகில். ஒரு படலம்போல, விரிப்புபோல இருக்கும் மேகங்கள் தாழ் அடுக்கு முகில் வகையைச் சேரும். கீற்றுக் கீற்றாகத் தென்படுபவை கீற்று முகில்கள்.

மருந்தாளுனர் கண்டறிந்த முகில்கள்

காலையில் தெரியும் மேகங்களை மாலையில் நம்மால் பார்க்க முடிவதில்லை. மேகங்கள் அவ்வப்போது உருமாறிக்கொண்டே இருக்கும். உயரத்தில் இருக்கும் கீற்று முகில்கள் கொஞ்சம் கீழிறங்கி வந்து, தாழ் அடுக்கு முகில்கள் போல ஒரு படலமாக விரிந்தால் அது தாழ் அடுக்கு முகில் (cirrostratus) எனப் பெயர் மாறும். லண்டனைச் சேர்ந்த லூக் ஹாவர்ட் (Luke Howard), 1803ஆம் ஆண்டு முதல்முறையாக மேகங்களை வகைப்படுத்தினார். மருந்தாளுனராகப் பணியாற்றி வந்த ஹாவர்ட், மேகங்களின் மீது கொண்ட ஈர்ப்பால், அது சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டார். 200 ஆண்டுகளுக்கு முன்பு ஹாவர்ட் சொன்ன வகைப்பாடுகளே இப்போது மெருகேற்றி வழங்கப்படுகின்றன. எனவே, அவர் ‘வானிலை இயலின் தந்தை’யாகக் கருதப்படுகிறார்.

மேகங்கள் பல்வேறு வகையில் நமக்கு வானிலை பற்றிச் சொல்கின்றன. திரள் முகில்கள் பொங்கியதைப் போன்றிருப்பதால், இவற்றின் தடிமன் அதிகம். அதனால், சூரிய ஒளி மறைக்கப்பட்டுப் பகலில் வெப்பம் குறைந்திருக்கும். இவை அதிக அளவு தென்பட்டால், விரைவில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். தாழ் அடுக்கு முகில் ஒரு படலம் போலிருப்பதால், அவை தோன்றும்போது வெயில் தெரியாது. மேலும், மழைமேகங்களாக அவை உருமாறும்போது சீரான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

திரள் முகில், தாழ் அடுக்கு முகில் வகைகள் புவிப் பரப்பிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் உயரத்தில் உருவாகும். கீற்று முகில்கள் இருப்பவற்றிலேயே உயரமானவை. ஆறு கிலோ மீட்டருக்கு மேலேதான் உருவாகும். உயரே செல்லச் செல்ல வெப்பநிலை குறைவாக இருக்கும் என்பதால், கீற்று முகில்கள் சிறு சிறு பனித்துகள்களை உள்ளடக்கி இருக்கும். இவை சூரிய ஒளியைப் பூமியின் உள்ளே அனுமதிக்கும், ஆனால், பூமியிலிருந்து வெளியேற வேண்டிய கதிர்களைத் தடுக்கும். கிட்டத்தட்ட ஒரு பசுமைக்குடில்போலச் செயல்படும். எனவே, இந்த முகில்கள் தோன்றினால் அன்று வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று கணிக்கலாம். சில வேளைகளில், சூரியனைச் சுற்றி வெளிறிய ஒளிவட்டத்தைப் (Halo) பார்த்திருப்போம். இந்த வட்டத்தை உருவாக்குபவையும் கீற்று முகில்கள்தாம்.

செயற்கை மேகங்கள்

மனிதர்கள் செயற்கையாக உருவாக்கும் மேகங்களும் இருக்கி ன்றன. மனித நடவடிக்கைகளால் உருவாகும் மேகங்கள் அவை. வானில் விமானங்கள் செல்லும்போது வெள்ளை மேகம் போன்ற ஒரு வழித்தடம் (contrails) உருவாகும். சில வேளைகளில், இந்தத் தடத்தைப் பார்த்துத்தான் ‘ஜெட் விமானங்கள்’ போகின்றன என்று மகிழ்ந்திருப்போம். இதுபோல் ஒன்றிரண்டு விமானங்கள் போனால் பரவாயில்லை. ஒவ்வொரு முறை விமானம் பறக்கும்போதும் இவை உருவாவதால், பெரிய விமான நிலையங்கள் இருக்கும் நகரங்களில் இந்த வகை மேகங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இவை கிட்டத்தட்ட கீற்று முகில்கள்போலச் செயல்பட்டு வெப்பநிலையை அதிகரிக்கும்.

அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பின்பு, சில நாட்களுக்கு விமானங்கள் இயக்கப்படாததால் இவ்வகை மேகங்கள் உருவாகவில்லை. அதனால், வெப்பநிலை குறையும் என்று ஆய்வாளர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், எதிர்பார்த்ததற்கு மாறாகக் காலையில் வெப்பம் கூடியும், இரவில் குளிர் அதிகரித்தும் இருந்தது. அதற்கான விளக்கம் ஆராயப்பட்டுவருகிறது. கரோனா காலத்தில் விமானங்கள் இயக்கப்படாததால் அவை என்ன மாதிரி விளைவை வானிலையில் உருவாக்கின என்பது தொடர்பான ஆய்வுகளும் உலகம் முழுவதும் தற்போது நடைபெற்று வருகின்றன. ஆய்வுகளுக்கும் அவை தரும் வெளிச்சங்களுக்கும் முடிவேயில்லை. அதுதானே அறிவியல்!

(நிறைவடைந்தது)

கட்டுரையாளர், இஸ்ரேல் டெக்னியான் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர் தொடர்புக்கு: hemazephyrs@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்