நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு, பூமியைச் சுற்றுகிறது. அதனால்தான் அமாவாசை, பௌர்ணமி என மாறி மாறி பார்க்கிறோம். பூமியும் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றும். அதனால் இரவு-பகல் வருகிறது. கோடைக்காலம் குளிர்காலம் என்று பருவங்களும் மாறுகின்றன. அப்போது, சூரியன் என்ன செய்து கொண்டிருக்கும்? இந்தப் பூமியையும், பிற கோள்களையும் பாசத்துடன் தாங்கிப்பிடித்து நின்றுகொண்டிருக்குமா?
நிலவையும் பூமியையும் போலவே சூரியனும் தன்னைத்தானே சுழற்றிக்கொண்டும் (rotation), சுற்றிக்கொண்டும் (revolution) இருக்கும். அப்படியென்றால் சூரியன் எதைச் சுற்றி வருகிறது? இன்னொரு சூரியனைப் போன்ற நட்சத்திரத்தையா? ஒருவேளை இன்னொரு பெரிய சூரியனை என்றால், அந்தப் பெரிய சூரியனை எது ஈர்த்துக்கொண்டிருக்கிறது? இந்தத் தொடர்ச்சி எங்கே போய் முடியும்? எது சுற்றுகிறதோ இல்லையோ, இதைப் பற்றி யோசித்தால் நமக்குத் தலைசுற்றும்.
சுற்றும் சூரியன்
பூமியில் மண், தரை இருக்கின்றன. ஈர்ப்புவிசையும் இருக்கிறது. அதனால், பொருள்களை ஈர்ப்புவிசை இழுத்துவைத்திருக்கிறது. ஆனால், விண்வெளி என்பது மண்தரையும் அல்ல, சிமென்ட் தரையும் அல்ல. அது ‘வெளி’. விண்வெளியில் பெரும்பாலும் எந்தப் பொருளும் தன்னைத்தானே சுழற்றிக்கொண்டும், ஒரு மையப்புள்ளியை அடிப்படையாகக்கொண்டு சுற்றிக்கொண்டும்தான் இருக்கும். ஒருவேளை தன் பாதையில் இருந்து விலகினால் அது பயணத்தில் இருக்கும், சும்மா இருக்காது. உதாரணமாக, ஒரு கயிற்றில் கல்லைக் கட்டிக்கொண்டு சுற்றினால் எப்படி அது ஒரு ‘வெளி’யில் சுற்றிக்கொண்டே இருக்கிறதோ, அதுபோல.
ஆக, நம் சூரியனும் விண்வெளியில் சுற்றிக்கொண்டுதான் இருக்கும். அதற்கு மையப்புள்ளி என்ன தெரியுமா? நம் விண்மீன் மண்டலமான (galaxy) பால்வீதியின் (milky way) மையத்தைத்தான் சூரியன் சுற்றிவருகிறது. விண்வெளி ஆய்வாளர்களின் ஆய்வுப்படி, அனைத்து விண்மீன் மண்டலங்களுக்கு மையத்திலும் மீபெரும் கருந்துளை ஒன்றிருக்கும். நமது பால்வீதியின் மையத்திலும் சஜிடேரியஸ் A* (Sagittarius A*) என்னும் கருந்துளை இருக்கிறது. அந்தக் கருந்துளை அதிக ஈர்ப்பு விசையால், ஒளியைக்கூட வளைத்து உள்ளிழுத்துக்கொள்ளும். அதனாலேயே இந்தப் பெயர். ஆக, நம் சூரியன், கூடவே பூமி, நிலவு, இன்ன பிற கோள்கள், எரிகற்கள் என எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு சூரிய மண்டலமாக ஒரு கருந்துளையை சுற்றிவந்து கொண்டிருக்கிறது.
இயக்கமே அடிப்படை!
பூமி என்பது கிட்டத்தட்ட ஒரு திண்மக் கோளம் (solid sphere) போலச் சூரியனை வலம்வருகிறது. தன்னைத்தானே சுழற்றிக்கொள்ள பூமிக்கு 24 மணி நேரம் ஆகும். வடக்கு முதல் தெற்கு வரை பூமியின் அனைத்து அடுக்கும் சுற்றிவர 24 மணி நேரம்தான் எடுத்துக்கொள்ளும். ஆனால் சூரியனோ ஹைட்ரஜன், ஹீலியம் ஆகிய வாயுக்களால் ஆனது. அதனால், சூரியனின் ஒவ்வொரு பகுதியும் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள வெவ்வேறு கால அளவை எடுத்துக்கொள்கின்றன. ஒரு வாளியில் தண்ணீரை எடுத்துக்கொண்டு சுழற்றினால் ஒவ்வொரு அடுக்கும் வெவ்வேறு வேகத்தில் சுற்றுவதைப் பார்த்திருப்பீர்கள். சூரியன் ஒரு மீபெரும் வாயுப்பந்து, அதனால், ஒவ்வொரு அடுக்கும் வெவ்வேறு கால அளவை எடுத்துக்கொள்கின்றன. அதன் வடதுருவம் 35 நாள்களும், நடுப்பகுதியில் 25 நாள்களும் எடுத்துக்கொள்ளும். தோராயமாக ஒரு மாத காலம் எடுத்துக்கொள்ளும்.
அதேபோல, பால்வீதியின் மையப்புள்ளியைச் சூரியன் முழுமையாகச் சுற்றிவர கிட்டத்தட்ட 20 கோடி ஆண்டுகள் ஆகும். பூமியில் டைனோசர்களின் காலம் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. பாலூட்டிகள் தோன்றி, வெறும் ஆறரை கோடி ஆண்டுகள்தான் ஆகின்றன. மனித இனம் தோன்றி கிட்டத்தட்ட ஐந்து லட்சம் ஆண்டுகள்தான் ஆகின்றன.
ஆக, ஒருமுறை சூரியன் பால்வீதியின் மையத்தை சுற்றிவருவதற்குள்ளே டைனோசர் தோன்றி அழிந்து, பாலூட்டிகள் தோன்றி, மனித இனம் தோன்றி... எவ்வளவு நடந்திருக்கிறது! இன்னொரு விஷயம், பால்வீதியும் கருந்துளையும்கூடச் சும்மா இல்லை. அவையும் சுற்றிக்கொண்டும் பயணத்திலும்தான் இருக்கின்றன. உயிரற்றவை என்று நாம் கருதுபவையும்கூட உண்மையிலேயே சும்மா இருப்பதில்லை, இயக்கம்தான் இந்தப் பிரபஞ்சத்தின் அடிப்படை!
கட்டுரையாளர், இஸ்ரேல் டெக்னியன் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: hemazephyrs@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago