ஜன்னல் வழியே சிந்தும் சூரிய ஒளியை ரசித்து அனுபவித்திருப்போம். அந்த ஒளியில் தெரியும் தூசுத் துகள்களையும் பார்த்திருப்போம்.. தூசுத் துகள்கள் எப்போதும் நம்மைச் சுற்றி இருக்கின்றன. சுத்தமான வீடாக இருந்தாலும், துடைக்கப்படாத மேசை மேல் தூசு படிந்திருக்கும். இப்படித் தவிர்க்க முடியாததாக இருக்கிறது தூசு.
ஆனால், தூசுவைத் தவிர்த்தே ஆக வேண்டிய இடங்கள் பல உண்டு. கைபேசி தொடங்கி கணினி, நவீனத் தொலைக்காட்சி, மருத்துவக் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களின் தயாரிப்பில் தூசு தவிர்க்கப்பட்டாக வேண்டும். மின்னணுக் கருவிகளில் நுண்ணிய பாகங்கள் பொருத்தப்படும். காற்றில் சுற்றிக்கொண்டிருக்கும் தூசு எப்படி கண்ணுக்கே தெரியாத அளவுக்குச் சிறியதோ, அதே அளவுக்கான நுண்ணிய பாகங்கள் இந்தக் கருவிகளில் இருக்கும். தயாரிக்கும்போது ஒரேயொரு தூசுத் துகள் ஒட்டிக்கொண்டாலும், முழுக் கருவியுமே இயங்காமல் போய்விடும். எனவே, தூசு இல்லாத 'தூய்மையான அறைகளில்' இந்தப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.
சரி, அதென்ன தூய்மையான அறை (clean room)? குப்பைகளை அப்புறப்படுத்தி, பொருள்களைத் துடைத்து வைத்திருப்பதா? இல்லை. 'தூய்மையான அறைகளில்' காற்றில்கூடத் தூசில்லாமல் இருப்பது உறுதிப்படுத்தப்படும். ஆய்வகங்களிலும், தயாரிப்பு நிறுவனங்களிலும் இதற்காகத் தனித்துவமான தூய்மையான அறைகள் கட்டப்படுகின்றன. இந்த அறைகளுக்குள் செல்லும் காற்று வடிகட்டப்பட்டு அனுப்பப் படும். அதாவது, அறையின் சுவர் முழுக்க வடிகட்டிகள் இருக்கும். அவற்றின் வழியே செல்லும் காற்றிலிருக்கும் தூசு நீக்கப்பட்டுவிடும்.
சிறப்பு வடிகட்டிகள்
காற்றிலிருக்கும் தூசு வெவ்வேறு பருமனில் இருக்கும். ஒரு மில்லிமீட்டர் அளவு பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். ஒரு மில்லிமீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு என்பது ஒரு மைக்ரோமீட்டர். பொதுவாக, 50 மைக்ரோமீட்டருக்கு மேல் ஒரு பொருளின் அளவு இருந்தால் நுண்ணோக்கி இல்லாமல், வெறும் கண்களால் பார்க்க முடியும். நம்முடைய ஒரு தலைமுடியின் சுற்றளவு 70 மைக்ரோமீட்டர் இருக்கும். காற்றைத் தூய்மைப்படுத்த பயன்படுத்தப்படும் அதிக செயல்திறன் கொண்ட துகள் வடிகட்டிகளில் மைக்ரோமீட்டர் அளவில் நுண்ணிய இழைகள் இருக்கும். இந்த வடிகட்டிகளில் பல அடுக்குகளில் இழைகள் இருப்பதால் பாக்டீரியா, வைரஸ் போன்ற 0.3 மைக்ரோமீட்டர் அளவில் இருக்கும் நுண்ணுயிரிகளையும் இவற்றால் வடிகட்டிவிட முடியும்.
தூய்மையான அறைகளைத் ‘தூய்மை’க்கு ஏற்ப வகைப்படுத்துவார்கள். நாம் வசிக்கும் அறைகளில் ஒரு கனமீட்டரில் 0.5 முதல் 1 மைக்ரோமீட்டர் பருமனில் மூன்றரை கோடித் துகள்கள் இருக்கும்! ஆனால், அதிதூய்மையான அறையாகக் கருதப்படும் ‘ISO – 1’ என்கிற அறையிலோ, ஒரு துகள்கூட 0.5 மைக்ரோமீட்டர் பருமனில் இருக்காது. அது மட்டுமல்ல, 0.1 மைக்ரோமீட்டர் பருமனில் உள்ள துகள்கள்கூட மொத்தமே பத்துதான் இருக்கும்.
இவ்வளவு தூய்மையான அறைகளில்தான் நவீன மின்னணு இயந்திரத் தயாரிப்பும், ஆய்வுகளும் நடைபெறுகின்றன. தீவிர சிகிச்சைகள் செய்யப்படும் மருத்துவமனைகளிலும், வைரஸ் போன்ற நுண்ணுயிரிகள் குறித்த ஆய்வகங்களிலும் இந்த வகைத் தூய்மையான அறைகள் இருக்கும். நவீனக் கருவித் தயாரிப்பில் மூலப்பொருளுக்கு ஆகும் செலவைவிட, தூய்மையான அறைகள் கட்டப்படுவதற்கும், அவற்றைப் பராமரிப்பதற்கும் ஆகும் செலவே அதிகம்.
எது தூய்மை?
கரோனா தொற்று ஏற்பட்ட நோயாளி களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் தனிநபர் பாதுகாப்பு உடை அணிவதைப் போல், தூய்மையான அறைகளில் பணிபுரிபவர்கள் மூலம் ஆய்வகத்துக்குள் தூசு வராமல் இருப்பதற்குத் தனித்துவமான உடைகள் தரப்படும். சளி, இருமல் போன்றவற்றால் மனிதர்களிடமிருந்து வெளிவரும் நீர்த்திவலைகள் மூலம் அறை மாசுபடும் என்பதால், உடல்நலமின்றி இருந்தால் இந்த அறைகளில் பணிபுரிய முடியாது. ஆனால், மாதவிடாய் காலங்களில் எவ்விதத் தடையும் இல்லாமல் பெண்கள் பணிபுரியலாம். தூய்மையான அறை என்றாலும், கரோனா பரவல் என்றாலும் மூச்சுக்காற்றும் நீர்த்திவலைகளும் மாசு உண்டாக்குகின்றன, நோயைப் பரப்புகின்றன. ஆனால், இந்தியாவிலோ மாதவிடாய் தூய்மையற்றது என்னும் தவறான கற்பிதம் இன்னமும்கூட நிலவிவருவதை என்னவென்று சொல்வது?
கட்டுரையாளர், இஸ்ரேல் டெக்னியன் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: hemazephyrs@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago