அறிவுக்கு ஆயிரம் கண்கள் 10: புவியீர்ப்பை எதிர்த்து எரியும் மெழுகுச் சுடர்

By இ. ஹேமபிரபா

வீடுகளில் மின்சாரம் தடைபட்டால் உடனே மெழுகுவர்த்திகளைத் தேடுவோம். மெழுகுவர்த்தி எரியும்போது பக்கவாட்டில் மெழுகு வழிந்து ஒழுகும். கீழே ஒரு தட்டையோ மெழுகுத் தாங்கியையோ வைப்போம். இப்போதெல்லாம் மெழுகுவர்த்திகள் அழகான கண்ணாடிக் குவளைகளில் கிடைக்கின்றன. மெழுகுவர்த்தி உருகி அந்தக் கண்ணாடிக் குவளைக்குள்ளேயே வழிவதால், அவை தீர்ந்தேபோகாது என்று நினைத்தேன். எனவே, கண்ணாடிக் குவளைக்குள் வைக்கப்பட்டிருந்த அழகான மெழுகுவர்த்தியை வாங்கி வந்து பற்றவைத்துப் பார்த்தேன். ஆனால், எதிர்பார்ப்பை மீறி, அந்த மெழுகுவர்த்தி தீர்ந்து போய்விட்டது. ஏன் இப்படி ஆகிறது என்று யோசித்து, மெழுகுவர்த்தி எப்படி எரிகிறது என்று தேடத் தொடங்கினேன்.

காந்தத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் முறை, டைனமோ (dynamo) போன்ற பல்வேறு கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரான மைக்கேல் ஃபாரடே, தான் பணிபுரிந்த பிரித்தானிய ராயல் நிறுவனத்தில் ஆற்றிய ‘The Chemical History of a Candle’ என்னும் உரையில் இதற்கான விடை இருந்தது.

ஏன் தீர்ந்துபோகிறது?

மெழுகு ஒரு திடப்பொருள். அதன் மேற்பகுதியில் திரி இருக்கும். திரியைப் பற்ற வைத்ததும், அந்தச் சூட்டினால் மெழுகு திரவமாகி ஒரு குளம்போல் திரிக்குக் கீழே தேங்கி நிற்கும். திரவ நிலையில் இருக்கும் இந்த மெழுகு, திரி வழியாகச் சிறிதுசிறிதாக மேலேறி, திரியின் நுனிக்குப் போகும். அங்கே, திரவ நிலையில் இருக்கும் மெழுகு ஆவியாகிறது. இப்படி, ஆவியாகும் மெழுகுதான் எரிகிறது. அதாவது, திட நிலையில், திரவ நிலையில் இருக்கும் மெழுகு எரிவதில்லை. ஆவியாகத் தொடங்கும்போதுதான் எரியத் தொடங்குகிறது. அதனாலேயே, ஆவியான மெழுகு எரிந்து தீர்ந்து போய்விடுகிறது.

நம் வீடுகளில் விளக்கு ஏற்றுவோம். அங்கேயும் இதே அறிவியல்தான் செயல்படுகிறது. எண்ணெய்யாக ஊற்றிக்கொண்டே இருந்தாலும், அது ஆவியாகும்போதே எரியும். இதனாலேயே, விளக்கில் ஊற்றும் எண்ணெய் தீர்ந்துபோகிறது. மெழுகு - எண்ணெய் இவை இரண்டுமே ஹைட்ரோகார்பன் வகையைச் சேர்ந்த எரிபொருள்கள்.

ஈர்ப்பு விசையை எதிர்க்க முடியுமா?

சரி, திரவ நிலையில் இருக்கும் எண்ணெய்யும் மெழுகும் திரி வழியாக எப்படி மேலேறிச் செல்கின்றன? குழாயில் வரும் நீராக இருந்தாலும் அருவியாக இருந்தாலும் கீழேதானே விழுகின்றன? ஈர்ப்புவிசையால் ஒரு பொருள் மேலிருந்து கீழே வருவதுதானே இயல்பு?

குறுகிய குழாய் வழியே, அதாவது மெழுகுவர்த்தியின் நுண்ணிய குழாய் போன்ற திரி வழியே புவியீர்ப்பு விசைக்கு எதிராக ஒரு திரவம் மேலே செல்லும் பண்புக்குத் தந்துகிக் கவர்ச்சி (capillary action) என்று பெயர். திரவ நிலையில் இருக்கும் மெழுகின் மூலக்கூறுகள், தங்களின் மூலக்கூறுகளை விரும்புவதைவிட, திரியின் மூலக்கூறுகளை விரும்பும். அதனால், திரியைப் பார்த்ததும், மெழுகு மூலக்கூறுகள் திரியில் ஒட்டும். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாகத் திரியை நனைத்து மேலேறிச் செல்லும்.

நீருக்கு அருகில் ஒரு தாளைப் பிடித்தால், தாள் விரைந்து நனைவதற்கும் நீர் மேலேறுவதற்கும், நீர் மூலக்கூறுகள் தாளின் மூலக்கூறுகளுடன் ஒட்டிக்கொள்வதை விரும்புவதே காரணம். ஆக, மூலக்கூறுகளின் விருப்பத்தினால் தந்துகிக் கவர்ச்சி நடைபெறுகிறது. இப்படியாக மெழுகுவர்த்தியும் விளக்கும் எரியும். இதே இயக்கத்தின் அடிப்படையில்தான் செடியின் கீழ்ப்பரப்பில் இருக்கும் வேர்கள் நீரை உறிஞ்சி, மேலே இருக்கும் இலைகளுக்கும் தண்டுகளுக்கும் அனுப்புகின்றன.

கட்டுரையாளர், இஸ்ரேல் டெக்னியன் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர்

தொடர்புக்கு: hemazephyrs@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்