எங்கேயும் எப்போதும் 12: சிலந்தி வலை என்பது கூடு மட்டும்தானா?

By செய்திப்பிரிவு

சிலந்திகள் குறைந்தபட்சம் முப்பது கோடி ஆண்டுகளாகக் கூடு கட்டிக் கொண்டிருக்கின்றன. மனித இனம் பத்தாயிரம் ஆண்டுகளாகத்தான் வீடு கட்டுகிறது. பல ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இல்லாத இடம் என்பதை உணர்த்த, சிலந்தி வலையை ஒதுக்கியவாறே உள்ளே நுழைவதைப் போன்ற காட்சிகளை நாம் திரைப்படங்களில் பார்த்திருப்போம்; நம் வீட்டின் சுவர்களில் படியும் ஒட்டடையை மாதம் ஒருமுறை சுத்தம் செய்கிறோம்.

இத்தனை கோடி ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியின் விளைவால் சிலந்தி வலைகள் பல சுவாரசியப் பண்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. புரதத்தில் இருந்து பட்டுக்களை உருவாக்கும் பட்டுப்பூழுக்களைப் போலவே, சிலந்திகளும் புரதங்களில் இருந்தே வலைகளை உருவாக்குகின்றன. அறிவியல் புலத்தில் சிலந்தி வலை, ‘சிலந்திப்பட்டு’ என்று அழைக்கப்படுகிறது.

சிலந்திப்பட்டின் சிறப்புகள்

பட்டுப்புழு உருவாக்கும் பட்டு, கூடு கட்டி பூச்சியாக மாறும் காலம்வரைக்குமான பாதுகாப்புக்கு மட்டுமே. ஆகவே, அவற்றில் ஒரே வடிவ அமைப்புகளைக் கொண்ட புரதங்கள் மட்டுமே இருக்கும். ஆனால், சிலந்திப்பட்டுக்கோ இரைதேட, ஆபத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள, வசிப்பிடம் அமைக்க, வழி மறக்காமல் இருக்க என்று பல தேவைகள் இருப்பதால், ஒவ்வொரு வகை சிலந்திப்பட்டும் ஒவ்வொரு மாதிரியான வடிவ, மூலக்கூறு அமைப்புகளைக் கொண்டிருக்கும். சிலந்திகளின் அடிவயிற்றில் இருக்கும் பிரத்யேக சுரப்பிகள், தனிப்பட்ட பண்பு கொண்ட சிலந்திப்பட்டை உற்பத்தி செய்கின்றன.

சிலந்தி ஒன்றின் வலைக் கட்டுமானம், குறைந்தது மூன்று அல்லது நான்கு வகைச் சிலந்திப்பட்டு இழைகளைக் கொண்டு உருவாக்கப்படுகிறது. எல்லா சிலந்திப்பட்டும் ஒட்டும் தன்மையுடன் இருக்காது. அப்படி இருந்தால் சிலந்தியாலேயே வலையில் நடமாட முடியாது. எனவே, மிகவும் திட்டமிட்டு பலவகை இழைகளைக் கொண்டு அவை வலை பின்னுகின்றன. வலைகளில் மிக அடிப்படையான குழல் வடிவக் கூட்டில் இருந்து நீருக்குள் வேட்டையாடச் செல்கையில் ஆக்ஸிஜன் எடுத்துச் செல்ல மணி போன்று அமைக்கப்படும் வடிவங்களும் உண்டு.

சிலந்திப்பட்டின் சில வகைகள் அதிர்வுகளைத் தாங்கக்கூடியதாகவும் அதிக மீள்விசைத்தன்மை (Elasticity) உடையதாகவும் இருக்கின்றன. இத்தனை பண்புகள் கொண்ட சிலந்திப்பட்டைப் பரவலாக்க முடியாததற்குக் காரணம், பட்டுப்புழுபோல் கொத்துக் கொத்தாகச் சிலந்திகளை வளர்த்து சிலந்திப்பட்டு தயாரிக்க முடியாது. அருகருகே இருக்கும் இரு சிலந்திகள், இரண்டில் ஒன்று இறக்கும் வரைச் சண்டையிடும். மொத்தமாக வளர்த்தால் மிகப் பெரிய போர்க்களம்தான்.

முழுவீச்சில் ஆய்வுகள்

நேரடியாகச் சிலந்திகளை வளர்த்து அவற்றில் இருந்து சிலந்திப்பட்டு பெறுவது கடினம் என்பதால், ஆய்வாளர்கள் வேறு முறைகளைச் சோதித்த வண்ணம் இருக்கிறார்கள். சிலந்திப்பட்டு சுரக்கும் மரபணுவைப் பிரித்தெடுத்து, அதைப் பட்டுப்புழுக்களுக்குள் செலுத்தி, அவற்றில் சிலந்திப்பட்டின் பண்புகளைக் கொண்டுவர முயல்தல்; பாக்டீரியாக்களுக்கு இந்த மரபணுவைச் செலுத்தி அவற்றைச் சுரக்க வைக்க முடியுமா என்று சோதித்தல்; செம்மறி ஆடுகளின் பால் சுரக்கும் செல்களில் இந்த மரபணுக்களைச் செலுத்தி, செம்மறி ஆட்டுப் பாலில் இருந்து பிரித்தெடுக்கும் வழிமுறைகள் எனப் பல்வேறு ஆய்வுகள் இதுசார்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

பாக்டீரியாக்களைச் சிலந்திப்பட்டு சுரக்கச்செய்யும் ஆய்வு நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது. மொத்தமாக உற்பத்தி செய்யும் நிலை வந்துவிட்டால் ஆடை வடிவமைப்பு முதல் ராணுவப் பயன்பாடுவரை சிலந்திப்பட்டின் ஆதிக்கம் மேலோங்கும்!

(தொடரும்) கட்டுரையாளர்
தொடர்புக்கு: yes.eye.we.yea@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்