சைபர் சிம்மன்
இணைய உலகைப் பொறுத்தவரை 2019 சவாலுடனே தொடங்கியது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ஆண்டின் தொடக்கத்தில் வைரலாகப் பரவிய #10இயர்சாலஞ்ச் எனும் பத்தாண்டுச் சவால்தான் அது. இந்தச் சவாலோ, அதன் பின்னே இருந்த சுவாரசியமான கருத்தாக்கமோ முக்கியமில்லை. இந்தச் சவால் தொடர்பாக எழுந்த சர்ச்சையும் சந்தேகமும்தான் கவனத்துக்குரியது.
பத்தாண்டுகளுக்கு முன் எடுத்த தங்கள் பழைய ஒளிப்படத்துடன், தற்போதைய ஒளிப்படத்தையும் பகிர்ந்துகொள்ள ஊக்குவித்த இந்தச் சவால், உண்மையில் முகமறிதல் ஆய்வுக்குப் பயனாளிகளின் படங்களைச் சேகரிப்பதற்கான ஃபேஸ்புக் நிறுவனத்தின் சதியே எனக் குற்றஞ்சாட்டப்பட்ட தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தின. ஃபேஸ்புக் இதைத் திட்டவட்டமாக மறுத்தது.
இந்த வைரல் நிகழ்வு அப்படியே அடங்கிப்போனாலும், முகமறிதல் (Facial recognition) தொடர்பான சர்ச்சை இணையத்தைத் தொடர்ந்து உலுக்கிக்கொண்டிருக்கிறது. செயற்கை நுண்ணறிவு ஆய்வில் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனங்கள், முகமறிதல் நுட்பத்திலும் கவனம் செலுத்திவருவதையும், இதற்காக முகங்கள் தொடர்பான தரவுகளைச் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதையும் உணர்த்தும் செய்திகள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கின்றன. முகமறிதல் நுட்பத்தின் சாத்தியம் ஒரு பக்கம் இருந்தாலும், அதனால் பயனாளிகளின் தனியுரிமைக்கு (Privacy) ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பான அச்சமும் கவலையும் அதிகரித்துள்ளன.
பாதுகாப்பு மீறல்கள்
முகமறிதல் நுட்பம் குறித்த கவலை மட்டுமல்லாமல், இணையப் பாதுகாப்புக்குச் சோதனையான ஆண்டாகவும் 2019 அமைந்தது. பல்வேறு நிறுவனங்களில் ஹேக்கர்களின் கைவரிசையால் நிகழ்ந்த பாதுகாப்பு மீறல் தொடர்பான செய்திகள் வெளியாயின. பயனாளிகளின் கடவுச் சொற்கள், கடன் அட்டை விவரங்கள் உள்ளிட்டவற்றை ஹேக்கர்கள் களவாடினார்கள். ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களும் இத்தகைய தாக்குதலுக்கு ஆளாயின. 2019-ன் முதல் ஆறு மாதங்களில் மட்டும், 410 கோடித் தகவல்கள் களவாடப்பட்டதாக ‘ஃபோர்ப்ஸ்' இதழ் தெரிவிக்கிறது.
மாதந்தோறும் 70 கோடித் தகவல்கள் இத்தகைய தாக்குதலுக்கு உள்ளானதாகவும் ‘ஃபோர்ப்ஸ்' தெரிவிக்கிறது.
இதனிடையே, முன்னணிக் குறுஞ்செய்திச் சேவையான வாட்ஸ் அப், ஹேக்கர்களின் தாக்குதலுக்கு உள்ளான செய்தியும் வெளியாகி திகைப்பை ஏற்படுத்தியது. வாட்ஸ் அப்பில் இருந்த தொழில்நுட்ப ஓட்டையைப் பயன்படுத்தி, ஹேக்கர்கள் கைவரிசை காட்டியதாகச் செய்தி வெளியானது. இந்தக் குறை சீரமைக்கப்பட்டு, பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் அறிவித்தது.
என்றாலும் சில மாதங்கள் கழித்து, அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் தாக்கல்செய்த வழக்கு மூலம், இந்தத் தாக்குதல் தொடர்பாகத்திடுக்கிடும் புதிய தகவல்கள் வெளியாயின. இந்தத் தாக்குதலின்போது ‘பெகசாஸ்’ என்ற உளவு மென்பொருள் சில பயனாளிகளின் செல்பேசியில் நிறுவப்பட்டதாக வாட்ஸ்அப் தெரிவித்தது. பாதிக்கப்பட்ட பயனாளிகள் பட்டியலில் இந்திய இதழாளர்களும் சமூகச் செயற்பாட்டாளர்களும் இடம்பெற்றிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இணையச் சுதந்திரம்
இணையப் பாதுகாப்புக்கு மட்டுமல்ல, இணையச் சுதந்திரத்துக்கும் இந்த ஆண்டு சோதனையாகவே அமைந்தது. முதன்மை இணையத்தில் இருந்து ரஷ்ய இணையத்தைத் தனிமைப்படுத்தும் திட்டத்தை ரஷ்யா அறிவித்தது. ஈரானில் உள்நாட்டுப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு இணையம் முடக்கப்பட்டது; பல ஆப்பிரிக்க நாடுகளிலும் இணையம் முடக்கப்பட்டது.
இணைய வசதி முடக்கப்படுவது தொடர்பான செய்திகள் இணைய ஆர்வலர்களைக் கவலையில் ஆழ்த்தினாலும், ஹாங்காங்கில் நடைபெறும் ஜனநாயக ஆதரவுப் போராட்டத்தில் ஒருங்கிணைப்புக்கும் தகவல் பகிர்வுக்கும், இணையம், புளுடூத் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் புதுமையாகப் பயன்படுத்தப்படும் தகவல்கள் நம்பிக்கை அளிப்பதாக அமைந்தன!
பாஸ்வேர்டு கவலை
இணையத் தாக்குதல் தொடர்பான செய்திகள், அது சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ள நிலையில், இணைய சேவைகளில் நுழைவதற்காகக் கடவுச்சொல்லைப் பயன்படுத்தும் தேவை இல்லாமல், செல்பேசி அல்லது பிரத்யேகச் சாவியைப் பயன்படுத்தும் ‘பிடோ 2’ (FIDO2) எனும் தொழில்நுட்பக் கூட்டணிச் செயல்பாடுகள் கவனத்தை ஈர்த்தன.
இந்தக் கூட்டணியின்கீழ், கூகுள் சேவைகளை அணுகுவதற்கான சாவியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் கூகுள் சேவைகளைக் கடவுச்சொல் இல்லாமல் செல்பேசிச் சாவியைக் கொண்டு அணுகுவது சாத்தியமானது. கூகுளின் வீடியோகேம் ஸ்டிரீமிங் சேவையான ‘ஸ்டேடியா’ அறிமுகமும் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்தது.
புதிய மைல்கல்
இணைய சர்ச்சைகள் ஒரு பக்கம் இருக்க, மார்ச் மாதம் இணைய வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது. வலை என்று பிரபலமாக அழைக்கப்படும் இணையத்தின் முக்கிய அங்கமான, வைய விரிவு வலைக்கான (World Wide Web) கருத்தாக்கத்தை பிரிட்டன் விஞ்ஞானி டிம் பெர்னர்ஸ் லீ சமர்ப்பித்து 30 ஆண்டுகள் நிறைந்தது. 1989 மார்ச் 12 அன்று வலைக்கான மூல வடிவக் கருத்தாக்கத்தை சுவிட்சர்லாந்தின் செர்ன் ஆய்வுக்கூடத்தில் அவர் சமர்ப்பித்தார். இந்த ‘வலை 30’ நிகழ்வைக் கொண்டாடும் வகையில், வலையில் உருவாக்கப்பட்ட முதல் இணையதளத்தைப் பார்வையிடுவதற்கான பிரவுசரும் மறு உருவாக்கம் செய்யப்பட்டது.
அத்துடன், கருந்துளை (Blackhole) முதன்முறையாகப் படம் எடுக்கப்பட்ட செய்தி வெளியாகி, அதற்கு முக்கியக் காரணமாக அமைந்த அமெரிக்க இளம் மென்பொருளாளர் கேத்தி போமனை இணையம் கொண்டாடி மகிழ்ந்தது. அதேபோல், நிலவில் முதன்முறையாக மனிதன் தரையிறங்கிய நிகழ்வின் பொன்விழா ஆண்டாக இது அமைந்தது.
மனிதரை நிலவுக்குக் கொண்டு சென்ற அப்போலோ விண்கலத்தின் கணினி, செயல்திறனில் நவீன செல்பேசி சிப்பைவிடப் பல மடங்கு குறைவாக இருந்தாலும், அந்தக் காலத்தில் தனக்கான பணியைக் கச்சிதமாக நிறைவேற்றிச் சாதனை படைத்தது என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.
செல்பேசிப் புதுமை
இந்த ஆண்டு செல்பேசி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம்செய்தாலும், அவற்றில் புதுமையாக ஒன்றுமில்லை என்றே சொல்ல வேண்டும். சில மேம்பட்ட அம்சங்களைத் தவிர, பெரும்பாலான செல்பேசிகள் அடிப்படையில் பொதுவான அம்சங்களையே கொண்டிருந்தன. என்றாலும், ஆண்டின் தொடக்கத்தில் சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் மடங்கும் திரை கொண்ட ‘போல்டபிள் போன்’ மாதிரியை அறிமுகப்படுத்தின. சீனாவின் ஹுவேய் நிறுவனம், மொபைல் காங்கிரஸ் நிகழ்விலேயே போல்டபிள் மாதிரியை அறிமுகம் செய்தது.
செல்பேசி உலகின் அடுத்த கட்டப் புதுமை, போல்டபிள் போன் சார்ந்தே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஹுவேய் நிறுவனம், அமெரிக்கா–சீனா இடையிலான வர்த்தக மோதலில் சிக்கித் தவித்தது. சீனாவுக்கு ஆதரவாக உளவு பார்க்கும் குற்றச்சாட்டின் பேரில் இந்த நிறுவனம் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது, தொழில்நுட்ப உலகில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
கட்டுரையாளர் தொடர்புக்கு:
enarasimhan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago