விசில் போடு 07 - மேனேஜர் எனும் சுனாமி!

By செய்திப்பிரிவு

‘தோட்டா’ ஜெகன்

‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்பார்கள். சொல்லப்போனால், மேனேஜர் அமைவதும் இறைவன் கொடுத்த வரம்தான். இன்னமும் சில இடங்களில் வரம் கொடுக்கும் கடவுளே மேனேஜர்தான். மேனேஜர் என்பவர் தாலி கட்டாத மனைவி. நம்ம வயித்துல திருநீற்றைப் பூசிட்டு, நம்ம வாய்ல இருந்தே லிங்கம் எடுக்கும் சாமியார்.

மாவு ஒண்ணு; தோசை வேற

ஒண்ணாம் வகுப்பை ஒரு வருஷம் படிச்சா, ரெண்டாம் வகுப்பை ரெண்டு வருஷம்தானே படிக்கணும்னு யதார்த்தமா கதைப்பாரு. அப்புறம் ஒண்ணாம் வகுப்பை ஒருத்தன் ஒரு வருஷம் படிக்கிறதுக்கு ரெண்டு பேரு சேர்ந்து படிச்சா, ஆறு மாசத்துலையே முடிக்கலாமேன்னு எக்குத்தப்பா உதைப்பாரு. கரப்பான்பூச்சிய அடிக்க அனுப்புறப்ப கடப்பாரைய எடுத்துத் தருவாரு, காண்டாமிருகத்தைப் பிடிக்கச் சொல்லிட்டு கொசுவலைய கொடுத்தனுப்புவாரு.

ரவா தோசை, ஆனியன் தோசை, பொடி தோசை, புதினா தோசை, பூண்டு தோசைன்னு தோசைல பல வகையிருந்தாலும் மாவு ஒண்ணுதான். அது போல, சேல்ஸ் மேனேஜர், மார்க்கெட்டிங் மேனேஜர், குவாலிட்டி மேனேஜர், எச்.ஆர். மேனேஜர், புரொடக்‌ஷன் மேனேஜர்னு பல மேனேஜர்கள் இருந்தாலும், அவங்க மனசு ஒண்ணுதான்.

ஒவ்வொரு தோசைக்கும் வெவ்வேறு மணம் உண்டு. ஆனா, எல்லா இடத்துலயும் மேனேஜர்களுக்குன்னு ஒரே போல குணமுண்டு. ஃபுல்லா ஏசி போட்ட ஐ.டி. கம்பெனிலேர்ந்து பூப்போட்ட டிசைன்ல நைட்டி விக்கிற கம்பெனி வரைக்கும் எல்லா இடத்துலயும் மேனேஜர்கள், தங்கள் பவரால நம்ம லிவரை அரைக்கும் டேமேஜர்கள்தான்.
லீவு கேட்ப...

வேலை சொல்றதை மட்டுமே வேலையா செய்யறதுதான் மேனேஜர் வேலை. நிலம் முழுக்க புல்லா கிடக்குதேன்னு நம்மளை நெல்லு நடச் சொல்வாங்க. நாத்தைத் தூக்கிக்கிட்டு காத்தாட நாம போனா, வேணாம் முதல் சுத்தியும் கல்லு நடுன்னு சொல்வாங்க. கரண்ட் கம்பத்துல ஏறச் சொல்லிட்டு, கொடி கம்பத்துல இருந்து இறங்கச் சொல்வாரு. டார்கெட்டுன்னு ஒண்ண யார் கண்டுபிடிச்சதுன்னு தெரில. எலிக்குத் தைச்ச ஜாக்கெட்டைக் கொண்டுவந்து யானைக்கு மாட்டி விடுறதுக்குப் பேருதான் டார்கெட். செவுத்துக்குத் தகுந்த கடிகாரம், மாவுக்குத் தகுந்த பணியாரம், இது புரியாத மேனேஜருக்கு நாம டார்கெட்டை ‘அச்சீவ்’ பண்ணலன்னு திட்டுறதுக்கே தேவைப்படும் மாசத்துல ஒரு வாரம்.

அவ்வளவு நேரம் நம்மளைப் பார்க்காத மேனஜரு, அப்பதான் நம்மளைப் பார்ப்பாரு; அவ்வளவு நேரம் வேலையப் பார்த்த நாம, அப்பதான் செல்போன் பார்ப்போம். அப்புறமென்ன? மல்லாந்து தூங்குன ஹைவே தவளையும், மாடியிலிருந்து உருண்ட பித்தளைத் குவளையும் எங்க தப்பிச்சிருக்கு? அய்யா, மேனேஜர்களே, பக்கம்பக்கமா மனப்பாடம் பண்ணி நீங்க திட்டுறதுக்குப் பதிலா, அக்கம்பக்கம் பார்த்துட்டு அறைஞ்சுட்டாவது போயிடுங்க.

மழை பெய்ஞ்சு ஆத்துல தண்ணி போனா நீச்சலு; அதுவே ரோட்டுல தேங்கி நின்னா நமக்கு வரும் காய்ச்சலு. லீவு கேட்டு மேனேஜர் முன் நிற்கிறப்ப, ‘கண்ணா, முதலைக்கு வால்ல பலம், முள்ளம்பன்றிக்குத் தோல்ல பலம், மானுக்குக் கால்ல பலம், ஆனா நமக்கு...’ன்னு அட்வைஸ் பண்ண ஆரம்பிப்பாங்க பாருங்க, நோவுக்கு லீவு கேட்டு போனவன், அதுக்கப்புறம் சாகுற வரைக்கும் லீவே கேட்க மாட்டான்.

மேனேஜர் ஜோக்

மேனேஜர்க்கிட்ட நல்ல பேரு வாங்கணும்னு வேலை செய்யறதெல்லாம் கவர்ல தண்ணி கொண்டு போயி காவிரி ஆற்றை நிரப்புற மாதிரி. கோணூசியில தைக்க வேண்டியதெல்லாம் கொண்டை ஊசில தைச்சுட்டு போய், பரம்வீர் சக்ரா விருது வாங்குற மாதிரி, நெஞ்சை நாலு அங்குலம் நிமித்தி பெருமையா நின்னாலும், ‘புரட்டாசிக்கு முன்னால ஆவணி, புடவைய ரெட்டையா கிழிச்சா தாவணி, சிம்பிள் மேட்டர்ப்பா, இன்னமும் பெட்டரா பண்ணியிருக்கலாமே’ன்னு பேசிட்டு போறவருதான் மேனேஜர்.

என்னடா, தப்பா பண்ணிட்டோம்னு நாம புலம்பறப்ப மட்டுமல்ல, எல்லா வேலையும் காலி, இனி வீட்டுக்குப் போலாம் ஜாலின்னு நாம கிளம்பறப்பவும் டோல்கேட்டுல டோக்கன் போடுறவருதான் மேனேஜர். காலையில இருந்து மாலை வரைக்கும், உடம்புல இருக்கிற ஒட்டுமொத்த பார்ட்ஸும் உடையுற அளவுக்கு வேலைய செஞ்சுட்டு, மூளை உருகி மூக்கு வழியா வழியறதை ‘மன்மதன்’ சிம்பு மாதிரி துடைச்சுக்கிட்டு எந்திரிக்கிறப்பதான், இதை மட்டும் முடிச்சுடுன்னு மந்திரா பேடி மாதிரி சிரிப்பாங்க மேனேஜர்ஸ்.

கால் இல்லாத சேர்ல அரை மணிநேரம் உட்கார்ந்திடலாம், வீல் இல்லாத காரை கூட வீடு வரைக்கும் ஓட்டிடலாம், பால் இல்லாத பாத்திரத்தைக் கிண்டியே பாயாசம் பண்ணிடலாம், இவ்வளவு ஏன்? நூல் இல்லாமகூட நாலு புடவை நெய்திடலாம். ஆனா, இந்த மேனேஜருங்க ஜோக்குன்னு ஒண்ண சொல்வாங்க பாருங்க, அதுக்குச் சிரிக்கிறதுதான் உலகத்துலயே கஷ்டமான மேட்டர். வர கடுப்புக்கு வாயிலையே வெடி வைக்கலாம்னு தோணும். சரி, ‘சேலரி கிரெடிட்’ ஆகலையேன்னு சும்மா உட்கார்ந்துக்குவோம்.

ஆபீஸின் ஆணிவேரே...

மேனஜருங்களுக்குன்னு சில குணங்கள் உண்டு. கடல் தண்ணிய குடிச்ச உடனே உப்புன்னு துப்புற மாதிரி, நாம செஞ்ச வேலையப் பார்த்தவுடனே தப்புன்னு திட்டுறவருதான் மேனேஜர். முக்கியமான முடிவு எடுக்கணும் பத்து மணிக்கு மீட்டிங்ன்னு கூப்பிடுவாங்க.

அரை மணி நேரம் அவங்களே பேசிட்டு, ‘ஸ்கூல் டிஸ்போர்ஸ்’ன்னு அனுப்பிடுவாங்க. மேனஜருங்களுக்கு அட்ஜெஸ்ட்மென்ட் பிடிச்ச அளவுக்கு ஆர்க்யூமென்ட் பிடிக்காது. மேனேஜர்களுக்கு வேலை சொல்லும்போது ‘ஏன்’ என்ற கேள்வி பிடிக்காது, ‘எப்போ’ என்ற கேள்விகளே பிடிக்கும். மேனேஜர்கள் ஒரு விஷயம் சொல்லும்போது தலையை வலம் இடமாக அசைக்கக் கூடாது, வேண்டுமானால் மேலும் கீழும் அசைக்கலாம்.

மேனேஜர்ஸுக்குப் புகழ்ச்சி பிடிக்கும். ‘ஆபிஸின் ஆணிவேரே, அழுக்குப்படாத அண்டர்வேரே, தமிழகம் எனும் மண்ணானது, நீங்கள் தொட்டு பொன்னானது’ன்னு அப்பப்ப அவங்களைப் புகழ்ந்துகிட்டே இருக்கணும். சுனாமி வந்த நாளுலகூட ஸ்விம்மங் அடிச்சு ஆபீஸ் போயிருப்போம், வெள்ளம் வந்தாக்கூடப் பொறுப்பா ஆபீஸ்ல ஒண்டியிருப்போம், புயல் வரும்னு சொல்றன்னைக்குகூட சின்சியரா ஆபீஸ் வந்திருப்போம். ஆனா, என்னைக்காவது நாம லேட்டா போறப்பதான் மேனேஜர் முதல் ஆளா கேட்டைத் திறந்து உள்ள உட்கார்ந்திருப்பாரு.

விதிகளை பின்பற்றணும்

என்னதான் மேனேஜர் மேல கஞ்சன் ஜங்கா அளவுக்குக் கடுப்பு இருந்தாலும், மொத்த அலுவலகத்தையும் கங்காரு குட்டிய சுமக்கிற மாதிரியான அந்தப் பொறுப்பு மேல நமக்கும் ஓர் அரிப்பு இருக்கத்தான் செய்யுது. அதான் நாம துடிப்பா வேலை செய்யவும் தூண்டுகோலா இருக்கு. மேனேஜருக்கும் நமக்கும் உண்டான உறவு, மனைவிக்கும் கணவனுக்கும் இடையிலான உறவு மாதிரிதான். என்ன முன்னதுல வெற்றிபெற வேலை விதிகளைப் பின்பற்றணும், பின்னதுல வெற்றிபெற சேலை விதிகளைப் பின்பற்றணும்!

(சத்தம் கேட்கும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு:
thinkthoatta@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்