‘நவீன மனிதர்கள் தோன்றிய இடம் எது’ என்பது குறித்த ஆராய்ச்சிகள் நீண்ட காலமாகத் தொடர்ந்து வருகின்றன. ஆப்பிரிக்காவில்தான் அது நிகழ்ந்தது என்றாலும், குறிப்பாக எந்த நிலப் பகுதியில் மனிதர்கள் தோன்றினார்கள் என்பதை அறிவியலாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளார்கள்:
ஆப்பிரிக்கக் கண்டத்தின் தெற்கில் உள்ளது போட்ஸ்வானா. இந்த நாட்டின் வட பகுதியில், இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஏரியாக இருந்து, இன்றைக்குப் பாலைவனமாக மாறிவிட்ட மக்கடிக்கடி-ஓகவாங்கோ (Makgadikgadi-Okavango) என்ற பகுதிதான் நவீன மனிதர்களின் தாய்மடி. கோய்சான் (Khoisan) பழங்குடிகளிடம் நடத்தப்பட்ட மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ. ஆய்வுகள் மூலம் இது தெரியவந்துள்ளது.
அறிவியல், வரலாறு இரண்டுக்குமே ஆதாரங்கள் அவசியம். வரலாற்றில் பல்வேறு திரிபுகளையும் கதைகளையும் சிலர் சேர்த்தாலும்கூட, ஆதாரங்கள் மாறுவதில்லை; அறிவியலிலோ திரிபையும் கதைகளையும் நீண்ட காலத்துக்குத் தக்கவைக்க வாய்ப்பில்லை. இதன் காரணமாகத்தான் வரலாற்றைத் தங்களுக்கு வசதியாக மாற்றிக்கொள்ள நினைப்பவர்கள்கூட, அறிவியல் ஆதாரங்களைத் தீவிரமாக எதிர்க்கிறார்கள். மனித இனத்தின் தோற்றம் குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அவற்றுக்கு அறிவியல் தரும் பதில்களும்:
மனித இனம் எங்கே தோன்றியது, நமது மூத்த தாய் - மூதாய் யார்?
மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியது. இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய ஹோமோ சேப்பியன்ஸின் (Homo sapiens) புதைபடிவம் ஒன்று எத்தியோப்பியாவின் ஒமோ கிபிஷ் (Omo Kibish) என்ற இடத்தில் கிடைத்துள்ளது. தற்கால மனிதச் சிற்றினமான ஹோமோ சேப்பியன்ஸ், 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ எரக்டஸில் (Homo erectus) இருந்து தோன்றியது.
இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டியது நீண்டகாலமாகச் சொல்லப்பட்டுவருவதைப் போல், குரங்கிலிருந்து மனித இனம் தோன்றவில்லை; வாலில்லாக் குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் பொது மூதாதை இருந்தது. அதிலிருந்தே மனித இனம் தோன்றியது.
மரபணு ஆதாரங்களும் ஆப்பிரிக்காவே மனித குலத்தின் தாய்மடி என்பதை உறுதிப்படுத்துகின்றன. பண்டைய மனித டி.என்.ஏ. குறியீடுகளைத் தென்னாப்பிரிக்காவின் சான் (San) இன மக்கள், மத்திய ஆப்பிரிக்காவின் பியாகா (Bayaka) இன மக்கள் கொண்டுள்ளனர். எனவே, நமது மூதாய் ஓர் ஆப்பிரிக்கப் பெண்தான்.
அப்படியானால் இன்றைக்கு உலகில் வாழும் மனிதர்களிடையே இத்தனை நிறங்கள், தோற்ற வேறுபாடுகள், உயர வேறுபாடுகள் எப்படி வந்தன?
ஒரு குழு தன் தாய்நிலத்திலிருந்து இடம்பெயர்ந்து வேறொரு நிலப் பகுதியில் குடியேறிய பிறகு, புதிய நிலத்தில் நிலவும் காலநிலை, தட்பவெப்பநிலை, புவியியல் தன்மை ஆகியவற்றுக்கு ஏற்பத் தகவமைத்து வாழத் தொடங்குகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக இப்படி வாழும்போது இயல்பாகவே உடல் தோற்றம், நிறம் போன்றவை சுற்றுச்சூழலுக்கு ஏற்பத் தகவமைத்துக்கொண்டு மாறிவிடுகின்றன. இதைப் பரிணாமவியல் கொள்கையின் ஒரு பகுதியாக டார்வின் விளக்கியிருக்கிறார்.
இன்றைக்கும் ஆப்பிரிக்கர்களின் கம்பீரமான தோற்றம், உடல் வலு போன்றவற்றுக்கு இணையான உடல் கட்டமைப்புகள் உலகில் இல்லை. எத்தனையோ நிறம், மதம், சாதி என மனித இனம் இன்றைக்குப் பிரிந்து கிடந்தாலும், நாம் அனைவரும் ஆப்பிரிக்கர்களே. நமது உடலில் ஆப்பிரிக்க ரத்தம் ஓடுகிறது; மரபணுக்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.
அப்படியானால் உலகின் மற்ற நிலப்பகுதிகளில் மனிதர்கள் தோன்றவில்லையா?
உலகின் மற்ற நிலப் பகுதிகளில் மனிதர்கள் தோன்றவில்லை; ஆப்பிரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்தார்கள்.
பல லட்சம் ஆண்டுகளுக்குமுன் மனித மூதாதையான ஹோமினிட்கள் இடம்பெயர்ந்திருந்தாலும், அது மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே நடந்திருந்தது. அதேநேரம் ஹோமோ சேப்பியன்ஸ் எனப்படும் தற்கால மனித இனம் ஆப்பிரிக்காவில் இருந்து 65,000 ஆண்டுகளுக்குமுன் இந்தியா, வடக்கு ஆசியா உள்ளிட்ட பகுதிகளுக்குப் பரவியது. அந்தக் காலத்தில் இருந்த நிலப் பாலங்கள் வழியாக வெவ்வேறு கண்டங்களுக்கு அவர்கள் நடந்தே சென்றடைந்தார்கள். இந்தப் பரவல் மத்தியத் தரைக்கடல் நாடுகள் வழியாகவே நடைபெற்றிருக்க வேண்டும். ஏனென்றால், நன்கு வளர்ந்த மனித நாகரிகம் அந்தப் பகுதியிலேயே அறியப்பட்டிருக்கிறது.
திடீரென்று அவர்கள் இடம்பெயர்ந்தார்களா?
காரணம் இருந்தது; காலநிலை மாறியிருந்தது. நிலப் பகுதிகளை மிகக் கடுமையான பனி சூழத் தொடங்கியிருந்தது. தற்கால மனித இனத்தின் மக்கள்தொகை 10,000-க்கும் கீழே சென்றுவிட்டது. இதன் காரணமாக உயிர் பிழைக்கும் நோக்கத்துடன் வேறு இடத்துக்கு மனிதக் கூட்டம் இடம்பெயர்ந்தது. யுரேசியா, இந்தியக் கடற்கரை, தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியாவரை கடற்கரை வழியாகவே நடந்து சென்று அவர்கள் பரவினார்கள். அதற்குப் பிறகு காலநிலையும் மேம்பட்டது.
10,000 ஆண்டுகளுக்குமுன் மனித இனம் வேளாண்மையைக் கண்டறிந்தது. இதன் தொடர்ச்சியாக 6,000 ஆண்டுகளுக்கு முன்பு மெசபடோமியா, எகிப்து ஆகிய பகுதிகளில் மனித நாகரிகம் தழைக்கத் தொடங்கியது; மக்கள்தொகை பெருகியது; அரசாட்சிகள் தோன்றின.
பொ.ஆ.மு. (கி.மு.) 3000-த்தில் சிந்துவெளி நாகரிகமும் தழைக்கத் தொடங்கியது. இன்றைய ஈரான் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மனிதர்கள், அதற்கு முன்பே இந்தியாவில் குறைந்த எண்ணிக்கையில் குடியேறியிருந்த மனிதக் கூட்டத்தினருடன் கூடியதால் சிந்துவெளி நாகரிகம் தோன்றியது.
தமிழ்நாட்டில் வாழ்பவர்கள் இந்த நிலத்திலேயே தோன்றியவர்கள் இல்லையா?
ஆப்பிரிக்கக் கண்டத்தைத் தவிர உலகின் மற்ற பகுதிகளில் வாழ்பவர்கள் அனைவரும், ஏதோ ஒரு காலத்தில் அந்த நிலப்பகுதியில் குடியேறியவர்களே. அவர்கள் இடம்பெயர்ந்த காலம் வேண்டுமானால் மாறுபடலாம்.
திருவள்ளூர் மாவட்டம் அத்திரம்பாக்கத்தில் 2.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட கற்கால ஆயுதங்கள் கிடைத்துள்ளன. இந்தியாவில் கண்டறியப்பட்ட மிகப் பழமையான கற்கால ஆயுதங்கள் இவை. அத்துடன், 65,000-50,000 ஆண்டுகளுக்கு முன் கற்கால மனிதர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் சென்னை பல்லாவரம், வடமதுரை, செங்கல்பட்டு, அச்சிறுபாக்கம் போன்ற பகுதிகளில் கிடைத்துள்ளன.
ஆதிச்சநல்லூரில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் இரண்டு வகை மனித மண்டையோடுகள் கிடைத்துள்ளன. ஒன்று ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களுடைய ஆஸ்திரலாய்டு மண்டையோட்டைப் போலவும், மற்றொன்று மத்தியத் தரைக்கடல் பகுதி மக்களின் மண்டையோட்டைப் போலவும் இருந்தன என்று லண்டனைச் சேர்ந்த பேராசிரியர்கள் எலியட் ஸ்மித், ஸக்கர்மேன் ஆகியோர் 1930-லேயே நிரூபித்துள்ளார்.
முதல் வகை மண்டையோடு தற்போதைய தமிழகப் பழங்குடிகளுடன் ஒத்துப்போகிறது. மற்றொன்று தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் திராவிட மக்களின் மண்டையோடு போன்றுள்ளது (மனிதப் பரிணாவியல் வகைப்பாட்டின்படி தமிழ் மக்கள் திராவிடர்கள் என்றே வகைப்படுத்தப்படுகிறார்கள்). மரபியல் ஆய்வுகளும் இதைத் தெளிவுபடுத்துகின்றன. ஆஸ்திரேலிய அபாரிஜினப் பழங்குடிகளின் டி.என்.ஏ., பிரான்மலைக் கள்ளர் டி.என்.ஏ. உடன் ஒத்துப்போவதால், மனிதர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வழியாகவே ஆஸ்திரேலியாவுக்குப் பரவியிருக்க வேண்டும்.
அப்படியானால் தமிழ்நாட்டில் வாழ்பவர்கள் குறைந்தபட்சம் 65,000 ஆண்டுகளுக்கு முன்பு வந்த இனத்தவர்களா?
லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் கற்காலத்தில் தமிழக நிலப் பகுதியில் மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. அந்தக் காலகட்டத்தில் மிகப் பெரிய அளவில் அறிவு வளர்ச்சியை எட்டியிருக்காத அவர்களின் எண்ணிக்கை, குறைந்த அளவிலேயே இருந்தது. வேட்டையாடி, உணவு சேகரிக்கும் வாழ்க்கை முறையையே அவர்கள் பின்பற்றிவந்தார்கள். இன்றைய பழங்குடிகளிடம் அவர்களுடைய மரபுக்கூறு, பண்பாட்டு எச்சங்கள் போன்றவை மிச்சமிருப்பதைப் பார்க்கலாம். கற்கால மனிதர்களின் தொடர்ச்சியாகப் பழங்குடிகளைக் கருதலாம்.
அதேநேரம், சமவெளிப் பகுதிகளில் இன்றைக்குப் பல்கிப் பெருகியுள்ள தமிழ்நாட்டு மக்கள், சிந்துவெளியில் இருந்து இடம்பெயர்ந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள். ஏற்கெனவே கற்காலத்திலிருந்து இங்கு வாழ்ந்துவந்த மனிதர்களுடன் அவர்கள் கலந்தார்கள். அந்தக் கலப்பில் பிறந்தவர்களே இன்றைய திராவிட, தமிழ் மக்கள். வரலாற்று அகழாய்வு ஆதாரங்களும் மரபணு ஆதாரங்களும் இதை உறுதிப்படுத்துகின்றன.
நன்றி: பேராசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தியின் ‘தமிழரும் தாவரமும்’ நூல்
ஹோமினிட் முதல் ஹோமோ எரக்டஸ் வரை
மனித இனத்தின் மூதாதையர்களான ஹோமினிட்கள் (Hominid) 2 கோடி ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் தோன்றினார்கள். 60-80 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட சூழலியல் மாற்றங்களால், ஹோமினிட்களில் ஒரு பகுதியினர் ஆசியா உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தார்கள்.
ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஹோமினிட்களில் இருந்துதான் மனிதனுக்கு மிகவும் நெருக்கமான ஆஸ்ட்ரலோபிதிகஸ் (Australopithecus) இனம் தோன்றியது. 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதச் சிற்றினங்களில் ஒன்றான ஹோமோ ஹபிலிஸ் (Homo habilis) அதிலிருந்து தோன்றியது. இது முதுகுத்தண்டு நிமிர்ந்த ஹோமோ எரக்டஸ் (Homo erectus) என்ற மனிதச் சிற்றினமாக 16 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பரிணாம வளர்ச்சி பெற்றது. ஹோமினிட்களுடன் ஒப்பிடும்போது ஹோமோ எரக்டஸ் இனம் உயரமாகவும், பெரிய மூளை அடங்குவதற்கான பெரிய மண்டையோட்டையும் கொண்டிருந்தது.
பரிணாம வளர்ச்சியில் தற்கால மனிதனுக்கு முந்தைய மனிதச் சிற்றினங்கள் அனைத்துமே இல்லாமலாகிவிட்டன.
- ஆதி வள்ளியப்பன், தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago