சைபர் சிம்மன்
இணையத்தின் அங்கமான வலை, வளர்ச்சியடையத் தொடங்கிய காலத்தில் மென்பொருள் உலகில் ‘ஓபன்சோர்ஸ்’ எனப்படும் லாபநோக்கமற்ற மென்பொருள் இயக்கமும் வேகமாக வளர்ந்துகொண்டிருந்தது. மென்பொருளின் ஆதார அம்சங்கள் ரகசியம் காக்கப்படுவதற்குப் பதில், பொதுவில் பகிரப்பட வேண்டும் என்பதே ஓபன்சோர்ஸின் மைய கோட்பாடு. இது மென்பொருள் உலகில் பகிர்தல் சார்ந்த கூட்டுமுயற்சிக்கு வித்திட்டிருந்தது.
வலையின் வளர்ச்சிக்கு ஓபன்சோர்ஸ் மென்பொருள் பலவிதங்களில் உதவியதுடன், அதன் கோட்பாடும் பெரும் தாக்கம் செலுத்தியது. இப்படி ஓபன்சோர்ஸ் இயக்கத்தின் தாக்கத்துக்கு உள்ளானவர்களில் ஒருவர் ஜிம்மி வேல்ஸ்.
இலவசக் களஞ்சியம்
போமிஸ் (Bomis) எனும் இணைய விளம்பர நிறுவனத்தை நண்பர்களுடன் சேர்ந்து நடத்திக்கொண்டிருந்த வேல்ஸ், இணையக் களஞ்சியம் ஒன்றைத் தொடங்க விரும்பினார். பாரம்பரியக் கலைக்களஞ்சியமான ‘என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா’, மைக்ரோசாப்டின் ‘என்கார்டா’, ‘வேர்ல்டு புக்’ ஆகிவற்றுடன் வேறு சில கலைக்களஞ்சியங்களும் இணையத்தில் அப்போது பயன்பாட்டில் இருந்தன.
இவற்றில் இருந்து மாறுபட்ட ஒன்றை ஜிம்மி வேல்ஸ் உருவாக்க விரும்பினார். தன்னார்வலர்கள் இணைந்து உருவாக்கக்கூடிய இலவசக் களஞ்சியமாக அது இருக்க வேண்டும்; இணையத்தில் உள்ள எவரும் அதில் பங்களிப்பு செலுத்த வேண்டும் என்பவை அவருடைய கனவாக இருந்தது. ஆனால், இது எத்தகைய பரிமாணத்தைக் காணப்போகிறது என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.
கூட்டுக்கனவு
பிற்காலத்தில் ஜிம்மி வேல்ஸ் மட்டுமல்ல, உலகமே சற்றும் எதிர்பார்த்திராத வகையில் ‘கட்டற்ற களஞ்சியமாக’ விக்கிப்பீடியா அதன் இயங்குமுறையால் உருவாகி வளர்ந்தது. கட்டுப்படுத்துவதற்கு மையக் குழு இல்லாமல் தன்னார்வலர்களின் கூட்டுமுயற்சியில் அவர்களின் கூட்டுக்கனவாக விக்கிப்பீடியா வளர்ந்து, இப்படியும் ஒரு தளம் சாத்தியமா என வியக்க வைத்தது.
விக்கிப்பீடியா உருவான விதத்தில் இன்னொரு ஆச்சர்யமும் இருக்கிறது. மக்கள் பங்களிப்புடன் ஒரு இணையக் களஞ்சியத்தை ஜிம்மி வேல்ஸ் உருவாக்க விரும்பிய நிலையில், நூபீடியா (Nupedia) எனும் தளத்தையே முதலில் தொடங்கினார். புத்தாயிரமாண்டில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்தை வழிநடத்த, இணை நிறுவனராக லாரி சாங்கர் என்பவரை வேல்ஸ் சேர்த்துக்கொண்டார்.
நூபீடியா பொதுமக்களும் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கலாம் என்ற வசதியை நூபீடியா கொண்டிருந்தாலும், அந்த கட்டுரைகள் ஆய்வுக்குப் பிறகே வெளியிடத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்காக ஏழு கட்டப் பரிசீலனை முறை உருவாக்கப்பட்டிருந்தது. கட்டுரையைச் சமர்ப்பிப்பதில் தொடங்கி வெளியிடுவதுவரை கடும் நெறிமுறைகளை அது கொண்டிருந்தது.
இது கட்டுரைகள் வெளியாவதைத் தாமதப்படுத்தியது. முதல் ஆறு மாதங்களில் இரண்டு கட்டுரைகளே வெளியாயின. நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் பரிசீலனையில் இருந்தன. இந்த தாமதத்தால் அதிருப்தி அடைந்த வேல்ஸும் சாங்கரும் நூபீடியாவில் சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகள் அனைத்தும் உடனுக்குடன் வெளியிடப்படும் வகையில், ஒரு துணை இணையதளத்தை உருவாக்க விரும்பினார்கள். அதுதான் விக்கிப்பீடியா!
பிறந்தது விக்கிப்பீடியா
பயனாளிகளும் திருத்தங்களைச் (எடிட்) செய்ய வழியமைக்கும் ‘விக்கி’ எனும் சிறப்பு மென்பொருளைக் கொண்டு அது உருவாக்கப்பட்டிருந்ததால், இந்தத் தளத்துக்கு ‘விக்கிப்பீடியா’ என்று பெயர் சூட்டப்பட்டது. 2001-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி விக்கிப்பீடியா பயன்பாட்டுக்கு வந்தது.
தொடக்கத்தில் ஒபன்சோர்ஸ் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்ட மென்பொருளாளர்கள் அதில் ஆர்வத்துடன் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். யார் வேண்டுமானாலும் தகவல்களைச் சேர்க்கலாம் எனும் தன்மை கொண்ட இணையக் களஞ்சியம் என்ற கருத்தாக்கத்தால் ஈர்க்கப்பட்டு ஊடகங்களும் விக்கிப்பீடியா பற்றி செய்தி வெளியிட்டன. இதையடுத்து தன்னார்வலர்கள் விக்கிப்பீடியாவை நோக்கிப் படையெடுத்தனர்.
விக்கிப்பீடியாவின் நம்பகத்தன்மை தொடர்பான கேள்விகள் இருந்தாலும் தன்னார்வர்களின் கூட்டுமுயற்சி, தொடர்ந்து உருவான வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றின் காரணமாக கட்டற்ற மாபெரும் களஞ்சியமாக விக்கிப்பீடியா பிரம்மாண்ட வளர்ச்சி பெற்றது; ஆங்கிலம் தவிர தமிழ் உள்ளிட்ட எண்ணற்ற மொழிகளிலும் இன்றைக்கு அது விரிவடைந்திருக்கிறது!
(வலை வீசுவோம்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: enarasimhan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago