இயற்கை அறிவியல்: தாவரங்களால் பேச முடியும்!

By செய்திப்பிரிவு

ஸ்னிக்தா, தமிழில்: சு. அருண் பிரசாத்

தாவரங்களுக்கு உணர்வும் அறிவும் இருக்கின்றன என்கிறார் பரிணாமவியல் சூழலியலாளர் மோனிகா கக்லியானோ. அறிவியல் சோதனைகளின் விளைவாக, அறிவியல் தரவுகளின் அடிப்படையில் இந்தக் கருத்து உருவானது என்கிறார் அவர். மூளையும் நரம்பு மண்டலமும் இல்லாத அறிவாற்றலைக் கொண்டு தாவரங்கள் செயல்பட முடியும் என்கிறார். ‘Thus Spoke the Plant' (North Atlantic Books வெளியீடு) என்ற பிரபலப் புத்தகத்தை அவர் எழுதியுள்ளார். அவருடனான உரையாடலில் இருந்து சில பகுதிகள்:

விலங்குமொழி வல்லுநராகவும் தாவரங்களின் அறிவை ஆராய்ச்சி செய்பவராகவும் எப்படி மாறினீர்கள்?

மீன்களைப் பற்றி ஆய்வு செய்தபோது இனிமேல் உயிரினங்களைக் கொல்லவோ பலிகொடுக்கவோ கூடாது என்று உணர்ந்தேன். இந்த நெறிமுறை - தார்மிகம் சார்ந்த கட்டுப்பாட்டால், என்னுடைய அறிவியலைக் கருணையுள்ளதாக எப்படி மாற்ற முடியும் என்று யோசிக்கத் தொடங்கினேன். அது என்னை தாவரங்களிடம் கொண்டுவந்தது.

தாவரங்களால் ஆன ‘தாவர சுயசரிதை’ என்று உங்கள் புத்தகத்தைக் குறிப்பிடுகிறீர்கள். தாவரங்கள் பேசுவதை மனிதர்களால் கேட்க முடியுமா?

ஆமாம், அது சாத்தியம்தான். ‘ஏதோ ஒன்று நம்மிடம் பேசுகிறது' என்பதன் உண்மையான பொருள் என்ன, அவை பேசுவதை நாம் எப்படி உணர விரும்புகிறோம் என்பதைப் பொறுத்தது அது. சொற்களைப் பயன்படுத்திப் பேசுவது என்ற மனித வழக்கத்தின்படி, அவை பேசுவதில்லை. உண்மையில் மனிதர்களைத் தவிர வேறு எதுவுமே பேசுவதில்லை. மனிதர்கள் அல்லாத உயிரினங்கள், பல்வேறு உயிரின வடிவங்கள் உள்ளிட்ட மற்ற அனைத்தையும் நேரடியாகப் பார்ப்பது, அவற்றுக்குக் காதுகொடுப்பது, அவற்றை அரவணைப்பது உள்ளிட்ட எந்தச் செயலையும் மனித மையப் பார்வைத் தடுக்கிறது.

ஆனால், அவை பேசுவதைக் கேட்க வேண்டுமென யாரேனும் விரும்பினால், அவை பேசும். தாவரங்களால் கட்டமைக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு இயற்கையிலேயே ஒத்திசைவு கொண்ட உயிரினங்கள் நாம். எனவே, ஏதாவது ஒரு வழியில் அவற்றுடன் நாம் தொடர்புகொள்ள வேண்டியது அவசியம். அப்போதுதான் நாம் எப்படி ஒருவரோடு மற்றொருவர் இணைந்திருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இன்றைய சூழலியல் சீர்கேடுகளுக்கு முக்கியக் காரணம், அவற்றுடன் கொண்டிருந்த உறவை நாம் மறுத்து வருவதுதான்.

அந்தத் தொடர்பை ஒரு மனிதர் எப்படி உருவாக்கிக்கொள்ள முடியும்?

இதற்கு ஒற்றை வழி கிடையாது; ஒவ்வொருவரும் தங்களுடைய வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மனிதர்களுடன் உறவை ஏற்படுத்திக் கொள்வதைப் போன்றதுதான் இதுவும். நமக்கு விருப்பமான சிலருடன் உரையாடுவது மகிழ்ச்சியைத் தரும். அதைப் போலவே, சிலருடன் பேசுவதை நாம் விரும்புவதில்லை.

தாவரங்களை வளர்ப்பவர்கள், அவற்றின் அருகில் இருப்பவர்கள் எந்த நேரமும் அவற்றைக் கவனித்துக் கொண்டிருப்பதால் அவற்றின் மொழியை அறிய முடியும். ஒரு தாவரம் என்ன செய்யும் அல்லது செய்யாது என்ற முன்தீர்மானத்தை முதலில் ஒருவர் கைவிட வேண்டும். பிறகு, மற்றவர் சொல்வதைக் கேட்கும் திறனைப் பெற வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் உடலையும் மனதையும் அமைதிப்படுத்தி, அவை என்ன சொல்ல வருகின்றன என்று கவனிக்கவும் புரிந்துகொள்ளவும் முயல வேண்டும். கருணையோடு அவற்றை அணுகித் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். எல்லா உறவுகளுக்குமே இதுதான் அடிப்படை, இல்லையா?

தாவரங்களுக்கு நினைவு என்பது என்ன? அவற்றின் நடத்தை இயந்திரத்தனமானது அல்ல, அறிவு சார்ந்தது என்று எப்படி நீங்கள் உறுதியாகச் சொல்கிறீர்கள்?

அறிவாற்றலுக்கும் மூளைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அறிவாற்றல் என்பது ‘ஒன்றை அறிவது’. மேலும், அதை வந்தடைவதற்குப் பல்வேறு வழிகள் உண்டு. மொழியின் பார்வையிலிருந்தும்; சிந்திப்பது, கற்பனை செய்வதன் மூலமாகவும்; கற்றல் - நினைவாற்றலுடன் இது தொடர்புடையது. எனவே, ஓர் உயிர் அறிவாற்றலுடன் திகழ்வதற்கு மூளை தேவை இல்லை.

அறிவியல்பூர்வமாக இதை நிரூபிப்பதற்கு இப்போது எங்களிடம் தரவுகள் இருக்கின்றன. தாவரங்கள் ஒன்றோடொன்று பேசுவது மட்டுமல்லாமல், கற்பது, நினைவில் கொள்வது, முடிவெடுப்பது போன்ற திறன்களையும் கொண்டிருக்கின்றன என்பதற்கான தரவுகளும் எங்களிடம் உள்ளன. இவை அனைத்தும் அறிவாற்றலுடன் சம்பந்தப்பட்டவை. முடிவெடுப்பது, கற்றல் ஆகியவற்றுக்கு விஷயங்களைத் தேர்ந்தெடுக்கும் திறன் தேவைப்படுகிறது; இதுவே அறிவாற்றல் என்பதற்கான விளக்கமாகச் சுட்டப்படுகிறது. எனவே, தாவரங்கள் அறிவாற்றல் மிகுந்தவையே.

மனிதர்களே அறிவாற்றலில் உயர்ந்தவர்கள் என்ற கருத்து, இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது; மனிதர்களைப் போல் மூளையும் நியூரான்களும் இருந்தால் அறிவாற்றல் உள்ளவர் என்று நினைக்கிறோம். ஆனால் தாவரங்கள், இன்னும் பிற உயிரினங்களை ஆராய்ந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது இந்தக் கூற்று முரண்படுகிறது. உயிரினங்களின் அறிவாற்றலைப் பற்றிப் பேசும் பல்வேறு கோட்பாடுகளை மறுபரிசீலனை செய்ய இது அழைப்புவிடுக்கிறது. எனவே தாவரங்கள், உயிரினங்களைப் பற்றி ஆய்வு செய்பவர்களுக்கு மட்டுமல்லாமல், மனித மூளையைப் பற்றி ஆய்வு செய்பவர்களும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு இதுவோர் அருமையான காலம்.

மனிதர்களிடம் இருக்கும் ஐந்து உணர்ச்சிகளில் எது தாவரங்களில் தீவிரமாக உள்ளது. தாவரங்களிடம் உள்ள விழிப்புணர்வு உயிரினங்களிடமிருந்து வேறுபட்டதாக இருக்கிறதா?

தாவரங்களுக்கு ஐந்து உணர்ச்சிகளைவிட, அதிக உணர்ச்சிகள் உண்டு. அவற்றின் விழிப்புணர்வு சார்ந்த கேள்விகளுக்கு, இப்போது பதில் சொல்வது கொஞ்சம் கடினம்தான்; எல்லா வகையான உயிரினங்களுக்கும் அந்த உணர்வு எப்படிப்பட்ட அர்த்தத்தைத் தருகிறது என்று இதுவரை நாம் அறியாமல் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், இந்த வேற்றுமைகளைத் தாண்டி, எல்லாவற்றையும் அடிச்சரடாக இணைக்கும் இணைப்பைப் புரிந்துகொள்வது முக்கியமானது.

தாவர நடத்தை பற்றிய இலக்கியப் படைப்புகள் சமீபத்திய ஆண்டுகளில் கணிசமாக உயரத் தொடங்கியிருக்கின்றன. இதற்குக் காரணம் என்ன?

அறிவியலாளர்கள் மட்டுமில்லாமல் தத்துவவியலாளர்கள், கலைஞர்கள் மத்தியிலும் இந்த ஆர்வம் அதிகரித்துள்ளது. நூற்றாண்டுகளாகத் தாவரங்கள் உயிருள்ளவையாகக் கருதப்படவில்லை. ஆனால், சில பத்தாண்டுகளாகத் தாவரங்களை நிந்திப்பதற்கு மனிதர்களுக்கு உரிமை இருக்கிறதா என்ற சொல்லாடல் வளர்ந்துகொண்டிருக்கிறது. தற்போது அவை மதிக்கப்படத் தொடங்கியுள்ளன. தாவரங்களை நோக்கிய நம்முடைய அணுகுமுறையில், இதுவொரு வரவேற்கத்தக்க மாற்றம். கருணைமிக்க, அக்கறையான பண்பாடு உருவாகிக்கொண்டிருக்கிறது. புவியைக் காக்க இது உதவும்.

(நன்றி: ‘Down to Earth’ இதழில் வெளியான நேர்காணல்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்