எங்கேயும் எப்போது 03: கடக்… கடக்.. கடக்…

By செய்திப்பிரிவு

ஹாலாஸ்யன்

மின்விசிறிகளின் ரெகுலேட்டர்கள் (Regulator) எனப்படும் வேகமாற்றிகளில் ‘கடக் கடக் கடக்' சத்தத்துடன் சுழலும் வேகத்தை மாற்றியது நினைவிருக்கிறதா?
சரி, வேகமாற்றிகள் எப்படிச் செயல்படுகின்றன?
மின்விசிறி என்பது அடிப்படையில் ஒரு மின் மோட்டார்தான். ஒரு மின் மோட்டாரை அதற்கு அளிக்கப்படும் மின்சாரத்தின் மின்னழுத்தம் (Voltage), அதிர்வெண் (Frequency) ஆகியவற்றைக் கொண்டு கட்டுப்படுத்தலாம்.

இந்த அதிர்வெண்ணைக் கட்டுப்படுத்தும் கருவிகளின் அளவு, சில நேரம் மின்விசிறிகளைவிடப் பெரிதாக இருக்கும். அதனால் வீட்டுப் பயன்பாட்டுக்கு அவை ஒத்துவராது. மின்விசிறிக்கு அனுப்பப்படும் மின்சாரத்தின் மின்னழுத்தத்தை மாற்ற முடியும். வேகமாற்றிகள் அப்படித்தான் செயல்படுகின்றன.

மின்தடைக் கட்டுப்பாடு

மின்னழுத்தத்தை எப்படி மாற்றுகின்றன என்பதைப் பொறுத்து, வேகமாற்றிகளில் பல வகைகள் உண்டு. முதல் வகை மின்தடையைக் (Resistance) கொண்டு வேகத்தைக் கட்டுப்படுத்துபவை. இவை அளவில் பெரிதாக இருக்கும். மேலும் கீழும் ஓட்டைகள் இருக்கும். மின்சாரத்தைக் கொண்டுசெல்லும் பாதையில் மின்தடைகளைச் சேர்த்து மின்விசிறிக்குச் செல்லும் மின்சாரத்தின் அளவை இது குறைக்கிறது. மின்தடை கூடக்கூட மின்விசிறிக்குச் செல்லும் மின்னழுத்தம் குறையும். மின்தடைக்குச் செல்லும் மின்சாரம் அதிகமாகும்.

இந்த மின்தடைகள் மின்சாரத்தை வெப்பமாக வெளியேற்றுகின்றன. அந்த வெப்பம் வெளியேறத்தான் மேலும் கீழும் ஓட்டைகள். குழாயில் வரும் தண்ணீரைக் குறைக்க, தொட்டியில் இருந்து வரும் இணைப்பில் ஓட்டை போடுவதற்குச் சமமானது இது.

மின்தேக்கிக் கட்டுப்பாடு

அடுத்த வகை, மின்தேக்கிகளைக் (Capacitor) கொண்டு செயல்படுபவை. மின்தேக்கிகள் ஒரு மின்சுற்றில் இணைக்கப்பட்டால் அந்த மின்சுற்றின் மின்னழுத்தம் குறையும். மின்தடைகளுக்கும் இவற்றுக்கும் என்ன‌‌ வித்தியாசம் என்று கேட்டால், இவை மின்சாரத்தை வீணாக்காமல் செயல்படும். மேலும், இவை அளவில் சிறியவை.
இன்னமும் கச்சிதமாக இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் மின்சார அலையில் சில பகுதிகளை வெட்டி, ஒட்டுமொத்தமாக மின்விசிறிக்குச் செல்லும் மின்சாரத்தின் அளவைக் கட்டுப்படுத்தலாம்.

ஆனால், இதைச் செய்ய டிரான்ஸிஸ்டர் போன்ற மின்னணுக் கருவிகள் தேவைப்படும். இந்த வகை மின்னணு வேகமாற்றிகள் சில‌‌ நேரம் மெல்லிய 'ஹ்ம்ம்' போன்ற ஒலியை வெளியிடும். வேறு சில மின்னணுக் கருவிகள் இருந்தால், அவற்றிலும் இவை குறுக்கீட்டை ஏற்படுத்தக்கூடும். அதனால் இந்த வகை வேகமாற்றிகளை உயிர்காக்கும் மருத்துவக் கருவிகள் இருக்கும் இடத்தில் பயன்படுத்தக் கூடாது.

கட்டுரையாளர் தொடர்புக்கு: yes.eye.we.yea@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்