எங்கேயும் எப்போதும் 02: விண்வெளியிலும் சாப்பிடுவதன் ரகசியம்

By செய்திப்பிரிவு

ஹாலாஸ்யன்

‘தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் முடியாது' என்று ஏதேனும் செய்ய முடியாத அல்லது நடக்காத காரியத்தைப் பற்றிச் சொல்வார்கள் அல்லவா? உண்மையில் தலைகீழாக நின்று தண்ணீர் குடிப்பது முடியாத காரியமெல்லாம் அல்ல. நாம் உண்ணும் உணவோ அருந்தும் நீரோ, இரைப்பைக்குள் செல்ல ஈர்ப்புவிசை தேவையில்லை.

கிட்டத்தட்ட தீர்ந்து போகப் போகிற ஒரு பற்பசைக் குழாயை, அதன் அடியில் இருந்து பிதுக்கி எடுத்து பல் துலக்குவோம்தானே. குழாயில் இருக்கும் பற்பசையை அதன் பின்னால் அழுத்தி முன்னோக்கி நகர்த்திதான் நாம் பிதுக்குகிறோம். அதே போன்ற ஒரு விசையைப் பயன்படுத்திதான் உணவு நம் வாயிலிருந்து இரைப்பைக்கும், இரைப்பையில் இருந்து சிறு குடலுக்கும் நகர்கிறது.

தசைச்சுருக்க அலை

உணவுக் குழாயைச் சுற்றி இருக்கும் தன்னிச்சைத் தசைகள் (Involuntary muscles) வாயிலிருக்கும் உணவை விழுங்கியவுடன், உணவுக் கவளத்தின் பின்னிருந்து தசையை அழுத்தத் தொடங்குகின்றன. இது ஒரு அலைபோல உருவாகி உணவு இரைப்பையைச் சென்றடையும்வரை தொடர்கிறது. இந்த அலைகளைத் ‘தசைச்சுருக்க அலைகள்’ (Peristaltic waves) என்று அழைக்கிறார்கள். நாம் விழுங்கிய உணவு அலையின் வேகத்தில் பயணிப்பதாலும் அல்லது அலையைவிட வேகமாகப் பயணிப்பதாலும், அந்தத் தசைச்சுருக்க அலை இரைப்பையைச் சென்றடைந்துவிடுகிறது.

இடையே உணவு எங்கேனும் தேங்கி நின்றுவிட்டால், அதன் பின்னிருந்து இன்னொரு அலை புறப்பட்டு உணவை நகர்ந்தி இரைப்பைக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. இந்தத் தசைச்சுருக்க அலையை Medulla oblongata என்ற மூளையின் அடித்தண்டு கட்டுப்படுத்துகிறது. உணவு நகர்ந்துவிட்டதா இல்லையா என உணவுக் குழாயைச் சுற்றி இருக்கும் நரம்புகள் தொடர்ச்சியாக மூளைக்குத் தகவலை அனுப்பிக்கொண்டே இருக்கின்றன.

ஈர்ப்பு இல்லாத இடத்தில்...

நாம் உண்ட உணவு இரைப்பையில் அமிலம், பிற நொதிகளுடன் கலந்து அரைக்கப்பட்டுக் கூழாக மாற்றப்படுகிறது. அதன் பின்னர் உணவுக் குழாயில் நடக்கும் தசைச்சுருக்கம் போன்ற, ஆனால் குறைந்த தொலைவு பயணிக்கிற தசைச்சுருக்க அலைகள் மூலம் சிறுகுடலுக்கு நகர்த்தப்படுகிறது.

இது செரிமான மண்டலத்தில் மட்டும் அல்ல, உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் முக்கிய அமைப்பான நிணநீர் (Lymph) சுரப்பிகளில் இருந்து நிணநீர்க் குழாய்கள் சுற்றி இருக்கும் தசைகளின், தசைச்சுருக்க அலைகள் வழியாகவே உடலெங்கும் கடத்தப்படுகிறது.

இந்தத் தசைச்சுருக்க அலை இருப்பதால்தான் விண்வெளியில், விண்வெளி வீரர்களால் உணவருந்த முடிகிறது. ஈர்ப்புவிசைதான் உணவை நகர்த்துகிறது என்றால் மனிதர்களால் விண்வெளியில் தாக்குப்பிடிக்கவே முடியாது.

கட்டுரையாளர்,
இளம் அறிவியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: yes.eye.we.yea@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்