நாம் எல்லாருமே நந்தனார்தான்!

By வா.ரவிக்குமார்

சேக்கிழார் 63 நாயன்மார்களின் அருள் பெருமைகளை பெரியபுராணமாக எழுதினார். அதில் ஒருவரான திருநாளைப்போவார் என்று அழைக்கப்படும் நந்தனாரின் வாழ்க்கையை, நந்தனார் சரித்திரமாக கோபாலகிருஷ்ண பாரதி எழுதினார்.

இந்த நந்தனார் சரித்திரம் திரைப்படமாக எடுக்கப்பட்டபோது அதில் நந்தனாராக ‘இசை முரசு’ தண்டபாணி தேசிகர் பாடி நடித்தது இன்றளவுக்கும் பிரபலம். நந்தனாரின் சரித்திரத்தை `வருகலாமோ' என்கிற பெயரில் ஓரங்க நாடகமாக பிரபல நடிகையும் அரங்கக் கலைஞருமான கலைராணி அண்மையில் நிகழ்த்தினார்.

கலைராணி நெகிழ்ச்சியோடும் கழிவிரக்கத்தோடும் வருகலாமோ பாடலின் வரிகளைப் பாடி நடித்தது ரசிகர்களை உருக்கியது. அவரின் உடல்மொழியும் குரல் வளப் பயிற்சியும் நாடகத்தை மெருகேற்றுவதில் முக்கியப் பங்கு வகித்தன.

“பரதநாட்டியத்தில் பதம் ஆடுவதற்கும், குரலிசைக் கலைஞர்கள் உருக்கமாகப் பாடுவதற்கும் அமைந்த கோபாலகிருஷ்ண பாரதியின் நந்தனார் சரித்திரத்தை ஓரங்க நாடகமாக மாற்றிப்பார்க்கலாம் என்று நான் நினைத்தேன்.

தில்லை நடராஜரைப் பார்க்கப் போகும் தாழ்ப்பட்ட குலத்தில் பிறந்த நந்தனாரைக் கோயிலுக்குள் விடுவதில்லை. நந்தனாரின் கனவில் தோன்றிய இறைவன் அவரைக் கோயிலுக்குள் வரச் சொல்கிறார். ஆனால் கோயிலில் அவரை விடாமல் வழிமறிக்கும் உயர்த்திக்கொண்ட சாதியினர், "எங்களின் கனவிலேயே வராத இறைவன் உன்னுடைய கனவில் வந்து உன்னைக் கோயிலுக்கு அழைத்தாரா?" என்று ஏளனம் பேசுகின்றனர்.

நந்தனாரைத் தீக்குண்டத்தில் நடந்துவரச் சொல்கின்றனர். அப்படி தீக்குண்டத்தில் நடக்க முற்படும் நந்தனாரை இறைவன் ஆட்கொள்கிறார். இதுதான் நந்தனார் சரித்திரம்.

இறைவனின் சந்நிதிக்குள் போவதற்குப் போராடும் நந்தனாரைப் போல்தான் பெண்களும் சமூக ரீதியாகத் தாழ்த்தப்பட்டு தங்களின் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றனர் என்பதை இந்த நாடகத்தின் மூலமாக வெளிப்படுத்துகிறேன். பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற முறையில்தான் பாடுவார்கள். இந்தப் பாடலின் தொடக்கமான `வருகலாமோ' என்பதில் எனக்கு இஷ்டமில்லை.

நீ வர்றலேன்னா எனக்கு அதைப் பற்றி கவலையில்லை. நான் வருவேன். ஆனால் சரணத்தில் வரும் `பூமியில் புலையனாய்ப் பிறந்தேனே / ஒரு புண்ணியம் செய்யாமல் இருந்தேனே' என்று வருகிறது. இந்த வரிகளைப் பல்லவியாக இந்த நாடகத்தில் பாடினேன்.

அப்படியென்ன நான் ஒரு புண்ணியம் வாழ்க்கையில் செய்யாமல் இருந்தேன் என்னும் தேடலை நந்தனாராக நான் சமூகத்தில் தேடிப் பார்க்கிறேன். அரங்கத்தில் ரசிகர்களோடு இணைந்தும் தேடுகிறேன். நாம் ஒவ்வொருவருக்குமே ஒரு தேடல் இருக்கிறது. அதைத்தான் இந்த நாடகத்தின் மூலமாக நான் வெளிப்படுத்துகிறேன்" என்றார்.

இந்த நாடகத்தை கலைராணி வெவ்வேறு நிலப்பரப்புகளில் 99 முறை நிகழ்த்தியிருக்கிறார். கல் உடைக்கும் குவாரியில், வயலில், குளத்தில், திருவண்ணாமலை தேரடியில் முச்சந்தியில்கூட நிகழ்த்தியிருக்கிறார். எழுத்தாளர் அம்பை மிசோரமில் நடத்தும் மூன்று நாள் கலை நிகழ்ச்சியிலும் பிப்ரவரி 26 அன்று இந்த நாடகத்தை கலைராணி நிகழ்த்தவிருக்கிறார்.

- ravikumar.cv@hindutamil.co.in

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE