மார்கழி இசை நாட்டிய விழா: ஒரு கண்ணோட்டம்

By வா.ரவிக்குமார்

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்றார் கிருஷ்ண பரமாத்மா. இந்த மார்கழி மாதத்தில் சென்னை யின் பல சபாக்களில் நடக்கும் பெருமிதமான இசை, நாட்டியம், நாமசங்கீர்த்தனம், நாட்டிய நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கவும் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்க்கவும் உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்களை இந்தியாவுக்கு ஈர்த்துவரும் கலாச்சாரப் பெருமிதமாகத் திகழ்கிறது மார்கழி இசை நாட்டிய விழா. அதில் பக்தி சார்ந்த சில நிகழ்வுகளைப் பற்றிய பதிவு இது:

# மழலைகளின் குரலில் மலர்ந்த மார்கழி

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலைச் சுற்றியிருக்கும் நான்கு மாட வீதிகளிலும் மார்கழி வீதி பஜனையை 19ஆம் நூற்றாண்டில் தொடங்கிய புகழுக்கு உரியவர் சேஷாசாரி. அந்தக் காலத்தில் புகழ்பெற்ற வழக்கறிஞரான இவர் அன்னி பெசன்ட்டின் நண்பருமாவார். இவரைத் தொடர்ந்து 1930களில் மார்கழி வீதி பஜனையை பாபநாசம் சிவன் அவரின் மூத்த வயதிலும் பாபநாசம் சிவன் பஜன் மண்டலி குழுவின் மூலமாக பஜனை சம்பிரதாயத்தைப் போற்றி வளர்த்தார்.

இந்த பஜனை சம்பிரதாயம் வட இந்தியாவில் சைதன்ய மகாபிரபுவால் தொடங்கப்பட்டது. தென்னிந்தியாவில் பஜனை சம்பிரதாயத்தை போதேந்திர சுவாமிகள், மருதாநல்லூர் சத்குரு சுவாமிகள், திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் ஆகிய அருளாளர்களால் உண்டாக்கப்பட்டது. தற்போது, கர்னாடக இசைப் பாடகர் சாகேத ராமன் மழலைகளை ஒன்றிணைத்து இந்த பஜனை சம்பிரதாயத்தை மயிலை மாட வீதிகளில் நடத்திவருகிறார். தினம் தினம் மழலைகளின் குரலில் ஆண்டாள் அருளிய திருப்பாவையில் மலர்கிறது மார்கழி!

# எப்போ வருவாரோ...

இசைக் கச்சேரிகளில் மிகவும் பிரபலமான பாடல்கள், நிகழ்ச்சிகள் நடக்கும்போது நடந்த சுவையான சம்பவங்களை கரோனா பேரிடர் காலத்தில் ‘ஆன் தட் நோட்’ என்னும் பெயரில் ஒரு சிறுகதையின் நேர்த்தியோடு யூடியூபில் பதிவேற்றி வந்தார். கர்னாடக இசைப் பாடகர் சஞ்சய் சுப்பிரமணியன். தற்போது கர்னாடக இசைத் துறையில் மேதைகளாக விளங்கும் கலைஞர்களைப் பற்றிய சுவையான அனுபவங்களை ஆன் தட் நோட் சீசன்2இல் பகிர்ந்து கொள்கிறார் சஞ்சய்.

இணையச் சுட்டி: shorturl.at/duXY6

# நாட்டியத்தில் மிளிர்ந்த அட்ட வீரட்டான தலங்கள்

பாரதிய வித்யா பவனில் கனக சபை நாட்டியப் பள்ளியின் நிறுவனர் டாக்டர் சசிரேகா ராம்மோகனின் படைப்பில் உருவான ‘தென்னாடுடைய சிவனே போற்றி’ என்னும் நாட்டிய நாடகம் நடந்தது. ஈசன் எட்டுத் திருத்தலங்களில் நிகழ்த்திய மற அருளாடலை (அட்ட வீரானங்களில்) அருமையை வெளிப்படுத்திய நாட்டிய நாடகமே தென்னாடுடைய சிவனே போற்றி.

* பிரம்மனின் அகந்தை அழிய அவரது தலையைக் கிள்ளிய நிகழ்வு நடந்த திருக்கண்டியூர்.
* அந்தகனை அழித்த திருக்கோவிலூர்.
* மன்மதனை எரித்த திருகுறுக்கை.
* ஜலந்தரனை அழித்த திருவிற்குடி.
* தட்சன் யாகத்தை அழித்த கீழப்பரசலூர் (புராணப் பெயர் திருப்பறியலூர்).
* திரிபுர அசுரர்களின் முப்புரம் எரித்த திருவதிகை.
* பாலகன் பக்தன் மார்க்கண்டேயனை எமனிடமிருந்து காப்பாற்ற சிவன், காலனைக் காலால் உதைத்த திருக்கடையூர்.
* தாருகாவனத்து முனிவர்களின் ஆணவத்தை ஒடுக்கிய திருவழுவூர்.

டாக்டர் சசிரேகா ராம்மோகனின் சிந்தனையில் உதித்த இந்த நாடகக் கருவுக்கு, அவரிடம் நாட்டியம் பயின்ற மாணவர்களும் மாணவிகளும் சிறப்பான காட்சி வடிவம் கொடுத்தனர். நாட்டிய நாடகத்தை எழுதிக் கொடுத்தவர் பேராசிரியர் ரகுராமன். இசையமைத்தவர் ராஜ்குமார் பாரதி.

# மங்கள இசைக் கலைஞர்களுக்கு விருதுகள்

நாகஸ்வர, தவில் கலைஞர்களுக்குக் கடந்த இரு ஆண்டுகளுக்கும் சேர்த்து பல சபாக்களில் விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன.
* மியூசிக் அகாடமியின் சங்கீத கலா ஆச்சார்யா விருதுக்கு கீழ்வேளூர் என்.ஜி.கணேசன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
* மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் ‘கிளாரினெட்’ ஏ.கே.சி. நடராஜன், தவில் வித்வான் கொங்கம்பட்டு ஏ.வி. முருகையன், நாகஸ்வர தம்பதியினர் ஷேக் மெஹபூப் ஷுபாணி, காளி ஷாபி மஹபூப் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
* சங்கீத நாடக அகாடமி விருது - ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளை, தவில் வித்வான் தஞ்சாவூர் கோவிந்தராஜன், நாகஸ்வர இணையர்கள் காசிம், பாபு, இடும்பவனம் பிரகாஷ் இளையராஜா ஆகியோர் பெற்றிருக்கின்றனர்.

என்.ஜி.கணேசன்


* ஸ்ரீ பார்த்தசாரதி சபா சென்னை - கோட்டு வாத்தியம் நாராயண ஐயங்கார் விருது - நாகஸ்வர தம்பதியினர் ஷேக் மெஹபூப் ஷுபாணி, காளி ஷாபி மஹபூப் ஆகியோர் பெற்றனர். பாலக்காடு மணி ஐயர் விருது தவில் வித்வான் மன்னார்குடி வாசுதேவனுக்கு வழங்கப்பட்டது.
* இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை சார்பாக, தவில் வித்வான் பாலசுப்ரமணியனுக்கு இசைக்கடல் விருது.
* நாரத கான சபா திருநெல்வேலி பி சுப்ரமணியர் விருது - தவில் வித்வான் வேலூர் வெங்கடேசன்.

# வேரைத் தாங்கிய விழுதுகள்

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் வழங்கிய 20ஆவது ஆண்டு நாட்டிய தர்ஷன் விழாவில் தஞ்சை நால்வர் வழிவந்த கே.பி.கிட்டப்பா பிள்ளையின் பேத்தி சாருமதி சந்திரசேகரன் வழங்கிய நாட்டிய நிகழ்ச்சி பாரம்பரியத்தின் பெருமையைப் போற்றும் வகையில் இருந்தது. தஞ்சை நால்வர்கள் தங்களின் குருவான முத்துஸ்வாமி தீட்சிதருக்குக் குரு காணிக்கையாக இயற்றிய குருஸ்துதிக்கு மேன்மையான நடன முத்திரைகளால் பெருமைசேர்த்தார் சாருமதி.

சாருமதி

பெரும் பாலும் ஆலய சம்பிரதாயங்களைத் தழுவிய அக்னி சந்தி கவுத்துவம், ராஜமன்னார்குடி ராஜகோபால சுவாமி மீது தஞ்சை நால்வர் எழுதிய பதவர்ணம், வைத்தீஸ்வரன்கோயில் சுப்புராமய்யர் எழுதிய ‘நேற்றந்தி நேரத்திலே’ என்னும் பாடலுக்கும் பக்தியை வெளிப்படுத்தும் சிருங்காரத்துடன் நடனம் ஆடினார். நாட்டியக் கலாநிதி குரு கல்யாணசுந்தரத்தின் பேத்தி ஸ்ருதி நடனகுமாரின் பரதநாட்டியமும் பாரம்பரியத்தின் செழுமையைக் காப்பாற்றும் வகையில் அமைந்திருந்தது.

ஸ்ருதி

‘கைத்தலம் நிறை கனி’ என்னும் அருணகிரியாரின் திருப்புகழ் பாடலுக்கு நேர்த்தியான நடனத்துடன் தொடங்கியது ஸ்ருதியின் அன்றைய நிகழ்ச்சி. தொடர்ந்து தஞ்சை நால்வரில் ஒருவரான சிவானந்தம் தோடி ராகத்தில் அமைத்திருந்த வர்ணத்தை சிலிர்க்கவைக்கும் அனுபவத்துடன் ஆடினார். கிருஷ்ண கர்ணாம்ருத ஸ்லோகத்துடன் பக்திமயமான ஒரு நாட்டிய அனுபவத்தை ரசிகர்களுக்கு ஸ்ருதி அளித்தார்.

# திரையின்வழி பக்தி

கர்னாடக இசை ஆர்வலரும் இசைக் கருவிகளை உருவாக்கும் கைவினைஞர்களுக்கு பர்லாந்து பெயரில் விருதுகள் வழங்கிவருபவருமான லலிதா ராம், கர்னாடக இசையின் பல்வேறு முக்கியமான தருணங்களை ஆவணப்படுத்துபவர். இவர் திரைப்படங்களில் கர்னாடக இசையை எப்படியெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை சுவாரசியமான தகவல்களுடன் திரையில் மலர்ந்த ராகங்கள் என்னும் தலைப்பில் யூடியூபில் பதிவேற்றிவந்தார். தற்போது இதன் இரண்டாம் பகுதியை தொடங்கியிருக்கிறார்.

கர்னாடக இசையில் அமைந்த கிறிஸ்தவப் பாடல்கள் மிகவும் அரிதானவை. அந்த வகையில் 1956இல் வெளிவந்த புண்ணியவதி என்னும் திரைப்படத்தில் புரட்சிதாசன் எழுதிய ‘கனி ஊறும் அமுதான இதயம்’ என்னும் பாடலை சங்கராபரணம் ராகத்தில் வி.தட்சிணாமூர்த்தி அமைத்திருக்கும் நேர்த்தியையும் அந்தப் பாடலை எம்.எல்.வசந்தகுமாரி பாடியிருக்கும் அழகையும் அருமையாக விளக்கியுள்ளார் லலிதா ராம்.

இணையச் சுட்டி: https://bit.ly/3jow2rO

# அமெரிக்கப் பாடகரின் தமிழ் வெளிச்சம்!

அனிருத் ராஜா அமெரிக்காவாழ் இந்தியர். கடந்த ஐந்து ஆண்டுகளாக டிசம்பர் இசை விழாவில் பங்கெடுப்பதற்காகவே சென்னைக்கு வருபவர். இந்த ஆண்டும் சில கச்சேரிகளை முக்கியமான சபாக்களில் நடத்தியிருக்கிறார். இவரின் குரு சந்தீப் நாராயண். கச்சேரிக்கான ரசிகர்கள் விரும்பும் பாடல்களை மிகவும் நேர்த்தியாகத் தேர்ந்தெடுத்துப் பாடுவதிலும் கச்சேரியைத் தகுந்த முறையில் திட்டமிடுவதிலும் இவரின் திறமை பளிச்சிடுகிறது.

அழகா அழகா, தாயே திரிபுர சுந்தரி, குலசேகர ஆழ்வாரின் பாசுரம், பெரியாழ்வாரின் பாசுரம், ஆண்டாளின் பாசுரம் எனத் தன் கச்சேரிகளில் தமிழுக்கும் உரிய முக்கியத்துவம் அளித்துப் பாடுகிறார். உச்சரிப்பு, மனோதர்மம் அனிருத்தின் இசையில் மெச்சத்தக்க வகையில் இருக்கிறது. அடுத்துவரும் இசை விழாக்களில் கவனிக்கத்தக்க பாடகராகும் வாய்ப்பும் இவருக்குப் பிரகாசமாக இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்