பேரன்பையும் நல் சமாதானத்தையும் உலகெங்கும் பரப்பும் கிறிஸ்துமஸ்

By செய்திப்பிரிவு

பல்வேறு மதங்களையுடைய நமது நாட்டில் ஒரு சில பண்டிகைகள் மட்டுமே மத வேறுபாடுகளைக் கடந்து அனைவராலும் கொண்டாடப்படுகிறது. மதச்சார்பற்ற சிறந்த கலாச்சாரத்தை நோக்கிய நமது நாட்டின் பண்பாட்டுப் பயணம் இது. இத்தகைய பண்டிகைகளுள் கிறிஸ்துமஸ் பண்டிகையும் ஒன்று.

கிறிஸ்துமஸ் பண்டிகையை, கிறிஸ்த்தவர்கள் தங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் என்று ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டும், அன்பை வெளிப்படுத்தும் விதமாகப் பரிசுப் பொருட்களைப் பரிமாறியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். ஏழை எளியோருக்கு உதவிகளைப் பரிசாக வழங்கி மகிழ்விப்பதும் இப்போது அதிகரித்து வருவதில் இப்பண்டிகை சிறப்பிடம் வகிக்கிறது.

இயேசுவின் பிறந்தநாள்

கிறிஸ்தவ சமயத்தின் தோற்றத்துக்குக் காரணமானவரான இயேசுவின் பிறந்தநாள் உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்களால் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. டிசம்பர் மாதம் என்றாலே கிறிஸ்துமஸ் மாதம் என்று நினைவுகூருமளவிற்கு இப்பண்டிகை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

இயேசுவின் பிறந்தநாள், இயேசு பிறந்து சுமார் 300 ஆண்டுகளுக்குப் பிறகே தேவாலயங்களில் கொண்டாடப்பட்டது. ஆனாலும், 19ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே அது உலகம் முழுவதும் பொதுமையான விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசுவின் பிறப்பால் வாழ்வில் இன்னல்கள் யாவும் நீங்கி சமாதானம் பெருகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்புமே இதற்குக் காரணம்.

கிறிஸ்துமஸ் மர விழா

பொதுவாக, டிசம்பர் மாதம் என்றாலே கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் மாதம் என்று நினைவுகூருமளவிற்கு இப்பண்டிகை உலகம் முழுவதும் மிகவும் கோலாகலமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இயேசுகிறிஸ்துவின் பிறப்பு டிசம்பர் 25 ஆம் தேதி கொண்டாடப்படுவதில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இம்மாதம் முழுவதும் தேவாலயங்கள் மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிலையங்களிலும் பல்வேறு பொது நிறுவனங்களிலும் இவ்விழா கிறிஸ்துமஸ் மர விழா என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இம்மர விழா 15 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவத்தில் சீர்திருத்தக் கிறிஸ்தவம் என்ற மிகப் பெரிய பிரிவு மாற்றம் ஏற்படக் காரணமான மார்டின் லூதர்கிங் என்பவரால் ஆரம்பமானது.

மார்டின் லூதர்கிங்

மார்டின் லூதர்கிங் ஒரு ஜெர்மானியப் பாதிரியார்.இவர் டிசம்பர் மாதம் ஒன்றில் பனி படர்ந்த ஜெர்மனின் சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த ஓக் மரங்களின் நடுவில் வெண்பனி படர்ந்திருந்த ஃபிர் என்ற ஒருவகை மரம் வெளிச்சத்தில் மிக அழகாக ஒளிர்வதைக் கண்டார். அதை அவர் ஓர் இறை தரிசனமாகக் கருதி அந்தக் காட்சியைத் தன்னுடைய நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

அடுத்த இரு வாரங்களில் வந்த கிறிஸ்துமஸ் தினத்துக்கு முதல் நாள், தேவாலய வளாகத்தில் நின்றுகொண்டிருந்த அதேபோன்றதொரு ஃபிர் மரத்தை,தொங்கும் மெழுகுவர்த்திக் கூண்டுகளால் அலங்கரித்து நண்பர்களுடன் அந்தக் காட்சியைக் கண்டு ரசித்தார் மார்டின் லூதர். அனைவராலும் விரும்பப்பட்ட அந்த வழக்கம் அதன் பிறகு ஜெர்மனி முழுவதும் பரவத் தொடங்கியது. பின்னர் 16-ம் நூற்றாண்டில் உலகின் பல நாடுகளுக்கும் இது பரவியது.

பெருகும் ஆனந்தம்

கிறிஸ்துமஸ் மரவிழா ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழாவின் முன்னேற்பு விழாவாக நடைபெற்று மக்கள் வாழ்வில் ஆனந்தத்தை அளவில்லாமல் கொடுத்து வருகிறது. கிறித்தவத்தின் கொள்கைகளுள், அனைவர் மீதும் அன்பு செலுத்த வேண்டும் என்பதும், உலகச் சமாதானத்தை வலியுறுத்துவதும் மிக முக்கியமானவை.

இந்நன்னாளில் மனிதக் குலம் முழுவதும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, பேரன்பையும் நல் சமாதானத்தையும் ஏற்படுத்தட்டும்.

- கட்டுரையாளர், எழுத்தாளர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE