லைலத்துல் கத்ர் சிறப்புக் கட்டுரை: நன்மைகளைப் பன்மடங்காக்கும் இரவு

By நிஷா

இறை அருளின் ஆற்றல் வாய்ந்த இரவு என்று கருதப்படும் லைலத்துல் கத்ர் இன்றிரவு கொண்டாடப்படுகிறது. லைல் என்றால் இரவு, கத்ர் என்றால் சிறப்பு, கண்ணியம் என்று அர்த்தம். சிறப்பும் கண்ணியமும் மிகுந்த இந்த இரவே இஸ்லாமிய நாட்காட்டியின் புனிதமான இரவு. ஆயிரம் மாதங்களுக்கும் மேலானதாகக் கருதப்படும் இந்த இரவில் செய்யப்படும் நன்மையின் பலன் பன்மடங்கு உயர்வானது.

இந்த இரவில்தான், இறைத்தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்களுக்குப் புனித குர்ஆனின் வசனங்கள் அருளப்பட்டன. ரமலான் மாதத்தின் கடைசி பத்து நாட்களில் வரும் ஒற்றைப்படை நாட்களின் இரவுகள் லைலத்துல் கத்ர் எனக் கருதப்படுகின்றன. இருப்பினும் பொதுவாக, புனித ரமலான் மாதத்தின் 27வது நாளே லைலத்துல் கத்ர் என உலகெங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது; கொண்டாடப்படுகிறது.

இறை ஆற்றலால் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கும் இந்த இரவின் நீளம் மற்ற இரவுகளின் நீளத்தை விட நீண்டதில்லை. அதனால்தான் என்னவோ இந்த இரவின் ஒரு நொடியைக் கூட இஸ்லாமியர்கள் வீணடிக்க விரும்புவது இல்லை. இந்த இரவில் அவர்கள் தூக்கத்தைத் தவிர்த்து, திரு குர்ஆனை ஓதி, தொழுகையில் ஈடுபட்டு, இறை வழிபாட்டில் மூழ்கி, ஆன்மிகத்தில் திளைத்து, லயித்து இருப்பர். இந்த இரவில் மேற்கொள்ளப்படும் இத்தகைய வழிபாடு பாவங்களிலிருந்து விடுதலை அளிக்கும் என்பது நம்பிக்கை.

1000 மாதங்கள் நாம் வாழ்வோமா என்பதே கேள்விக்குறி. ஆனால், இந்த ஒரு இரவில் நாம் செய்யும் நற்செயலுக்கு, 1000 மாதங்கள் நாம் செய்யும் நன்மைகளின் பலனை இறைவன் நமக்கு அள்ளி வழங்குகிறான். நபி (ஸல்) அவர்களும், ரமலான் மாதத்தின் மற்ற 20 நாட்களை விடக் கடைசிப் பத்து நாட்களில் அதிக இறை வணக்கத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபி (ஸல்) அவர்களே லைலத்துல் கத்ர் இரவுகளில் இப்படி அதிக வழிபாடும் நன்மைகளும் செய்திருக்கும்போது, நம்மைப் போன்றவர்கள் எவ்வளவு அதிகம் நன்மைகளிலும் வழிபாட்டிலும் ஈடுபட வேண்டி இருக்கும்?

இந்தச் சிறப்பான இரவில் தொழுவது, குர்ஆன் ஒதுவது, பாவமன்னிப்புத் தேடுவது, தர்மம் செய்வது போன்ற நல்ல காரியங்களில் ஈடுபட்டு நம் வாழ்வுக்குச் சிறப்பு சேர்ப்போம். அது நமக்கு மட்டுமல்லாமல்; நம்முடைய சுற்றத்துக்கும் சேர்த்துப் பெருத்த நன்மைகளை அளிக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE