முல்லா கதைகள்: அனைவரையும் திருப்திப்படுத்த முடியாது

By முகமது ஹுசைன்

ஒரு கொடிய கோடைகாலம் அது. நஸ்ரூதீன் முல்லா தன்னுடைய மகனுடன் அருகிலிருக்கும் கிராமத்துக்குச் சென்றுகொண்டிருந்தார். முல்லாவின் மகன் அவர்களுடைய கழுதையின் மீது அமர்ந்தபடி வந்தார். மகனைப் பின்தொடர்ந்து சுட்டெரிக்கும் வெயிலில் முல்லா நடந்து சென்றார். அவர்கள் சென்ற பாதையில் இரண்டு பெண்கள் எதிர்ப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் மற்றவரிடம், “அடக் கொடுமையே! இளமைக்கு வந்த சோதனையைப் பார்! வயதான தந்தை வெயிலில் நடக்கிறார்; அதைச் சிறிதும் சட்டை செய்யாமல், அந்தச் சிறுவன் நிம்மதியாகக் கழுதையின் மீது சவாரி செய்கிறான். அற்புதம்! அற்புதம்!” என்று சொன்னது அவர்களுக்கும் கேட்டது.

மகனுக்கு ஏற்பட்ட அவமானம்

முல்லாவின் மகனுக்கு வெட்கமும் கோபமும் ஒருங்கே ஏற்பட்டன. "அப்பா," என்று அவன் எரிச்சலுடன் கூச்சலிட்டான். "கழுதையின் மீது சவாரி செய்ய வேண்டும் என்று நானா கேட்டேன்? நீங்கள்தான் என்னைக் கழுதையின் மீது ஏறு, ஏறு என வற்புறுத்தினீர்கள், இல்லையா? இனிமேல் என்னால் இந்த அவமானத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாது, வாருங்கள், பிடிவாதமாக இருக்காதீர்கள். கழுதையின் மீது ஏறி நீங்கள் சவாரி செய்யுங்கள்!” என்று சொன்னபடி அந்தக் கழுதையின் மேலிருந்து இறங்கி நடக்கத் தொடங்கினான். அதன் பின்னர், முல்லா கழுதையின் மீது ஏறி சவாரி செய்யத் தொடங்கினார்.

முல்லாவுக்கு ஏற்பட்ட அவமானம்

சிறிது நேரத்துக்குப் பின்னர், ஒரு வயதான மனிதர் அவர்கள் எதிரில் வந்தார். கழுதையின் மீது சவாரி செய்யும் முல்லாவை முறைத்துப் பார்த்தபடி "ஏய், முதியவரே! மனசாட்சி என்கிற ஒன்று உமக்கு இருக்கிறதா, இல்லையா? காடு வா, வா என்று அழைக்கும் வயதிலும் ஆசை உம்மைவிட்டுப் போகவில்லையா?

ஒரு இளம் தளிரை இந்தக் கொடிய வெயிலில் நடக்கவைத்து அழைத்துச் செல்வதற்கு உமக்கு எப்படி மனசு வருகிறது? கல்லறையில் ஒரு கால் இருக்கும்போது, உமக்கு எதற்கு இந்த சொகுசு? வெட்கமாக இல்லையா? அந்தச் சிறுவனைக் கழுதையின் மீது சவாரி செய்ய அனுமதி” என்று கோபத்துடன் சொன்னவாறு அவர்களைக் கடந்து சென்றார். இந்த முறை முல்லா பெருத்த அவமானத்துக்கு உள்ளானார்.

கழுதைக்கு ஏற்பட்ட சோதனை

பின்னர் அவர் தன்னுடைய மகனையும் கழுதையின் மீது ஏற்றிக்கொண்டார். கொடிய வெயிலில் அவர்களைச் சுமந்தபடி அந்தக் கழுதை சென்றதை, சாலையோரத்தில் அமர்ந்திருந்த சிலர் பார்த்தனர். அவர்களில் ஒருவர் ”அட கொடுமையே! வாயில்லா ஜீவன் அது. இந்த வெயிலில் இவர்கள் இருவரின் எடையை அந்த அப்பாவி விலங்கு எப்படித் தாங்கும்? இது மிகவும் அதிகம் இல்லையா? இந்தக் கல்நெஞ்சுக்காரர்களால் அந்த கழுதை இறக்கப்போகிறது” என்று பதைபதைப்புடன் கத்தினர். முல்லா சுதாரிப்பதற்குள் இன்னொருவரின் குரல் அவர்கள் செவியில் விழுந்தது. “கழுதையின் மீது சவாரி செய்வது யார் என்று தெரிகிறதா? அது நம்முடைய முல்லா” என்று அவர் ஆச்சரியத்துடன் கத்தினார்.

உலகத்தில் எவ்வளவு முட்டாள்கள்

மீண்டும் பெருத்த அவமானத்துக்கு உள்ளான முல்லா, உடனடியாகக் கழுதையின் மீதிருந்து இறங்கிவிட்டார். அவருடைய மகனும்கூட இறங்கிவிட்டார். இப்போது அவர்கள் இருவரும் நடந்து சென்றனர். அவர்களுக்கு முன்னர் கழுதை சென்றது. ஆனால், அடுத்த நொடியில் சாலையோரம் நின்றிருந்த இருவரை அவர்கள் எதிர்கொண்டனர். “ஓ, அல்லாவே! இந்த முட்டாள்களைப் பாருங்கள்! கழுதை தன் முதுகில் எவ்வித சுமையுமின்றிக் குதித்துக் குதித்து முன்னால் செல்கிறது. இவர்கள் வியர்வையிலும் புழுதியிலும் மூழ்கியபடி பின்னால் நடக்கின்றனர். உலகத்தில் எவ்வளவு முட்டாள்கள் இருக்கிறார்கள்!” என்று அவர்களில் ஒருவர் கூறினார்.

மனசாட்சிக்கு உண்மையாக இரு

முல்லா, ஒன்றும் சொல்லாமல் அமைதியாக அவர்களைக் கடந்து சென்றார். பின்னர் வாய்விட்டுச் சிரிக்கத் தொடங்கினார். காரணம் தெரியாமல் விழித்த மகனைப் பார்த்து, “இங்கே பார்! மக்களின் நாவிலிருந்து தப்பிக்க யாராலும் முடியாது! உன்னுடைய செயல்களால் மகிழ்ச்சி யடையாத ஒருவர் எப்போதும் இருப்பார். உன் மனசாட்சிக்கு உண்மையாக இரு. உன் செயல்கள் இறைவனைத் திருப்திப்படுத்தினால் போதும்” என்று சொன்னபடி நடக்கத் தொடங்கினார். அவர்களுக்கு முன் துள்ளிக் குதித்து அந்தக் கழுதை ஓடிக் கொண்டிருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்