முல்லா கதைகள்: நம்முள் இருக்கும் மகிழ்ச்சி

By முகமது ஹுசைன்

முல்லாவின் வீட்டுக்கு அருகில் ஒரு செல்வந்தரின் வீடு இருந்தது. பெரும் சொத்துக்கு அதிபதி அவர். கணக்கிலடங்காப் பணம், எண்ணற்ற வீடுகள், பெரும் பரப்பிலான தோட்டங்கள் போன்றவை அவரிடம் குவிந்து இருந்தன.

இவ்வளவு சொத்துக்கள் இருந்தும் என்ன பயன்? அவர் ஒரு நாள்கூட மகிழ்ச்சியாகவோ நிம்மதியாகவோ இருந்ததில்லை. அவருடைய முகத்தில் எப்போதும் கவலை இழையோடியது. அவருடைய மனத்தில் எப்போதும் இனம்புரியாத அச்சமும் கலக்கமும் குடிகொண்டு இருந்தன.

செல்வந்தரின் பொழுதுபோக்கு

ஒரு நாள் முல்லாவைத் தன்னுடைய வீட்டுக்கு அந்தச் செல்வந்தர் அழைத்திருந்தார். முல்லா அவருடைய வீட்டுக்குச் சென்றபோது, தன்னுடைய நிம்மதியற்ற துயர நிலையை அவர் முல்லாவிடம் வருத்தத்துடன் தெரிவித்தார். “உங்களால் மட்டும் எப்படி எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க முடிகிறது, எனக்கும் அந்த ரகசியத்தைக் கற்றுத்தரக் கூடாதா, முல்லா?” என்று கேட்டார்.

தன்னிடம் இருக்கும் பணத்தைச் சிறு சிறு பைகளாகக் கட்டி, அதை ஒரு பெட்டியில் வைத்திருப்பது அந்தச் செல்வந்தரின் வழக்கம். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அந்தப் பெட்டியைத் திறந்து பார்ப்பதும், அதிலிருக்கும் பணப்பைகளை வெளியே எடுத்து, அவற்றைப் பிரித்து எண்ணிப் பார்ப்பதும், பின் அவற்றை முடிச்சிட்டு மீண்டும் பைகளாகப் பெட்டியில் அடுக்கி மூடி வைப்பதும் அவருக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு.

தவறி விழுந்த பணப்பை

அன்று முல்லாவிடம் பேசிக்கொண்டு இருந்தபோதும், அவர் பணப்பைகளை வெளியே எடுத்து, எண்ணிப்பார்க்கும் தன்னுடைய விருப்பமான பொழுதுபோக்கில் ஈடுபட்டிருந்தார். “நீங்கள் இப்போது என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள்?” என்று கேட்டவாறே அந்தப் பணப் பெட்டிக்கு அருகே முல்லா செல்லத் தொடங்கினார்.

பணப் பெட்டிக்கு அருகே முல்லா வருவது தெரிந்ததும், அந்தச் செல்வந்தரின் இதயம் வேகமாகப் படபடக்கத் தொடங்கியது. “ஐயோ, எவ்வளவு பணப்பைகள் உங்களிடம் இருக்கின்றன. இந்த ஊரில் வசிக்கும் மக்கள் அனைவரிடம் இருக்கும் பணத்தைவிட உங்களிடம்தான் பணம் அதிகமாக இருக்கும் போலத் தெரிகிறதே” என்று கேட்டவாறே அந்தப் பணப் பெட்டிக்கு வெகு அருகில் முல்லா சென்றுவிட்டார்.

முல்லாவின் ஓட்டம்

பெட்டிக்கு வெகு அருகில் முல்லா வந்துவிட்டதை அறிந்ததும், அந்தச் செல்வந்தரின் மனத்தில் அபரிமித அச்சமும் பதற்றமும் ஏற்பட்டன. கைகள் நடுங்கத் தொடங்கின. வெளியிலிருந்த பணப்பைகளை வேக வேகமாகப் பெட்டிக்குள் அவர் அடுக்கத் தொடங்கினார். அப்போது ஒரு பணப் பை அந்தப் பெட்டிக்கு வெளியே விழுந்துவிட்டது. அதை அந்தச் செல்வந்தர் கவனிக்கவும் இல்லை. ஆனால், அதை முல்லா கவனித்துவிட்டார். சற்று யோசித்த முல்லா, சட்டென அதைக் குனிந்து எடுத்து, புயல் வேகத்தில் வெளியே ஓடத் தொடங்கினார்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத அந்தச் செல்வந்தர் சற்று நிலைகுலைந்து போனார். பின்னர் சுதாரித்துக்கொண்டு, ஐயோ என் பணம், என் பணம் என்று கதறியவாறு முல்லாவைப் பின் தொடர்ந்து விரட்டிச் சென்றார். முல்லாவோ வேண்டுமென்றே தெருக்களைச் சுற்றிச் சுற்றி ஓடினார். திடீரென்று ஓடும் வேகத்தை முல்லா குறைப்பார். பிடித்துவிடலாம் என்கிற நம்பிக்கையில் செல்வந்தர் அருகில் வரும்போது அவர் வேகத்தை அதிகரிப்பார். செல்வந்தருக்கு ஓடவும் முடியவில்லை; கத்தவும் முடியவில்லை. இருந்தாலும், என் பணம், என் பணம் என்று கத்தியவாறு, முல்லாவைப் பின் தொடர்ந்து வெறியோடு ஓடினார்.

மீண்டும் கிடைத்த பணம்

சுற்றி, சுற்றி ஓடிவந்த முல்லா, திடீரென அந்தச் செல்வந்தரின் வீட்டுக்குள் சென்றுவிட்டார். செல்வந்தரும் மூச்சிரைக்கத் தன் வீட்டுக்குள் நுழைந்தார். முல்லா அந்தப் பணப்பையை எங்கிருந்து எடுத்தாரோ, அங்கேயே போட்டுவிட்டு, அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தார். கீழே பாய்ந்து விழுந்து அந்தப் பணப் பையை எடுத்த செல்வந்தர், அதிலிருந்த பணத்தை எண்ணிப் பார்த்தார். பணம் சரியாக இருக்கிறது என்று கூறியவாறே அதை அந்தப் பணப்பெட்டியில் வைத்து நிம்மதியுடன் மூடினார். “இந்தப் பணம் என்னிடம் இருந்து போய்விடும் என நான் பயந்தே போய்விட்டேன். என்னுடைய பணம் மீண்டும் கிடைத்துவிட்டது. இப்போதுதான் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று முகம் நிறைந்த சிரிப்புடன் அவர் முல்லாவிடம் கூறினார்.

மகிழ்ச்சியின் உறைவிடம்

“நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என உண்மையாகவா சொல்கிறீர்கள்?” என முல்லா கேட்டார். “அதிலென்ன சந்தேகம்?” என அந்தச் செல்வந்தர் எதிர்க்கேள்வி கேட்டார். “இந்தப் பணம் இதற்கு முன் எங்கிருந்தது?”என அவரிடம் முல்லா கேட்டார். “இந்தப் பெட்டியில்தான் இருந்தது” என அவர் பதிலுரைத்தார். “அதாவது இந்தப் பணம், உங்களிடம் இருக்கும் பணத்தின் அளவைச் சிறிதும் அதிகரிக்கவில்லை. இருப்பினும், அது உங்களுக்கு மகிழ்ச்சியை அளித்து இருக்கிறது” என்று சிறு புன்னகையுடன் கூறிய முல்லா, “மகிழ்ச்சி என்பது எப்போதும் நம்மிடம்தானே இருக்கும், அதை எப்படி பிறரிடம் இருந்து பெற முடியும்” என்று சொன்னவாறே வெளியே சென்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

27 mins ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்