ஆலயத்தின் கர்ப்பக்கிரக இருட்டில் கடைசி பக்தனாக நிற்கும் அனுபவம் பெரும்பாலானவர்களுக்குக் கிடைத்திருக்கும். பாவை விளக்கின் தீச்சுடர் உள்ளே அம்மையின் மூக்குத்தியில் பட்டுத் தெறிக்கும் வாசனைகளின் சந்நிதியில் மெய்மறக்க முடியும். “புறப்படலயா?” என்ற அர்ச்சகரின் குரல் கேட்டு விழித்து விருட்டென்று வெளியேறி பிராகாரத்தில் நடக்கத் தொடங்கினால் உலகத்தையே தலைகீழாக பார்க்கும் வித்தையைக் கற்றதைப் போல் பிராகார மண்டப விதானத்தில் தொங்கும் வௌவால்களின் வாசனையுடனேயே எனது பால்யத்தின் நினைவுகள் இருக்கின்றன.
வாசனை என்பது ஜன்மாந்திரங் களாக வருவது. திருவையாறு கால பைரவர் சந்நிதியில் சதா எரிந்து கொண்டிருக்கும் குங்கிலியக் குண்டத்தைப் பார்க்கலாம். பக்கத்துக் கடையில் குங்கிலியப் பொட்டலம் விற்பார்கள். அதை வாங்கி ஆழமான குங்கிலியக் குண்டத்தில் உதறிவிட்டால் ஆள் உயரத்துக்கு குங்கிலிய ஜ்வாலை எழுந்து வரும். குங்கிலிய வாசனையோ காலபைரவரின் கை தொடலாய் ஆசுவாசம் தரும். ஒரு பெரியவர் பக்கத்தில் நின்ற பெண்மணியிடம் மேலெழுந்து வந்த ஜ்வாலையைக் காட்டி ‘உன் கவலை எல்லாம் இன்னையோட பஸ்பம் ஆகிட்டுதுன்னு வச்சிக்கோ’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். உள்ளே எட்டிப் பார்த்தேன் - எரிந்து சாம்பலாகி கிடந்தன மனுஷக் கவலைகள், கரி குப்பையாய்.
குங்கிலிய நாயனார் கதை
தன் சொத்துக்களை எல்லாம் விற்று குங்கிலியம் வாங்கி இறைவனுக்கு குங்கிலிய நாயனார் தீபம் ஏற்றினர். 63 நாயன்மார்களில் இவரும் ஒருவர். வறுமை சூழ்ந்த நிலையில் மனைவி, தாலிப் பொன்னை கழற்றி தருகிறார். அதைக்கொண்டு போய் விற்க கடைவீதி செல்லும் வழியில் ஒருவன் குங்குலிய மூட்டையுடன் வருகிறான். அவனிடம் தாலியைக் கொடுத்து குங்கிலிய முட்டையை வாங்கிக் கொண்டு கோவிலுக்கு வந்து குங்கிலிய வழிபாட்டைத் தொடர்கிறார். குபேரன் தோன்றி அவள் குடும்பத்தைக் காத்ததாக புராணம் கூறுகிறது.
எங்கள் ஊரில் ஒரு பெரியவர் இருந்தார். தனது உதவியாளருடன் அவர் பல இடங்களுக்கும் சென்று கை சோதிடம் பார்த்து வந்தார். அவரிடம் உங்கள் கையை நீட்டினால் போதும், உள்ளங்கையை முகர்ந்து பார்த்தே உங்களைப் பற்றிச் சொல்லி விடுவார். அவருக்குக் கண்பார்வை கிடையாது. சோதிடம் கூறும்முன், அந்தப் பார்வையற்ற கண்களில் அவருக்கு மட்டும் நம்மைப் பற்றிய எதிர்காலம் தெரிவதுபோல் தோன்றும்.
திருத்தல வாசனை
கோயில்கள், திருத்தலங்களின் பிராகாரங்களில் வீசுகிற வாசனைகள் தனித்தன்மை கொண்டவை. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் எங்கு திரும்பினாலும் தாழம்பூ வாசனை கமழும். மீனாட்சி அம்மனுக்கு சாத்தும் குங்குமம் தாழம்பூவால் செய்யப்பட்டது. திருவண்ணாமலை கோயில் வாசலிலேயே கற்பூர வாசனையும், விபூதி வாசனையும் நம்மைக் கையைப் பிடித்து அழைத்துப்போய் அண்ணா மலையார் முன்னால் நிறுத்திவிடும். தஞ்சைக்கு அருகே பருத்தியப்பர் கோயிலில் கம்மென்று இலுப்பைப்பூ வாசனை இருக்கும். கோயிலைச் சுற்றி இலுப்பந் தோப்பு. திருப்பதியில் கோயிலைச் சுற்றி செண்பகப் பூ வாசனையும் உள்ளே செல்லச் செல்ல பச்சைக்கற்பூர மும் ஏலக்காயும் கலந்த வாசனையும் வீசும். குருவாயூர் கோயிலில் சந்தனம் மணக்கும். குருவாயூரப்பனுக்கே பரிமளப்பிரியன் என்ற பெயருமுண்டு.
ஹோமியோபதி மருத்துவத்தில் பூக்களை அடியீடாகக் கொண்ட (base) மலர் மருந்துவம் புகழ்பெற்றது. ஒவ்வொரு மலரின் வாசனை எவ்வாறு இறைத்தன்மை உடையது என்பதை புதுவை அன்னை விரிவாக விளக்கியிருக்கிறார். மல்லிகைப் பூ வாசனையில் தலைவலி போகும். மருதாணி வாசனையில் ஆழ்ந்த தூக்கம் தரும். தாமரைப் பூவை முகர்ந்தால் ஞானம் வரும். செம்பருத்தி இதயத்துக்கு நல்லது. தஞ்சாவூர் கதம்பத்து மாசிப்பச்சை மனநோய்க்கு மருந்தாகும்.
ஆண்டாள் கேட்ட வாசனை
ஆண்டாளுக்கு தனது நாயகனான கண்ணனிடம் எப்படியெல்லாம் வாசம் வீசும் என்று தெரிந்து கொள்ள ஆசை. அதை யாரிடம் கேட்பது? கண்ணனின் முகத்தருகே சென்று இதழையும் தீண்டுகின்ற பேறு பெற்ற சங்கிடம் கேட்கிறாள்,
“கற்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ? திருப்பவள செவ்வாய் தான் தித்தித்திருக்குமோ?” என்று.
கவிதையும் கடவுளும் கலந்த வடிவத்தில் தீட்டப்பட்ட தமிழோவியம்.
“மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஓரிடத்தில் 49 சங்க புலவர்கள் திருஉருவ சிலைகள் இருக்கின்றன. அவ்விடத்தில் ஒரு அலாதியான வாசனை நிரந்தரமாய் இங்கே வீசும்” என்றார் நண்பர். அது எப்படி? “இறைவியின் கூந்தலுக்கு இயற்கை மணமில்லை” என்று கூறிய நக்கீரனை இன்னும் நறுமணம் துரத்து கிறது போலும் என்றார். நக்கீரனின் சிலையைக் காட்டி சிரித்தபடி.
எழுத்தாளர் கி. ரா. தனது நண்பர்கள் வட்டத்திலே ஒரு வெற்றிலைக் கதை சொல்வார்.
இந்திர சபையில் நடந்த நாட்டிய நிகழ்ச்சிக்கு ரம்பை தாமதமாக வந்து சேர்கிறாள். இந்திரன் கோபத்துடன் காரணம் கேட்க, வெற்றிலை போட்டதால் தாமதமாகி விட்டது என்கிறாள். இந்திரன் உடனே அவளை பூலோகத்தில் சென்று வசிக்குமாறு சபித்து விட்டான். ஏனென்றால் வெற்றிலை இந்திர லோகத்தில் மட்டுமே கிடைக்கும். பூலோகத்தில் வெற்றிலை கிடையாது. ரம்பை ரகசியமாக வெற்றிலையை தன் உடம்பில் மறைத்து எடுத்து வருகிறாள். இதுதான் வெற்றிலைக் கொடி பூமிக்கு வந்த கதை.
முகூர்த்த வேளையில் தாலிகட்டும் சடங்கில் மணப்பெண் கூறைப் புடவை உடுத்த வேண்டும். சாதாரண பருத்திப் புடவை. மஞ்சளில் நனைத்த வெள்ளைத்துணி அது. அந்தத் துணியில்தான், பிறக்கப்போகும் குழந்தைக்கு தூளி கட்ட வேண்டும். தாய் தந்தையின் வாசனை உணர ஒரு மனோதத்துவ ஏற்பாடு.
கிராமத்து வீடுகளில் குழந்தை அழாமலிருக்க அம்மாவின் அருகாமையை உணர்த்தும் வகையில் அம்மாவின் பழஞ்சேலையில் சின்னதாக பொம்மை செய்து குழந்தையின் கையில் கொடுத்துவிடுவார்கள். இதற்கு சேலைப்பிள்ளை என்று பெயர். குழந்தை, சேலைப்பொம்மையை வைத்து விளையாடும்போது சேலையின் வாசம் குழந்தைக்கு அம்மா அருகிலிருப்பதான பிரமையை ஏற்படுத்திவிடும்.
இஸ்லாமியத் திருமண நிகழ்ச்சி களில் யாராவது பெரியவர் கருநிற அத்தரை நகத்தால் எடுத்து நெற்றியில் பிறைவைத்து பொட்டும் வைப்பார். கல்யாண அரங்கையே அத்தர் வாசனை தூக்கிவிடும்.
மேன்மையின் நறுமணமும் ஒருமையும் நம்முள் பரவட்டும்.
(தேடல் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : thanjavurkavirayar@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago