அக்டோபர் 20: அன்னாபிஷேகம்
குருக்ஷேத்திரப் போரில், பலம்மிக்க துரியோதனனை வெல்வதற்கு பாசுபத அஸ்திரம் வேண்டி, அர்ஜுனன் சிவபெருமானைக் குறித்துத் தவம்புரிந்த மகாபாரத புராண நிகழ்வை ஞாபகப்படுத்துவதாக பசுபதேஸ்வரர் குடைவரைக் கோவில் உள்ளது. தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் சேர்ந்தமரம் சாலையில், சேர்ந்தமரம் அருகே திருமலாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள கோவில் இது.
குடைவரைக் கோவில் அமைந்திருக்கும் இம்மலை புராண காலத்தில் வாராணசி மலை என்று அழைக்கப் பட்டுள்ளது. வருணாச்சி மலையை ஒட்டிய ஊர் வாராணசிபுரம் என்றும் வருணாச்சிபுரம் என்றும் வழங்கப்பட்டுள்ளது. சிவபெருமான் இந்த மலையில் உலவுவதாக நம்பிக்கை உள்ளதால் திருமலை என்றும் அழைக்கப்படுகிறது. வனவாசத்தின்போது, பஞ்ச பாண்ட வர்கள் இம்மலையில் சிறிது காலம் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. தற்போதும் முனிவர்களும் சித்தர்களும் இம்மலையில் சூட்சும ரூபத்தில் வசித்து வருவதாக நம்பப்படுகிறது. இங்கு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட கற்கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதால் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமும்கூட.
முழுமை பெறாத ஆலயம்
தற்போது, சர்வேஸ்வரன் மலை என்றழைக்கப்படும் இந்த மலைத்தொடர் கிழக்கு, மேற்காக மிக நீண்டு அமைந்துள்ளது. இம்மலையில் தெற்கு, வடக்கு இருபுறங்களிலும் இரண்டு குடைவரைக் கோவில்கள் உள்ளன. தெற்குப் பகுதியிலுள்ள கோவில் தத்ரூபமாக இருந்தாலும், இறை மூர்த்தங்கள் இன்மையால் முழுமை பெறவில்லை. வடக்குப் பகுதியிலுள்ள குடைவரைக் கோவில் முழுமை பெற்றது.
கடையேழு வள்ளல்களுள் ஒருவரான ஆய்அண்டிரன், ஆய்க்குடியைத் தலைநகராகக் கொண்டு இப்பகுதியை ஆண்டுவந்த காலத்தில், இக்குடைவரை உருவாக்கப்பட்டிருக்கலாம் என்னும் கருத்து நிலவுகிறது. முனிவர்கள் வழிகாட்டுதலின்படி, கைதேர்ந்த இரண்டு சிற்பிகளான தந்தையும் மகனும் உருவாக்கிக் கொண்ட போட்டியின் அடிப்படையில் இக்குடைவரை அமைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
வடக்குப் பகுதியில் தத்ரூபமாகக் குடையப்பட்ட சிவாலயத்தின் அர்த்த மண்டபக் குகையில் விநாயகர், பிரம்மா, விஷ்ணு, நடராஜர், பூத கணங்கள், துவாரபாலகர்கள் ஆகி யோரின் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. கருவறையில் சிவலிங்கமும், எதிரே நந்தி பகவானும் கம்பீரமாக காணப்படுகின்றனர். தென்பகுதியில் முருகப்பெருமானுக்காக குடையப்பட்ட கோவில் பூர்த்தியாகியிருந்தாலும், இறையுருவங்கள் இல்லாமல் முழுமை பெறாமலேயே நீடிக்கிறது.
மலையின் வடக்குப் பகுதியிலுள்ள குடைவரை தரையிலிருந்து சுமார் நான்கு அடி உயரத்தில் உள்ளது. குடவரையின் உள்ளே மழைநீர் புகாதவாறு, குடவரையின் மேலே பாறையில் புருவம் போன்ற காடி வெட்டப்பட்டுள்ளது. கிழக்கு மேற்காக அமைந்துள்ள குடைவரைக்குள் செல்ல மூன்று வாயில்கள் உள்ளன. கருவறையினுள் ஒற்றைக் கற்பீடத்தில் செதுக்கப்பட்ட சிவலிங்கம், காசி ஆலயத்தைப் போன்றே அர்ச்சகர் வலம்வந்து பூஜிக்கும் விதமாக உள்ளது. அக்னி சொரூபியான ஈசன், இங்குள்ள சிவப்பு நிறப் பாறையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
சிவ லிங்கத்தில் வில்
குடைவரைக் கோவில் செதுக்கப்பட்ட காலத்திலிருந்தே முறையான அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றுவந்துள்ளன என்பதை சிவலிங்கம் உணர்த்துகிறது. சிவலிங்கத்தின் தலைப்பகுதியின் உச்சியில் 4 விரல் அகலத்தில் பிளவு உள்ளது. சிவலிங்கத்தின் தென்பகுதியில் கிழக்கு நோக்கி வில் ஒன்றும் உள்ளது. இந்த அடையாளங்கள் அர்ஜுனன், வேடன் உருவில் வந்த சிவபெருமானின் தலையில் அடித்த புராண நிகழ்வை நினைவுகூர்கின்றன.
முன்மண்டபத்தின் தெற்குப் பாறைச் சுவரில், வலப் பாதத்தை உத்கடிதமாக்கி சதுர கணத்தில் சிவபெருமான் ஆடல் நிகழ்த்துகிறார். வழக்கமாக ஒரு பாதம் தூக்கி நடனமாடும் கோலத்தில் காட்சி தரும் நடராஜர், இங்கு காலைத் தூக்காத கோலத்தில் உள்ளார். இது நடனமாடுவதற்கு முந்தைய நிலை. எனவே அவரது சடாமுடியும் முடியப்பட்ட நிலையிலேயே உள்ளது. காலுக்குக் கீழே முயலகனும் இல்லை. இவரை சதுர தாண்டவ நடராஜர் என அழைக்கிறார்கள். மார்கழித் திருவாதிரை இவருக்கு விசேஷம்.
ஆடல் நிகழ்த்தும் சிவபெருமானின் இருபுறமும், பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு பூதங்கள் நிற்கின்றன. பதினோராம் நூற்றாண்டில் ஸ்ரீவல்லபதேவன் என்ற பாண்டிய மன்னர், இத்திருக்கோவிலுக்கு மலைப்பகுதியையும், அதனைச் சுற்றியுள்ள குளங்களையும் தானமாக வழங்கிய தகவல் இங்குள்ள தூண்களில் பொறிக்கப்பட்டுள்ளது.
பனை மரத்தை தல விருட்சமாகக் கொண்ட இந்தக் குடைவரைக் கோவில், தட்சிண வாராணசியாகக் கருதப்படுகிறது. இந்தத் தலத்துக்கு வந்து வழிபடுபவர்களுக்கு மறுபிறவி இருக்காது என்பது நம்பிக்கை.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago