நேபாளத்தில் தேவதாஹா என்னுமிடத்தில் கெளதமி பிறந்தபோது அவரது ஜாதகத்தை ஆராய்ந்த சோதிடர்கள் எதிர்காலத்தில் பெருந்திரளான மக்கள் கூட்டம் அவரைப் பின்தொடர்வார்கள் என்று கணித்தனர். அதனாலேயே அவருக்கு மகாபிரஜாபதி கெளதமி என்று பெயர் சூட்டினர்.
மகாபிரஜாபதி கெளதமி பெளத்த சமயத்தின் முதல் பெண் துறவி. புத்தரின் முதன்மையான பத்து சீடர்களில் ஒருவர். கெளதம புத்தரால் துறவற தீட்சை வழங்கப் பட்டவர். இவர் புத்தரின் அன்னையான மகாமாயாவின் உடன்பிறந்த சகோதரி.
புத்தர் பிறந்த ஏழாம் நாளில் அவரது அன்னை மகாமாயா மறைந்தார். தான் பெற்ற மகன் நந்தாவை செவிலியரிடம் ஒப்படைத்துவிட்டு சித்தார்த்தனின் வளர்ப்புத் தாயாக கெளதமி ஆனார். புத்தரின் தந்தை சுத்தோதனர் இறந்தார். மகாபிரஜாபதி கெளதமி துறவறம் மேற்கொள்ள முடிவுசெய்தார்.
அச்சமயம் புத்தர் கபிலவஸ்து சென்று சாக்கியர்களுக்கும் கோலியர்களுக்கும் ரோகிணி ஆற்றுத் தண்ணீரை பங்கீடு செய்து கொள்வதில் ஏற்பட்ட சண்டையைத் தீர்த்துவைத்தார். சண்டை முடிந்ததும் புத்தர் ஐநூறு சாக்கியர்களுக்கு கலகவிவாத சூக்தத்தை உபதேசித்தார். அவர்களும் பெளத்த மார்க்கத்தில் இணைந்தனர். அவர்களின் மனைவியர் ஐநூற்றுவரும் மகாபிரஜாபதி கெளதமியின் தலைமையில், புத்தரிடம் சென்று தம்மை பிக்குணிகளாக ஏற்க வேண்டினார்கள்.
ஆனந்தனின் தலையீடு
சங்கத்தில் பெண் துறவிகளை ஏற்ப தில்லை என்ற காரணத்தினால் புத்தர் தீட்சை வழங்க மறுத்துவிட்டு வைசாலி நகரம் சென்று விட்டார். ஆனால் மகா பிரஜாபதியும் அவரது பெண் சீடர்களும் தமது வைராக்கியத்தில் உறுதியாக நின்றனர். தங்களின் தலைமுடியை மழித்துக்கொண்டு மஞ்சள் ஆடை அணிந்து புத்தரை கால்நடையாகப் பின்தொடர்ந்து வைசாலி நகரம் சென்றனர். புண்பட்ட கால்களுடன் புத்தர் மடாலயம் சென்றனர். தங்களை பிக்குணிகளாக ஏற்று உபதேசம் செய்யுமாறு மீண்டும் வேண்டினர். புத்தர் மறுபடியும் மறுதலித்தார். புத்தரின் முதன்மைச் சீடரான ஆனந்தன் தலையிட்டு கெளதமி சார்பாக புத்தருடன் உரையாடினார்.
மெத்தப் பணிவுடன் புத்தரை குனிந்து வணங்கினார் ஆனந்தன்.
“பெருமானே துறவுநிலையின் பல்வேறு சாதனைகளைச் செய்ய பெண்களால் முடியுமா?”
“முடியும் ஆனந்தா” என்கிறார் புத்தர்.
“அவ்வாறெனில் மடாலயத்திற்கு வெளியே காத்திருக்கும் மகாபிரஜாபதியையும் அவரது பெண் சீடர்களையும் பிக்குணிகளாக ஏற்பது நன்றா?” என்றார் ஆனந்தர்.
“நன்று ஆனந்தா. அவ்வாறெனில் மகாபிரஜாபதி கெளதமி எட்டு சங்க நிபந்தனைகளை ஏற்கவேண்டும்” என்கிறார்.
கெளதமி எட்டு குரு தம்மங் களையும் ஏற்று பெளத்தத்தின் முதல் பிக்குணியாக தீட்சை பெற்றார். அவரைப் பின்தொடர்ந்த ஐநூறு சாக்கியப் பெண்களும் தீட்சை பெற்று பிக்குணிகள் ஆனார்கள்.
இது பற்றி இரு வேறு கருத்துகள் புத்தரது வரலாற்றில் உள்ளன. ஒரு சாரார் புத்தர் அத்தகைய நிபந்தனைகளை விதிக்கவில்லை என்று கூறுகின்றனர்.
புத்தர் சொன்னது இதுதான் என்கின்றனர். “கெளதமி எச்சரிக்கையாக இருப்பாயாக. அகத்திலிருந்து அகமற்ற வெளிக்கு செல்லும்போது தருமங்களைக் கடைப்பிடிப்பதில் ததாகதரின் அறிவுரைப்படி நடந்துகொள்.”
ஆன்மிகச் சாதனையில் ஈடுபட ஆண்களைப் போல, பெண்களும் ஆற்றல் படைத்தவர்களே என்பதை புத்தர் உலகுக்கு அறிவித்ததன் மூலம் பெண்ணடிமைத்தனம் எனும் பெருஞ்சங்கிலியின் கண்ணி ஒன்று தெறித்து விழுந்தது. பிட்சுகள் சங்கத்தில் ஆண்களுக்கு சமதையாக பிக்குணிகளின் சங்கம் உருவாக இது வழிவகுத்தது.
மகாபிரஜாபதிக்கு விழிப்புணர்வு
புத்தர் மகா பிரஜாபதிக்கு தியானத்தில் ஈடுபட மனப் பயிற்சிப் பொருள் ஒன்றை உபதேசித்தார். இதன்மூலம் மகாபிரஜாபதிக்கு விழிப்புணர்வு உண்டாயிற்று. பிக்குணிகள் சங்கத்தை அமைத்து அதனை நடத்துவது கெளதமிக்கு எளிதாக இல்லை. பிக்குணிகளுக்காக மழை பாதுகாப்புக் குடில்களைக் கட்டவேண்டி இருந்தது. நகரத்தில் வசித்த செல்வந்தர்கள் பிக்குணிகளை ஏளனமாகப் பேசி விரட்டி அடித்தனர். மழைக் குடில்கள் அமைக்க, பிக்குணிகளாக மாறியவர்களின் கணவன்மார்களே உதவிசெய்தனர்.
கெளதமி, புத்தருக்காக அற்புதமாக நெய்யப்பட்ட விலை உயர்ந்த துறவு மேலாடை ஒன்றினை எடுத்துச் சென்று சமர்ப்பித்தார். புத்தர் அதனை ஏற்க மறுத்து பெளத்த சன்மார்க்கிகள் அனைவருக்கும் அதுபோன்று அளிக்க கூறினார். கெளதமி ஏமாற்றமடைந்தார். ஆனந்தா அது பற்றி கேட்டபோது புத்தர் மகாபிரஜாபதியின் நன்மை கருதியே தாம் அவ்வாறு கூறியதாக தெரிவித்தார். எதிர்காலத்தில் தமது சீடர்கள் இதுபோன்ற பரிசுகளை அளிப்பதைத் தடுக்க இது உதவும் என்றார்.
ஒரு தாயின் ஆசிகள் என்ற தலைப்பில், பாலி மொழியில் கெளதமி இயற்றிய கவிதை புகழ்பெற்றது. இக்கவிதையில் அவர் தமக்கு பூர்வஜன்ம அறிவு ஏற்பட்டதையும் தொடர்ந்து பிறப்பும் இறப்பும் ஏற்படுவது, சம்சார பந்தத்தில் உழல்வதால் உண்டாவது என்று தாம் கண்டுகொண்டதாயும் குறிப்பிடுகிறார். இந்தப் பிறவியிலேயே இத்தகையப் பிறப்பு இறப்புச் சுழலில் இருந்து விடுபட்டு பூரண விடுதலை பெற்றதாகச் சொல்கிறார்.
கவிதையின் இறுதியில் அவர் பெளத்த சமயவாதிகள் போல், மாயாவை அவர் புத்தரின் தாய் என்ற மகாபீடத்தில் ஏற்றி வழிபடாமல், தான் பெரிதும் நேசித்த தங்கையாகவே கருதி, மாயா தனது மகன் உலகுக்கு வழிகாட்டும் உயர்நிலை பெற்றுவிட்டதைக் காண உயிரோடு இல்லையே என்று வருந்துவது குறிப்பிடத்தக்கது. புத்தர் கெளதமி மீது அளவு கடந்த அன்பு கொண்டிருந்தார்.
மகாபிரஜாபதியின் இறுதி நாட்கள்
வைசாலியில் இருந்தபோது மகாபிரஜா பதிக்கு வயது 120ஐ எட்டிவிட்டது. தமது முடிவு நெருங்கிவிட்டதாக மகாபிரஜாபதி உணர்ந்தார். அவர் மரணப் படுக்கையில் இருந்தபோது பிட்சுகள் யாரும் அவரைச் சென்று காணவில்லை. இதற்கு பெளத்த சமய விதிகள் இடங்கொடுக்கவில்லை. புத்தர் இந்த விதிகளைத் திருத்தினார்.
தாமே மகாபிரஜாபதியைக் காணச் சென்றார். பிரஜாபதி நற்கதி அடையும் மந்திரங்களை அவரது காதருகே சென்று ஓதினார். புத்தரிடம் இருந்து விடைபெற்றார் கௌதமி. அவருடன் சேர்ந்து அவரது ஐநூறு பெண் சீடர்களும் மரித்தனர். அதற்கான பெரும் தகனக்கிரியைகள் நடந்தன. இது புத்தரின் மறைவுக்கு ஒப்பான அதிசய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
(தேடல் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago