இயேசுவின் உருவகக் கதைகள் 45: சொந்தங்களை மறுதலிப்போர்

By எம்.ஏ. ஜோ

மற்றவர்களைவிட நம்மை நன்கு புரிந்துகொண்டவர்கள், நமது சொந்தங்கள். நம்மை நம்ப மறுத்து, நம்மைப் புரிந்துகொள்ளாமல் புறக்கணித்தால் நமக்கு ஏற்படும் துன்பம் அளவில்லாததாக இருக்கும்.

இயேசுவின் வாழ்விலும் இத்தகைய நிகழ்ச்சி நடந்தது. இயேசுவின் சொந்த ஊர் கலிலேயாவிலிருந்த நாசரேத் ஆகும். பெத்லகேமில் பிறந்த இயேசு இந்த ஊரில்தான் வளர்ந்து ஆளானார். முப்பது வயது ஆகும் வரை இந்த ஊரிலேயே தச்சுத் தொழில் செய்த யோசேப்போடும் தாய் மரியாளோடும் வாழ்ந்தார். அதன்பிறகே வீட்டைத் துறந்து, தன் பொது வாழ்வைத் தொடங்கி, சீடர்களைச் சேர்த்துக்கொண்டு, ஊர் ஊராகப் போய், ‘இறைவன் நம் அன்புத் தந்தை. எனவே நாம் சகோதர சகோதரிகளாக ஒருவரை ஒருவர் அன்பு செலுத்தி வாழ்ந்தால் இறையாட்சி நம்மிடையே மலரும்’ என்ற நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கினார். நோயாளிகளைக் குணப்படுத்தி, இறைத்தந்தையின் அன்பையும் அவர் தனக்கு அளித்திருந்த ஆற்றலையும் வெளிப்படுத்தினார்.

ஒருமுறை தனது சொந்த ஊரான நாசரேத்துக்கு வந்து, அங்கிருந்த தொழுகைக் கூடத்தில் உரையாற்றினார். அவர் மற்ற ஊர்களில் எண்ணற்ற நோயாளிகளுக்கு அற்புதமாய் குணமளித்தது பற்றி எல்லாம் கேள்விப்பட்டிருந்த நாசரேத்து மக்கள் அன்று அவரது உரையில் வெளிப்பட்ட ஆழ்ந்த ஞானத்தையும் கண்கூடாகப் பார்த்தனர். இது அவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

ஏற்றுக்கொள்ளாத மக்கள்

“இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? இவர் மரியாளின் மகன்தானே! இவரது உறவினர் யாவரும் நம்மோடு உள்ளவர்கள் தானே! இவரை வளர்த்த யோசேப்பு ஒரு தச்சர்தானே!" என்று பேசிய அம்மக்கள் அவரை ஏற்றுக்கொள்ள வில்லை. இறைவனால் அனுப்பப்பட்ட மீட்பர் இவர்தான் என்று நம்பவில்லை.

தனது சொந்த ஊர் மக்களே தன்னை நம்பாமல் ஏற்க மறுப்பதைப் பார்த்து வேதனையோடு இயேசு சொன்னார்: "சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்ற எல்லா இடங்களிலும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்." மற்ற ஊர்களில் எல்லாம் அவருக்குக் கிடைத்த மதிப்பும் அன்பும் அவரது சொந்த ஊரில் கிடைக்கவில்லை.

இயேசுவுக்கு ஏமாற்றமும், வேதனையும் ஏற்பட்டன. ஆனால் இழப்பு யாருக்கு? மற்ற ஊர்களில் வல்லமையோடு அவர் நோயுற் றோரைக் குணப்படுத்தியதுபோல, சொந்த ஊரில் செய்ய இயலவில்லை. நம்பிக்கை இல்லாதோர் நலம் பெறுவது எப்படி?

சோகம் ததும்பும் இரண்டு வாக்கியங்கள் பைபிளில் உள்ளன. "ஒளியான அவர் உலகில் இருந்தார். ஆனால் உலகம் அவரை அறிந்து கொள்ளவில்லை. அவர் தமக்கு உரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை." (யோவான் 1: 10, 11)

மற்ற ஊர்களைவிடத் தனது சொந்த ஊரில் தன்னுடைய பணி எளிதாய், இனிதாய் இருக்கும் என்று நம்பி எதிர்பார்த்துத்தானே இயேசு அங்கே வந்திருப்பார்? நாசரேத் மக்களை நம்பிக்கை அற்றவர்களாக ஆக்கியது என்னவாக இருக்கலாம்? ஆணவமும் பொறாமையும் கலந்த ஆபத்தான ஒரு உணர்வுக் கலவை அவர்களின் அகக் கண்களை மறைத்திருக்க வேண்டும். ‘நாம் பார்த்து வளர்ந்த இவன் நமக்குக் கற்பிப்பதா?' என்ற மமதையோடு அவர்கள் தங்கள் மனக்கதவை மூடிக்கொண்டனர். அவரை நம்ப மறுப்பதால் அவர்களுக்கு ஏற்படும் இழப்பையும் அவர்களால் புரிந்துகொள்ள இயல வில்லை. அவர்கள் எவ்வளவு பரிதாபத்திற்குரியவர்கள்!

சொந்தங்களைப் புறக்கணிப்பவரா நாம்

இவர்களைப் போன்று நம் சொந்தங்களையே மறுதலித்துப் புறக்கணிக்கும் நபர்களா நாம் என்ற கேள்வியை இந்நிகழ்ச்சி நம்மிடம் எழுப்ப வேண்டும்.

இத்தகையோர் எங்கும் இருக்கிறார்கள் என்பது நாம் நன்கு அறிந்த உண்மை. ‘கிங் லியர்' எனும் ஷேக்ஸ்பியரின் சோக நாடகத்தின் கதாநாயகன் அரசன் லியர், தன் சொந்த மகள்கள் இருவரால் ஏமாற்றப்பட்டு, வெளியே துரத்தப்பட்டவர். அந்த வேதனையைத் தாங்க முடியாமல் பேதலித்து மனநலத்தை இழந்தான்.

சமீபத்தில் இத்துடன் தொடர்புடைய நான் படித்த செய்தி இது. கோவையில் ஆதரவற்ற மக்களுக்கு அன்புக்கரம் நீட்டும் எட்வின் என்ற அன்பர் தன் அனுபவங்களைச் சொல்லும்போது அவருக்கு அதிர்ச்சியும் துயரமும் தந்த இரு நிகழ்ச்சிகளையும் சொல்லுகிறார்.

பெற்ற தாயை இரக்கமின்றி விட்டுப்போன ஒரு நபரைப் பற்றிச் சொல்கிறார். உடன்பிறந்த சகோதரரின் இறுதிச்சடங்கில்கூட நிற்காத சகோதரன் பற்றிச் சொல்கிறார்.

“சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும் / சிந்தை இரங்காரடி – கிளியே / செம்மை மறந்தாரடி" என்று பாரதி குறிப்பிட்ட நபர்கள் எல்லாக் காலத்திலும் இருக்கிறார்கள்.

தனது சீடர்களில் பேதுருவுக்கு தலைமைப் பொறுப்பை, முதலிடத்தை தந்திருந்தார் இயேசு. அவர் ஓர் இக்கட்டான நேரத்தில் அச்சத்தால் ஆட்கொள்ளப்பட்டு இயேசுவை தனக்குத் தெரியாது என்று மறுதலித்தார். இயேசுவின் முக்கிய பன்னிரு சீடர்களில் ஒருவனான யூதாஸ், முப்பது வெள்ளிக்காசுக்காக அவரைக் காட்டிக்கொடுத்தார்.

யூதாஸ் போன்ற நபர்களின் வாரிசுகளாக சொந்த மனைவியைக் கொல்லும் கணவன், கணவனையும் பிள்ளைகளையும் விட்டுவிட்டு போகும் மனைவி, பெற்றோரைத் துன்புறுத்தவோ கைவிட்டு ஒதுங்கவோ தயங்காத பிள்ளைகள், சொத்துக்காக சொந்தங்களை இழந்து தனியே நிற்கும் சகோதரிகள், சகோதரர்கள் என எண்ணற்றோர் இருக்கிறார்கள்.

ஆசைக்கும் அச்சத்துக்கும் ஆளாகி சொந்தங்களை மறுதலிக்கும் சுயநலக்காரர்களாக நாமிருந்தால் நல்லவை பலவற்றை இழந்து நிற்போம். நாளும் வந்து துன்புறுத்தும் குற்றவுணர்வுக்குப் பலியாவோம். அது மட்டுமல்ல, நாசரேத் மக்களைப் போல இழந்தது எதுவென்றே அறியாத மதியீனர்களாய் நாம் இருப்போம்.

(தொடரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு : majoe2703@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்