கூனியின் நேரான எண்ணம்!

By வா.ரவிக்குமார்

கரோனா இரண்டாவது அலை ஊரடங்குக்கு முன்பாக சென்னை கம்பன் கழகத்தின் சார்பாக ராமாயண பாத்திரங்களை பரதநாட்டியத்தின் வழியாக காட்சிப்படுத்தும் நிகழ்வு நடந்தது. அதில் கூனி – கைகேயி பாத்திரப் படைப்பை நர்த்தகி நடராஜ் தன்னுடைய நளினமான நடன அசைவுகளின் மூலமும் உடல்மொழி மூலமாகவும் வெளிப்படுத்தும் காணொலியை தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கம்ப ராமாயணப் பாடல்களை பத்மா சுவாமிநாதனும் கருத்துரையை சக்தி பாஸ்கரும் நேர்த்தியாக செய்திருந்தனர்.

“பொதுவாக நேர்மறையான ராமாயண பாத்திரங்களான சபரி, குகன் போன்றவர்களையே நடனத்துக்கு எடுத்துக் கொள்வார்கள். ஆனால் நீங்கள் எதிர்மறை பாத்திரமான மந்தரை பாத்திரத்தை ஏற்றதற்கு என்ன காரணம்?” என்று திருநங்கை நர்த்தகியிடம் கேட்டோம்.

“ராமாயணமே கைகேயி, கூனி (மந்தரை), சூர்ப்பனகை ஆகிய மூவரால்தான் நகர்கிறது என்பது என்னுடைய அபிப்ராயம். அவர்கள்தான் முதுகெலும்பாக இருந்து ராமாயணம் சீராக பயணிப்பதற்கு காரணமாக இருக்கிறார்கள். மூன்று பேருக்குமே நியாயமான எண்ணங்கள் இருந்திருக்கின்றன. இந்த பாத்திரப் படைப்புகளை சித்திரிக்கும் வகையிலேயே இந்த நாட்டிய நாடகத்தை நான் நிகழ்த்தினேன்.

கைகேயி, கூனி, சூர்ப்பனகை பாத்திரங்கள் நமக்கு வில்லிகளாக, எதிர்மறை பாத்திரங்களாக தெரிகின்றனர். ஆனால் உண்மையில் கைகேயி அவளாகவே தனக்கு வரங்கள் வேண்டும் என்று தசரதனிடம் கேட்கவில்லை. போரில் அவருடைய உயிரைக் காப்பாற்றியதற்காகவும் இளம் பெண்ணான கைகேயியிடம் மதி மயங்கி, `எப்போது விருப்பமோ உனக்கு வேண்டிய வரங்களை என்னிடம் கேட்டுப் பெறலாம்’ என்கிறார் தசரதன். அதுவும் தன்னுடைய மகனுக்காக கைகேயி அந்த வரங்களைக் கேட்டாள்.

இந்த மந்தரை என்பவள் தன்னுடைய செல்லப் பெண்ணாகவே கைகேயியைக் கருதியவள். செவிலித்தாயாக இருந்து கைகேயியை வளர்த்தவள். கைகேயி பிறந்த கேகைய நாட்டிலிருந்து அவளுடனேயே பயணிப்பவள் இந்த கூனி. தன்னுடைய மகளாக நினைக்கும் கைகேயியின் மகன் அரசாள வேண்டும் என்று மந்தரை நினைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? இப்படி நினைப்பது கூனியின் நேரான எண்ணம்தானே! அயோத்தியில் சிறுவனாக இருக்கும் ராமனால் களிமண் உருண்டை தாங்கிய அம்பால் தாக்கப்படுகிறாள்.

அவளுடைய உடல் ஊனம் பலரால் அவமானப்படுத்தப்படுகிறது. இத்தனை அவமானங்களால் ஒருவருக்கு கோபம் வருவது இயல்புதானே? ஆனால் தனக்கு நேர்ந்த அவமானங்களுக்காக அவள் ராமனை பழிவாங்கினாள் என்று நினைப்பதைவிட, தான் வளர்த்த மகளின் மகனுக்காக கைகேயியை தூண்டிவிட்டாள் என்பதே பொருத்தமாக இருக்கும்.

சூர்ப்பனகைக்கு அவளுடைய அண்ணன் ராவணனால் வழங்கப் பட்ட வனத்தை ஆக்கிரமித்து பர்ணசாலை அமைத்திருப்பவர்கள் யார் என்ற கேள்வியோடுதான் அவள் வருகிறாள். அவள் அரக்கியாக இருந்தாலும் பெண்தானே. அவளுக்கு இயல்பாக ராமன், லட்சுமணனிடம் தோன்றும் காதல் எள்ளி நகையாடப்படுகிறது.

அவளின் தோற்றத்தை, `உருவம் கண்டு எள்ளாமை வேண்டும்’ என்னும் முதுமொழியை மறந்து, மூக்கறுபட்டு அவமானப்படுத்தப்படுகிறாள். அதற்கான வினை ராமன், லட்சுமணனுக்கு வந்து சேர்கிறது. இப்படி நாம் கவனிக்க மறந்த ராமாயண பாத்திரங்களின் சில நியாயங்களை என்னுடைய நாட்டிய நாடகத்தின் மூலம் நிகழ்த்தினேன்” என்றார்.

ராமாயண பாத்திரங்கள் கூனி, கைகேயி நாட்டிய நாடகம்: https://bit.ly/3i0FRIb

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்