உள்ளதைச் சொல்லி உளமார ஒருவரைப் புகழும் பண்பு எல்லோருக்கும் எளிதில் கைகூடுவதில்லை. ஒருவரைப் புகழ்ந்து நிறையச் சொல்லிவிட்டால், நாம் எதையோ நிறைய இழந்து விடுவோ மென்று, ஒன்றிரண்டு சொற்களை மட்டும் வெளிப்படுத்தும் கஞ்சர்களும் உண்டு.
இயேசு எப்போதெல்லாம் பாராட்டுக்குரிய நிகழ்ச்சிகளைப் பார்த்தாரோ, அப்போதெல்லாம் தயக்கம் சிறிதுமின்றி மனதார, வாயாரப் பாராட்டினார். அப்படி, இயேசுவின் வாயிலிருந்து ஆகச்சிறந்த பாராட்டைப் பெற்ற மாமனிதர் யோவான். இதே பெயர் கொண்ட மற்றவர்களிடமிருந்து இவரைப் பிரித்துக் காட்டும் விதமாக, திருமுழுக்கு யோவான் என்று இவர் அழைக்கப்படுகிறார்.
கடவுளுக்கும் மனிதருக்கும் எதிராகச் செய்த பாவங்களை ஏற்றுக் கொண்டு, மனம் வருந்தி, 'இனி திருந்தி வாழ நான் தயார்' என்ற உறுதியோடு வந்தவர்களை ஆற்று நீரில் சில விநாடிகள் அமிழ்த்தி, அவர்களுக்கு திருமுழுக்குத் தந்ததால் இவரை திருமுழுக்கு யோவான் என்கின்றனர்.
இவருக்கும் இயேசுவுக்கும் இருந்த உறவு நினைந்து நினைந்து வியத்தற்குரியது.
யோவானின் தாயும் மரியாளும்
யோவானின் தாய் எலிசபெத் இயேசுவின் தாய் மரியாளுக்கு தூரத்து உறவு. வானதூதர் மரியாளிடம், "நீ கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். அவருக்கு இயேசு என்னும் பெயரிடு" என்று சொல்லவந்தபோது, மரியாவின் உறவினரான எலிசபெத் பற்றிய வியப்பூட்டும் ஒரு செய்தியையும் சொல்லிச் சென்றார். ‘மகப்பேறு இல்லையே என்று பல்லாண்டுகள் மனம் வெதும்பி மன்றாடிய எலிசபெத், தனது முதிர்ந்த வயதில் கருவுற்று இருக்கிறார். இது நிகழ்ந்து ஆறு மாதம் ஆகிறது’ என்பதே வானவர் மரியாவுக்குச் சொன்ன செய்தி.
எலிசபெத்தின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளவும் அவருக்கு பணிவிடை செய்து பார்த்துக் கொள்ளவும், மரியாள் விரைந்து சென்று அவரைச் சந்திக்கிறார். இறைமகன் இயேசுவைக் கருவாய் சுமந்திருந்த மரியாள் தன்னைப் பார்க்க வந்த மகிழ்ச்சியில் தன் வயிற்றிலிருந்த யோவான் துள்ளினார் என்று எலிசபெத் கூறினார்.
எனவே இயேசுவுக்கும் யோவானுக்குமான உறவு இருவரும் பிறக்கும் முன்பே தொடங்கிய அன்புறவாகும். இயேசு பிறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு பிறந்த யோவான் சிறுவயதிலிருந்தே, வனத்தில் தவ வாழ்வு வாழ்கிறார். மனிதகுலத்தை மீட்கப் போகும் மீட்பரின் வருகைக்காக மக்களைத் தயாரிப்பதே தன் வாழ்வின் நோக்கம் என்பதைப் புரிந்து, ஏற்றுக்கொண்டு மக்களுக்கு அவர் கற்பித்தார். இயேசு, சீடர்களைச் சேர்த்துக்கொண்டு தன் பொது வாழ்வைத் தொடங்கும் வேளையில் திருமுழுக்கு பெற யோவானிடம் வருகிறார்.
முதலில் மறுத்த யோவான்
யோவான் முதலில் மறுத்தார். “நானல்லவா உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டும்?” என்று தயங்கினார். பின்பு இயேசு கேட்டதற்கேற்ப அவருக்கு திருமுழுக்குத் தந்தார். அத்தருணம் “இவரே என் அன்பார்ந்த மகன்” என்ற இறைவனின் குரல் ஒலிப்பதைக் கேட்டார்.
வரவேண்டிய மீட்பர் இயேசுதான் எனப் புரிந்ததும் தனது சீடரிடம் “இவரே இறைவனின் செம்மறி” என அடையாளம் காட்டுகிறார். தானே மீட்பர் என்று நினைத்த அவரது சீடர்களிடம் மிகத் தெளிவாக, “நான் மீட்பர் அல்ல. அவருக்கு முன்னோடியாக அனுப்பப்பட்டவன் நான்” எனச் சொல்கிறார். தன்னையும் இயேசுவையும் ஒப்பிட நினைப்போரிடம் “அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதி இல்லை. அவரது செல்வாக்கு பெருக வேண்டும், எனது செல்வாக்கு குறைய வேண்டும்” என்கிறார்.
இந்த மனப்பக்குவம் எத்தனை பேருக்கு வாய்க்கும்? 'வருபவருக்கு முன்னோடி மட்டுமே நான்' என்பதை முழுமனதோடு ஏற்றுக்கொண்டு, அவர் வந்துவிட்டார் என உணர்ந்ததும் அவரை அடையாளம் காட்டி, தன் சீடர்களை அவரிடம் அனுப்புவது எத்தனை பேரால் முடியும்?
இயேசுவையும் தன்னையும் யாரும் ஒப்பிடக் கூடாது என்ற அக்கறையில் “அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதி இல்லை” என்கிறார். ‘அவரது செல்வாக்கு பெருகட்டும். எனக்கும் கொஞ்சம் அது இருக்கட்டும்' என்று கூட அவர் ஆசைப்படவில்லை. “அவரது செல்வாக்கு பெருக வேண்டும். எனது செல்வாக்கு குறைய வேண்டும்” என்று சொல்லும் பெருந்தன்மை அரிதானது. பகலவன் வந்ததும் ‘இதோ வந்து விட்டார். இனி அவர் ஒளிர வேண்டும். நான் மறைய வேண்டும்' எனச் சொல்லி மறையும் நிலவைப் போன்றவர் யோவான்.
ஈடற்ற திருமுழுக்கு யோவான்
இயேசுவை இப்படி முன்னிலைப் படுத்தும் யோவானைப் பற்றி இயேசு சொல்கிறார்: “மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை.”
பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாடிகனிலிருந்து அனைத்துலகக் கத்தோலிக்கத் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தையாக இருந்தவர் நான்காம் அர்பன். நற்கருணைக்கு என்று புதியதொரு திருவிழாவை 1264-ம் ஆண்டு அவர் அறிவித்தார். அந்தத் திருவிழாவுக்கான மன்றாட்டுகள், பாடல்களை எழுதுமாறு இரண்டு பெரும் இறையியல் அறிஞர்களைக் கேட்டுக் கொண்டார்.
ஒருவரின் பெயர் தாமஸ் அக்வினாஸ். மற்றவரின் பெயர் பொனவென்ச்சர். குறிப்பிட்ட நாளில் திருத்தந்தையும் அவரது உதவியாளர்களும் கூடியிருக்க, தாங்கள் எழுதிக்கொண்டு வந்திருக்கும் மன்றாட்டுக்களை வாசித்துக்காட்ட இருவரும் வந்தனர். இருவரில் யாரின் படைப்புகள் சிறந்தவையோ அவற்றை ஏற்பதாக திருத்தந்தை அறிவித்தார்.
முதல் வாய்ப்பு தாமஸுக்கு வழங்கப்பட்டது. அவர் தான் எழுதிக் கொண்டு வந்ததை வாசிக்க, வாசிக்க, பொனவென்ச்சரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. தனது மன்றாட்டுகளை எழுதி வைத்திருந்த தாள்களை அவர் சத்தமின்றிக் கிழித்தார். தாமஸ் வாசித்து முடித்தபின் அவர் சொன்னார்: “தாமஸ் எழுதியவற்றைக் கேட்டபோதே அவை நான் எழுதியதைவிட பன்மடங்கு சிறந்தவை எனப் புரிந்துகொண்டேன். அவற்றையே நாம் ஏற்க வேண்டும்” என்றார்.
1999-ம் ஆண்டு முடிந்த இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த மனிதர் யார் என்று அறிவிக்குமுன்னர் பிரபல ‘டைம்' இதழ் பலரைக் கலந்தாலோசித்தது. முதலில் நூறு பேரைத் தேர்ந்தெடுத்து, பின் அந்த நூறு பேரிலும் தலைசிறந்தவர் என்று அந்த இதழ் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைனைத் தேர்ந்தெடுத்தது.ஆனால் அவரோ மகாத்மா காந்தியைப் போற்றியவர். “காந்தியைப் போன்ற ஒரு மனிதர் நம்மிடையே உண்மையில் வாழ்ந்தார் என்பதை வருங்காலத் தலைமுறையினர் எளிதில் நம்ப மாட்டார்கள்” என்றார் ஐன்ஸ்டைன்.
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்பதைக்கூட அரிதாகச் சிலர் மட்டுமே ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் என் தோட்டத்து மல்லிகையை விட மாற்றான் வீட்டுத் தோட்டத்து மல்லிகைக்கு மணம் அதிகம் என்பது உண்மை என்றால் அதை உளமார ஏற்றுக்கொண்டு உரக்கச் சொல்லும் மனப்பக்குவம் நமக்கு வாய்க்க வேண்டும். அப்படி வாய்த்தால் இறைவனின் பாராட்டை நாமும் பெற முடியும்.
(தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : majoe2703@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago