இயேசுவின் உருவகக் கதைகள் 35: அதிகமாக மன்னிக்கப்பட்டோர்

By எம்.ஏ. ஜோ

சீமோன் எனும் பரிசேயர் இயேசுவை விருந்துக்கு அழைக்க, இயேசுவும் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு, அவரது வீட்டுக்குப் போய் உண்ண அமர்ந்தார். பரிசேயர் ஒருவரின் அழைப்பை இயேசு ஏற்றது எதிர்பாராத ஒன்று அல்ல. யார் அழைத்தாலும் இயேசு அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார்.

எதிர்பாராதது எது? விருந்துக்கு ஏற்பாடு செய்து அழைத்தவர் விருந்தினர் வீட்டுக்கு வரும்போது வழக்கமாகச் செய்கிற, செய்ய வேண்டிய மூன்று காரியங்களில் எதையும் சீமோன் இயேசுவுக்குச் செய்யவில்லை.

விருந்தினர் வீட்டுக்குள் நுழையும் போது விருந்தை ஏற்பாடு செய்து அழைத்தவர் விருந்தினரின் தோளைத் தொட்டு அவரது இரு கன்னங்களிலும் முத்தமிடுவார். ‘உங்கள் மீது பெருமதிப்பும் அன்பும் கொண்டிருப்பதால் தான் உங்களை விருந்துக்கு அழைத்திருக்கிறேன்' என்பதை வெளிப்படுத்தும் இந்த அடையாளத்தை, சீமோன் இயேசுவுக்குத் தரவில்லை.

இரண்டாவதாக, விருந்தை ஏற்பாடு செய்தவரோ, அவரது ஆட்களோ விருந்தினர் பாதங்களில் குளிர்ந்த நீர் ஊற்றுவார்கள். விருந்தினர், தூசி படிந்த சாலைகளில் நடந்து வந்திருப்பார். எனவே அவரின் பாதங்களைக் கழுவிச் சுத்தமாக்கவும், வெப்பத்தைக் குறைத்து குளிர்ச்சி யூட்டுவதற்குமான வழக்கமான சடங்காக இருந்தது. சீமோன் இதையும் இயேசுவுக்குச் செய்யவில்லை.

மூன்றாவதாக நறுமணத் தைலம் ஒன்றை விருந்தினர் தலையில் பூசுவார்கள். அதுவும் அன்று செய்யப்படவில்லை.

எல்லாரும் கடைப்பிடித்த பழக்கங்கள் இவை என்பதால் இயேசு இவற்றை எதிர்பார்த்திருக்க வேண்டும். ஆனால் எதிர்பார்த்த இவை எதுவும் நிகழவில்லை.

பாவியானவள் பூசிய தைலம்

விருந்து தொடங்கி அனைவரும் உண்ணத் தொடங்கியதும் எவரும் எதிர்பார்த்திராத இன்னொரு காரியம் நடந்தது. யாரும் அழைக்காத ஒரு பெண் சீமோனின் வீட்டிற்குள் நுழைந்தார். அவள் பெயர் என்னவென்று குறிப்பிடப்படவில்லை. ‘பாவியான பெண்' என்றே பைபிள் அவளை அழைக்கிறது. அவள் ஒரு விலைமாதாக இருந்திருக்க வேண்டும் என்றே அறிஞர்கள் கூறுகின்றனர். அவர் இயேசுவைத் தேடி, அவருடைய காலடி அருகே அழுதவாறு நின்றார். பின் அமர்ந்து இயேசுவின் பாதங் களைத் தன் கண்ணீரால் நனைத்து, தன் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டார். தன்னோடு கொண்டு வந்திருந்த பேழை ஒன்றைத் திறந்து, அதிலிருந்த நறுமணத் தைலத்தை இயேசுவின் பாதங்களில் பூசினார்.

இயேசு இதற்கு முன் இப்பெண்ணை எங்கும் சந்தித்த தில்லை. ஆனால் இயேசு பலரின் நோய்களைக் குணமாக்கி, பாவங்களை மன்னித்தது பற்றி இப்பெண் அறிந்திருக்க வேண்டும். அன்று சீமோன் வீட்டுக்கு விருந்துண்ண வருகிறார் என்பதையும் இவர் கேள்விப்பட்டிருக்க வேண்டும். இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, அந்த நேரத்தில் அங்கே வந்து, எதுவும் சொல்லாமலேயே இயேசுவின் மீதுள்ள அன்பையும் தான் வாழ்ந்த விதம் பற்றிய வருத்தத்தையும் வெளிப்படுத்துவதில் இப்பெண் வெற்றி பெற்றார்.

இதைப் பார்த்த சீமோன், அவளை அறிந்திருந்ததால், ‘இறைவன் சொல்ல விரும்புவதைச் சொல்கிற இறைவாக்கினர் இயேசு என்றால், தன் பாதங்களை முத்தமிடும் இப்பெண் எத்தகையவர் என்பதை அறிந்திருக்க மாட்டாரா?' என்று தனக்குள்ளேயே நினைத்துக்கொண்டார்.

ஆனால், அவரது எண்ணங்களை அறிந்த இயேசு சீமோனிடம் உதாரணம் ஒன்று சொல்லி, கேள்வி ஒன்று கேட்டார். “பிறருக்கு கடன் தரும் செல்வந்தர் ஒருவரிடம் இருவர் கடன்பட்டிருந்தனர். ஒருவர் ஏறத்தாழ நாற்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இன்னொருவர் ஏறத்தாழ நான்காயிரம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். இருவருமே கடனைத் திருப்பித் தர முடியாததால், செல்வந்தர் இரக்கப்பட்டு, இருவரின் கடனையும் தள்ளுபடி செய்துவிட்டார்.

இந்த இருவரில் யார் அந்தச் செல்வந்தர் மீது மிகுந்த அன்பு காட்டுவார்?” என்று இயேசு கேட்டார். சீமோன் “அதிகக் கடனை யாருக்குத் தள்ளுபடி செய்தாரோ அவரே அவர் மீது அதிகமான அன்பு கொண்டிருப்பார்” என்று சொல்ல, “நீ சொன்னது சரியே” என்ற இயேசு, அந்தப் பெண்ணின் பக்கம் திரும்பி, “இவரைப் பார்த்தீரா? நான் உன் வீட்டிற்கு வந்த போது எனக்கு நீ முத்தம் தரவில்லை. என் பாதங்களைக் கழுவ தண்ணீர் தரவில்லை. என் தலையில் எண்ணெய் பூசவில்லை. ஆனால் இப்பெண் தன் கண்ணீரால் என் பாதங்களை நனைத்து, தன் கூந்தலால் துடைத்தார். என் பாதங்களை அவர் முத்தமிட்டு ஓயவில்லை. அவற்றின் மீது நறுமணத் தைலம் பூசினார்” என்றார்.

‘தான் காட்டாத அன்பை இப்பெண் அவருக்கு மிகுதியாக, நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்’ என்பதைத் தான் இயேசு சுட்டிக்காட்டுகிறார்' என்பது சீமோனுக்குப் புரிந்தது.

“ஆகவே நான் உனக்குச் சொல்லுகிறேன்” என்ற இயேசு “இப்பெண் மிகுதியாக அன்பு கூர்ந்ததால் அவளது பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர்” என்றார்.

‘என் பாவங்கள் அனைத்தும் இன்னும் மன்னிக்கப்படவில்லை. காரணம் நான் குறைவாக அன்பு காட்டினேன்' என்று சீமோன் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

இயேசு அப்பெண்ணைப் பார்த்து, “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன. உனது நம்பிக்கை உன்னை மீட்டது. அமைதியாகச் சென்று வா” என்று சொல்லி அனுப்பினார்.

இந்நிகழ்ச்சி நமக்கு இரு செய்திகளைச் சொல்லலாம். முதலாவது நம்பிக்கை பற்றியது. ‘நான் செய்த செயல்களை நினைத்து, நான் வாழ்ந்த வாழ்வை நினைத்து வருந்தி மன்னிப்பு வேண்டினால் எனக்கு மன்னிப்பு நிச்சயம் கிடைக்கும்' என்ற நம்பிக்கைதான் அந்தப் பெண்ணிற்கு பாவமன்னிப்பையும் பாராட்டையும் பெற்றுத் தந்தது.

இரண்டாவதாக, நாம் கடவுள் மீது கொண்டிருக்கும் அன்பு, பக்தி குறைவாக இருந்தால், அதற்கு என்ன காரணமாக இருக்கலாம்? நாம் செய்த குற்றங்களின் தன்மையை, அவை விளைவித்த தீமைகளை நாம் உணராதிருக்கலாம். எனவே, எந்த அளவுக்குக் கடவுள் நம் மீது இரக்கம் கொண்டு நம்மை மன்னித்திருக்கிறார் என்பது நமக்கு இன்னும் புரியாமல் இருக்கலாம்.

அவ்வப்போது நமது கடந்த காலத்தை உற்றுநோக்கி, நேர்மையாக ஆய்வு செய்தால், 'எத்தனை தவறுகள் செய்திருக்கிறோம்! எத்தனை முறை கடவுள் நம்மை எளிதாக, இதமாக மன்னித்திருக்கிறார்!' என்பது விளங்கும். அப்போது கடவுள் மீது நமக்குள்ள பற்றும் பக்தியும் பன்மடங்கு கூடும்.

(தொடரும்) கட்டுரையாளர், தொடர்புக்கு : majoe2703@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்