இயேசுவின் உருவகக் கதைகள் 32: இறைவனைக் காண்பவர் யார்?

By எம்.ஏ. ஜோ

தூய்மைக்கு உலகெங்கும் பெரும் மதிப்பு இருக்கிறது. அனைவரையும் ஈர்க்கும் ஆற்றல் அதற்கு இருக்கிறது. இதில் எந்த வேறுபாடும் இல்லை. ஆனால் ‘தூயவர்கள் யார்?' எனக் கேட்டுப் பார்த்தால் அவற்றில் எல்லாருக்கும் மாறுபாடு இருக்கும்.

இயேசு தனது மலைப் பிரசங்கத்தில், “தூய்மையான உள்ளத்தோர் பேறு பெற்றோர். ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பர்" என்று சொன்னார்.

தூய்மையான உள்ளத்தோர் யார்?

புறத் தூய்மையில் மட்டும் கவனம் செலுத்தி அகத் தூய்மையைப் புறக்கணிப்போரை இயேசு கண்டனம் செய்கிறார். ‘வெளிவேடக்காரர்' என்று அவர் சாடிய பரிசேயர்களைப் பார்த்து, “நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் அவற்றின் உட்புறத்தை கொள்ளைப் பொருட்களாலும் தன்னல விருப்பங்க ளாலும் நிரப்புகிறீர்கள்” என்றார்.

‘சில உணவுகளை உண்டால் நம் தூய்மை போய்விடும். அவை நம்மை தீட்டுப்படுத்தும்' என்று பரிசேயர்கள் நம்பினர். அதைக் குறிப்பிட்டு இயேசு சொன்னார்: “வாய்க்குள் செல்வது மனிதனைத் தீட்டுப்படுத்தாது. மாறாக வாயிலிருந்து வெளிவருவது மனிதனைத் தீட்டுப்படுத்தும்” என்றார். வாயில் இருந்து வருபவை வார்த்தைகள். ஆனால் அவை எத்தகைய வார்த்தைகள் என்பதைத் தீர்மானிப்பது எது? உள்ளத்தில் இருக்கும் எண்ணங்கள், உணர்வுகள். தீய செயல்களைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் உள்ளத்தில் தானே இருக்கின்றன? இவையே மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன என்று விளக்கினார் இயேசு.

மனிதர்கள் தோற்றத்தைப் பார்க்கின்றனர். நம் உள்ளத்தில் இருப்பதை அவர்களால் பார்க்க இயலாது. மனிதர் பார்ப்பது போல இறைவன் பார்ப்பதில்லை. “மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர். இறைவனோ அகத்தைப் பார்க்கிறார்” (1 சாமுவேல் 16:7) என்று அழுத்தமாகச் சொல்கிறது வேதாகமம்.

தூய உள்ளத்தோராக ஆக இயலாது

எனவே எவ்வளவுதான் புறத்தூய்மை யில் கவனம் செலுத்தினாலும், தீய எண்ணங்கள் கொண்டோர் தூய உள்ளத்தோராக இருக்க இயலாது. தூய்மையான உள்ளத்தோர் ஏன் பேறு பெற்றவர்கள்? காரணம், அவர்கள் கடவுளைக் காண்பர் என்கிறார் இயேசு.

இயேசுவை அவர் காலத்தில் அவர் நாட்டில் வாழ்ந்தோர் எல்லாம் கண்டனர். ஆனால் அவர் வெறும் மனிதரல்ல; அவர், இறைவனின் திருமகன் என்று சிலரே கண்டுகொண்டனர். இயேசுவின் தாய் மரியா, அவரது கணவர் யோசேப்பு இருவரையும் தவிர சில மனிதர்களுக்கே அவர் உண்மையில் யார் என்று கண்டுகொள்ளும் பேறு கிட்டியது. செக்கரியா எனும் குருவின் மனைவி எலிசபெத், இயேசுவைக் கருத்தாங்கியிருந்த அவரது தாயைக் கண்டதும் அகமகிழ்ந்து, “என் இறைவனின் தாய் என்னிடம் வர நான் யார்?” என்று சொல்கிறார். இயேசு பிறக்கும் முன்பே அவர் யார் என்பதைக் கண்டுகொண்ட அரிய பெண்மணி எலிசபெத்.

இயேசுவைக் கண்டவர்கள்

தொழுவத்தில் பிறந்த இயேசுவை ஆடு மேய்க்கும் இடையர்களும் கிழக்கிலிருந்து வந்த மூன்று ஞானிகளும் அவர் யார் எனப் புரிந்து கொண்டு வணங்கி மகிழ்கின்றனர். இயேசு பிறந்த சில நாட்களில் செய்ய வேண்டிய சில சடங்குகளுக்காக, எருசலேம் ஆலயத்துக்கு அவரைக் கொண்டு வந்தபோது, சிமியோன், அன்னா இருவரும், பச்சிளம் குழந்தையாக தாயின் கரங்களில் தவழும் இவர், உண்மையில் இறைவனின் திருமகன் என்பதைக் கண்டுகொண்டு கடவுளைப் போற்றிப் புகழ்கின்றனர்.

முப்பது வயதில் இயேசு தான் வந்த பணியைத் தொடங்கியபோது, அவர் யாரென்று கண்டுகொள்ளும் பேறு சிலருக்கே கிடைத்தது. “என் வீட்டிற்குள் நீர் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். எனவே சொல்லொன்று சொன்னால் போதும். என் பணியாளன் குணம் அடைவான்” என்று செய்தி சொல்லி அனுப்பிய நூற்றுவர் தலைவன், இயேசுவின் பாதங்களைத் தன் கண்ணீரால் கழுவி, தன் கூந்தலால் துடைத்த பெண், ‘இயேசு அணிந்திருந்த மேலாடையின் விளிம்பைத் தொட்டால் போதும்.

நான் குணமடைவேன்' என்று நம்பிய பெண், இயேசு தன் வீட்டிற்கு வந்து விருந்துண்டதால் மனம் நெகிழ்ந்து, “என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்து விடுகிறேன். தவறான வழிகளில் சேர்த்ததைத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன். திருந்தி விடுகிறேன்” என்று உரைத்த சக்கேயு, “நீரே இறைமகன். நீரே உலகைக் காக்க அனுப்பப்பட்டவர்” என்று சொன்ன மார்த்தா... என்று இயேசு உண்மையில் யார் என்பதைக் கண்டு கொண்ட வர்கள் இருக்கிறார்கள்.

யோவான் கண்ட அவர்

இயேசுவின் சீடர்களில் ஒருவரான யோவானுக்கு இயேசு தொலைவில் இருந்தாலும் அவரைக் கண்டுகொள்ளும் திறன் இருந்தது. சீடர்கள் இரவெல்லாம் மீன்பிடிக்க முயன்றும் எதுவும் கிடைக்காமல் சோர்வுற்று இருந்தபோது, கரையில் நின்றுகொண்டிருந்த ஒருவர் அவர்களோடு பேசி, மீன் எதுவும் கிடைக்காததைத் தெரிந்துகொண்டு, படகின் வலதுபக்கம் வலையை வீசச் சொன்னார். அவர் இயேசுதான் என்பதை மற்ற சீடர்கள் அறியாத நிலையில் இந்த யோவான்தான், அவர் யார் எனக் கண்டுகொண்டு பேதுருவிடம் “அவர் இயேசுதான்” என்று உறுதிபடச் சொல்கிறார்.

இந்த யோவான் இயேசுவை மிகவும் அன்பு செய்தவர். இயேசுவால் அன்பு செய்யப்பட்டவர். இப்படி இயேசுவைக் கண்டுகொள்ளும் நபர்களை எல்லாம் அவர்கள் மனத்தில் இருந்த அன்பும் நம்பிக்கையும்தான் ஒன்றிணைக்கிறது.

அன்பும் நம்பிக்கையும்

அன்பும் நம்பிக்கையும் எப்போதும் கைகோத்துக் கொண்டு செல்வதாகும். ஒருவரை நாம் உண்மையாகவே ஆழமாக அன்பு செய்தால் அவரை அதிகமாக நம்புவோம். அதற்குக் காரணம் ‘அவரிடம் பொய்மை துளியும் இல்லை, கள்ளங்கபடம் சிறிதும் இல்லை, அவர் என்னை ஒருபோதும் ஏமாற்ற மாட்டார், ஏனென்றால் அந்த அளவுக்கு என்னை அன்பு செய்கிறார்' என்ற நிச்சயத்தால்தான் நாம் நம்புகிறோம்.

இப்படி யாரெல்லாம் இறைவனின் மீதும் சக மனிதர்கள் மீதும் களங்கமற்ற அன்பு கொண்டிருக்கிறார்களோ அவர் களே தூய்மையான உள்ளத்தோர்.

எனவே யாரையும் ஏமாற்றும் எண்ணம் எதுவுமின்றி, பொய்யும் வஞ்சமும் துளியுமின்றி, கள்ளங்கபடம் சிறிதுமின்றி அன்பு செய்வோரே தூய உள்ளத்தினர். தூய்மை என்பது களங்கம் இல்லாத அன்பு. பகையாலும் வெறுப்பாலும் பார்க்க முடியாத பலவற்றை அன்பால் பார்க்க முடியும். அன்புகொண்ட உள்ளத்துக்கு ஆயிரம் விழிகள் உண்டு.

களங்கமில்லாத அன்பு மிகக் கொண்டோர் கடவுளை பல இடங்களில், பல விதங்களில் காணும் பேறு பெற்ற வர்களாக உள்ளனர். ஏழைகளின் முகங்களில், உழைப்போரின் கரங்க ளில், துன்புறுவோரின் கண்களில் மட்டுமல்ல, இயற்கையின் எழிலில் இறைவனை அவர்களால் காண முடிகிறது.

எனவே அவர்களால் இப்படிப் பாட முடியும்:

இயேசுவே இத்தரணியெங்கும்

உன்னைக் காண்கிறேன்

காணும் காட்சி யாவிலும் - உன்

புன்னகையைப் பார்க்கிறேன்.

செடியில், கொடியில் சிரிப்பது நீ

கதிரில், நிலவில் ஒளிர்வது நீ

காணக் கண்கள் வாய்த்தால் இங்கே

எங்கும் நீ, எதிலும் நீ.

(தொடரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு : majoe2703@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்