மிலே சுர் மேரா தும்ஹாரா ஞாபகமிருக்கிறதா. ஏக் சுர் என்னும் தலைப்பில் 1988-ம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தன்று வெளியான தேசிய ஒருங்கிணைப்பு - ஒற்றுமையை வலியுறுத்தி, தூர்தர்ஷன் வழியாகப் புகழ்பெற்ற பாடல் அது. இந்தி, அசாமி, வங்கம், கன்னடம், காஷ்மீரி, மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய பதினான்கு மொழிகளில் சிந்துபைரவி ராகத்தில் அமைந்திருந்த பாடல் அது.
“இசைந்தால் நம் இருவரின் சுரமும் நமதாகும்” என்பதே அதன் உட்கருத்தாகும். இந்த இசைத் தொகுப்பின் ஆரம்பத்தில் தன் கம்பீரக் குரல் வழியாகப் பன்னீர் தெளித்து மயிலிறகால் நம்மை வருடிக்கொடுத்து மனத்தைக் கவரும் அந்த இசைக் கலைஞர் - பண்டிட் பீம்சென் ஜோஷி. சரித்திரம் சிலரைப் படைக்கிறது. ஒரு சிலர் சரித்திரத்தையே படைக்கின்றனர். இந்திய இசை உலகில் கானகந்தர்வன் என்று அழைக்கப்படும் அரிய இசைமேதை பீம்சென் ஜோஷி.
பக்தி இசை செதுக்கிய பீம்சென்
கர்நாடக மாநிலத்தில் தார்வார் மாவட்டத்திலுள்ள கடக் என்னும் ஊரில் பள்ளி ஆசிரியரான குருராஜராவ் - கோதாவரிபாய் ஆகியோருக்குப் பிறந்த 16 குழந்தைகளுள் மூத்தவர் பீம்சென் ஜோஷி. சிறுவயது முதலே இசையின் மீது நாட்டத்துடன் இருந்தார். கோயில் உற்சவங்களின்போதும் திருவிழாக்களின்போதும் வாசிக்கப்படும் ஹார்மோனியம், தம்புரா நாதமானது சிறுவன் பீம்சென்னைக் கட்டி இழுத்தது.
பிரபல இந்துஸ்தானி இசைக் கலைஞர் இனாயத் கானிடம் இசை பயின்ற சன்னப்பா என்பவரே பீம்சென்னுக்கு பயிற்சியளித்த முதல் இசை ஆசிரியராவார். பைரவ், பீம்பிளாசி ஆகிய ராகங்களைப் பாடும் முறையைக் கற்றுணர்ந்தான் சிறுவன் பீம்சென். அதன்பின், பாரம்பரிய இசைக் கலைஞரான பண்டிட் சியாமாச்சார்யா, பீம்சென்னுக்கு வாய்ப்பாட்டு மட்டுமல்லாமல் ஹார்மோனியம் வாசிக்கவும் கற்றுத் தந்தார்.
1936-ம் ஆண்டு தார்வாரைச் சேர்ந்த சவாய் கந்தர்வா பீம்சென்னைத் தம் சீடனாக ஏற்றுக்கொண்டார். குருகுலவாச முறைப்படி இசைப் பயிற்சி தொடங்கியது. `க்கயால்’ வகைப் பாடல்களில் நன்கு தேர்ச்சி பெற்ற பீம்சென், 1941-ம் ஆண்டு தனது 19வது வயதில் முதல் மேடைக் கச்சேரியை நடத்தினார். 1942-ல்மராத்தி, இந்தி மொழி பக்திப் பாடல்களை பீம்சென் ஜோஷி பாட அதை இசைத்தட்டாக வெளியிட்டது ஹெச்.எம்.வி. நிறுவனம். 1943ல் மும்பையில் வானொலி நிலையக் கலைஞராகப் பணியாற்றினார்.
பக்தியைப் பரப்பிய இசை
`தீர்த்த விட்டல க்ஷேத்திர விட்டல’ என்று பண்டிட் பீம்சென் ஜோஷி அபங்கங்களைப் பாட ஆரம்பித்தாலே போதும் மெய்சிலிர்க்கும் பக்தி அலை நம்மில் பொங்கி எழும். பண்டரிபுரத்தில் அருள்பாலிக்கும் அந்த பாண்டுரங்கனே நேரில் வந்து களிநடனம் புரிய ஆரம்பித்துவிடுவான். இன்னொருபுறம் `சதா எள்ளி ஹ்ருதயதல்லி’, `பாக்யதா லக் ஷ்மி பாரம்மா’ போன்ற அவரது தாய்மொழியான கன்னட மொழியில் அமைந்த பக்தி கீதங்கள் நம்மை வேறு உலகிற்கே அழைத்து சென்றுவிடும்.
`பத்ததி மாறாத பக்தி இசைக்கு ஒரு பீம்சென் ஜோஷி’ என்று சொல்லும் அளவுக்கு பக்தி ரசத்தில் தானும் கரைந்து, கேட்போர் உள்ளங்களையும் உருகச் செய்துவிடுவார். தமது குரல் வளத்தால் ‘கிரானா கரானா’ என்னும் தனித்துவமான பாணியை இசை உலகில் உண்டாக்கிய பெருமை பீம்சென்னுக்கு உரியது. அருவியெனக் கொட்டும் பிருகாக்கள், மலைக்கவைக்கும் ராக சஞ்சாரங்கள், திகைக்க வைக்கும் தாளப் பின்னல்கள் என்று இசையின் பல்வேறு பரிமாணங்களில் சிறந்து விளங்கினார் ஜோஷி.
சாஸ்திரிய இசை, திரை இசை இரண்டிலும் கோலோச்சிய பீம்சென்னை நாட்டின் உயரிய பத்ம விருதுகளும் சங்கீத நாடக அகாடமி விருதுகளும் கவுரவித்தன. இந்திய அரசின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதும் பீம்சென்னுக்கு வழங்கப்பட்டது.
2011-ம் ஆண்டு ஜனவரி 24 அன்று பீம்சென் ஜோஷி என்னும் இசையைப் பாடிப் பறந்த வானம்பாடியை நாம் இழந்தாலும், அவரால் எழுப்பப்பட்ட சாஸ்திரிய இசை அலை எப்போதும் நம் உள்ளங்களை தழுவிக் கொண்டுதான் இருக்கும். கர்னாடக இசைக்கும் இந்துஸ்தானி இசைக்கும் பாலமாக அவர் கட்டமைத்த ராஜபாட்டையில் ஒளியும் ஒலியுமாக பீம்சென் ஜோஷி என்றென்றைக்கும் நிறைந்திருப்பார்.
கட்டுரையாளர்: சங்கர் வெங்கட்ராமன்,
தொடர்புக்கு: srikamakshi.sankara@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago