ஒருமுறை அல்ல நான்குமுறை சமாதியிலிருந்து உயிருடன் வெளிப்பட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடமாடியவர் குழந்தையானந்த சுவாமிகள். தமது முந்தைய சமாதிகளைப் பற்றி சம்பந்தப்பட்டவர்களிடம் தெள்ளத் தெளிவாக விளக்கியிருக்கிறார். அது மட்டுமல்ல சமாதியில் இருந்தபடியே சூட்சும உடலுடன் தம்மைப் பற்றிய நூலுக்கு முன்னுரையும் வழங்கியிருக்கிறார்.
கைபட்டாலே பொடியாக நொறுங்கும் பழைய பிரதி ஒன்றில் குழந்தையானந்த சுவாமிகளின் சரித்திரம் அச்சிடப்பட்டுள்ளது. அதில் காணப்படும் முன்னுரை ‘மத்யஸ்தர் மாதுஸ்ரீ சாரதாம்பாள் அம்மையார் மூலமாக யோகபீடத்தில் அருளியது’ என்ற குறிப்பு உள்ளது. நூல் வெளியான சில ஆண்டுகளுக்கு முன்னரே மதுரையில் சமாதியான குழந்தையானந்தா, தற்போது முன்னுரை வழங்கியிருப்பது ஆன்மிக உலகில் ஆச்சரியமில்லை. இவ்வாறு சரீரத்தைத் துறந்த பிறகும் மத்யஸதர் மூலம் எழுதுவது யோகசித்திகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
மதுரை ராமசாமி ஐயருக்கும் தென்காசி திரிபுரசுந்தரிக்கும் பிறந்த குழந்தையானந்த சுவாமிகளின் இயற்பெயர் ராஜகோபாலன். செல்வச் செழிப்பான குடும்பம். அதீத தெய்விக நம்பிக்கை. அன்னதானம், ஏழை எளிய மக்களுக்கு வாரிவழங்கும் சுபாவம் கொண்ட தம்பதிக்கு குழந்தை பாக்கியம் இல்லை.
ஆலயத்தில் வளர்ந்த குழந்தை
ஒருநாள் மீனாட்சி அம்மையின் சந்நிதியில் நின்று, எங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தால் போதும், அந்தக் குழந்தையை உன்னிடமே கொண்டுவந்து விட்டுவிடுகிறோம் என்று வேண்டிக்கொண்டனர். அவ்வாறே குழந்தை பிறந்தது. குழந்தையை கோயிலில் கொண்டுவந்து விட்டனர். குழந்தை ஒன்பது வயதுவரை கோயிலில் வளர்ந்தது. ஆலயத்தில் விளையாடியபடி பக்தர்கள் தரும் பிரசாதத்தைச் சாப்பிட்டு, அங்கேயே உறங்கியது. பின்னாளில் குழந்தையானந்த சுவாமி ‘நான் கடவுளோடு தூங்கியவன்' என்று சிரித்துக்கொண்டே கூறுவது வழக்கம்.
சித்தர்கள் மூலம் யோக மந்திரங்கள், பட்சியோகம், நந்தி வித்தை முதலான சித்திகளைச் சிறுவயதிலேயே கற்றான் சிறுவன் ராஜகோபாலன். இச்சிறுவனை வடநாட்டிலிருந்து கணபதி பாபா என்ற மகான் தனது சீடராக ஏற்று சந்நியாசமும் அளித்தார்.
பின்னர் கணபதி பாபாவுடன் காசிக்குச் சென்று அங்கு பல ஆண்டுகள் வாழ்ந்து சமாதி ஆகி பின்னர் அந்தச் சமாதியிலிருந்து வெளிப்பட்டு த்ரைலிங்க சுவாமிகள் என்ற பெயருடன் 150 ஆண்டுகள் வாழ்ந்ததாகத் தெரிகிறது.
குழந்தை ஆனார்
ஆஜானுபாகுவாக இருந்த சுவாமிகளுக்கு குழந்தை ஒன்று மாலைபோட விரும்பியதால் தன் உருவத்தைக் குறுக்கி குழந்தை எளிதில் மாலை போடும்படியாக ஒன்றே முக்கால் அடி உயரம் உள்ளவரானார். அது முதற்கொண்டு குழந்தையானந்த சுவாமிகள் என்று அழைக்கப்படலானார்.
திருவண்ணாமலையில் குழந்தையானந்த சுவாமிகள் இரண்டாவது சமாதி அடைந்தார். பின்னர் அந்தச் சமாதியிலிருந்து குறுகிய குழந்தை வடிவிலேயே வெளிப்பட்டு மக்களிடையே உலவ ஆரம்பித்தார். பின்னர் அங்கிருந்து காஞ்சிபுரம் சென்று அங்கு பல ஆண்டுகள் இருந்தார். மக்களின் நோய் தீர்ப்பதும், ஆன்மிகக் கருத்துக்களை தம்மை அண்டியவருக்கு உபதேசிப்பதுமாக இருந்தார்.
தென்காசியில் தன் பக்தரான கதிர்வேலன் வீட்டில் மூன்றாவது சமாதியை அடைந்தார். பின்னர் அங்கிருந்து மதுரைக்கு வந்து 1932-ம் ஆண்டு நான்காவது சமாதி கொண்டார்.
குள்ளமான உருவம், எப்போதும் வாயில் சாளவாய் ஒழுகும். பருத்த தொந்தி. கால்களைப் பரப்பியபடி இருகைகளையும் முன்புறம் ஊன்றிக் கொண்டுதான் உட்காருவார். யாரையாவது பார்க்க விரும்பவில்லை என்றால் குப்புறப் படுத்துக்கொண்டு விடுவார். பேச்சிலும் மழலை இருக்கும்.
கஞ்சியே உணவு. காப்பி விரும்பிச் சாப்பிடுவார். இப்போதும் அவர் பக்தர்கள் அவர் படத்துக்கு முன்னால் காப்பியை நிவேதனம் செய்து பருகும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
சலவைத் தொழிலாளிக்கு உபதேசம்
சுவாமிகள் சாப்பிட்டானதும் அவர் உத்தரவுப்படி பக்தி சிரத்தையோடு பெரிய ஞானக் குதம்பை அழுகுணிச்சித்தர், குதம்பைச் சித்தர் பாடல்களை சின்னப்பயல் என்கிற சலவைத் தொழிலாளி படிப்பது வழக்கம். கஞ்சி கொடுத்தால் என் பிள்ளைக்கு முதலில் கொடு என்று சலவைத் தொழிலாளி சாப்பிட்ட பின்னரே அவர் சாப்பிடுவார்.
பக்த சிரோன்மணிகள், பண்டிதர்கள், வேதவிற்பன்னர்கள் என்று பலரும் தமக்கும் இந்த வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்குவார்கள்.
சின்னப்பயலுக்கு மஹாவாக்ய உபதேசம் செய்தார் சுவாமிகள். மஹாவாக்ய உபதேசம் என்பது கிடைத்ததற்கு அரிதானது. குருவிடம் பன்னிரண்டு ஆண்டுகள் பயின்று பக்குவம் பெற்றவர்களுக்கு மட்டுமே மகான்களால் உபதேசிக்கப்படுவது.
எப்போதும் மழலைப் பேச்சு பேசும் குழந்தையானந்த சுவாமிகள், அம்மந்திரத்தை அட்சர சுத்தமாக கணீரென்று உச்சரித்து சின்னப்பயலுக்கு உபதேசம் செய்தார். அவருடன் இருந்த செல்லப்பா சுவாமிக்கும், பரசுராம் அய்யருக்கும் வேறு சில ஓம்கார மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்து, இதை வீண்செலவு செய்துவிடாதீர்கள். ஆத்ம சாட்சாத்காரத்தை வளர்த்துக்கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்கினார்.
நாளைக்குச் சொல்கிறேன்
அரிய வகை மூலிகைகளையும் அவை காணப்படும் இடங்களையும் நன்கறிந்தவர் சுவாமிகள். ஒரு முறை சுருளிமலையில் தான் பார்த்த கொடியின் விசித்திர அமைப்பை சுவாமிகளிடம் விவரித்தார் செல்லப்பா என்கிற சித்த வைத்திய சுவாமிகள்.
‘ஓ அதுவா? அதைக் கிள்ளினால் வருகிற பாலை உண்டாயா?’
‘ஐயோ ஒரே கசப்பாக இருந்ததால் துப்பிவிட்டேன்’.
‘அடடா சாப்பிட்டிருந்தால் 200 வயது வாழலாமே’ என்றார் சுவாமிகள் சிரித்தபடி.
அதை எனக்கு மறுபடி காட்ட முடியுமா என்று கேட்டார் சித்த மருத்துவர்.
நாளைக்குச் சொல்கிறேன் என்று நாள்களைக் கடத்திவிட்டு, பிறகு சித்த மருத்துவர் மனதில் அந்த சிந்தனையே இல்லாமல் பண்ணிவிட்டார்.
பத்தாவது ஓட்டை
ஒரு முறை மதுரையில் ஒரு லாட சன்னியாசி, சுவாமிகளைப் பார்த்துக் கேட்டார்.
ஏன் இப்படி சமாதிகளில் மறைந்த பிறகும், மறுபடி தோன்றுகிறீர்கள்?
‘நான் என்னடா? உன்னைப்போல் ஒன்பது ஓட்டைகளில் அடங்கியவனா? பத்தாவது ஓட்டை செய்துகொண்டு தப்பித்து விடுவேன்' என்றார் சுவாமிகள்.
பிறப்பும் இறப்புமாய் தோன்றி மறையும் மானுடப் பெருங் கூட்டத்தில் எங்கே பிறந்து எந்தப் பெயரில் சுவாமிகள் இப்போது உலவுகிறாரோ யார் அறிவார்?
(தேடல் தொடரும்)
தஞ்சாவூர்க்கவிராயர்
தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago