இயேசுவின் உருவகக் கதைகள் 21: கேட்டதெல்லாம் கிடைத்துவிட்டால்...

By எம்.ஏ. ஜோ

தான் சொல்வதை எளிய மக்களும் எளிதில் புரிந்துகொள்ள வேண்டு மென்றுதான் உவமைகள் எனப்படும் உருவகக் கதைகளை இயேசு சொன்னார். அவர் சொன்ன எடுத்துக் காட்டுகளை மனத்தில் வைத்துச் சிந்தித்தால் போதும்; அவ்வப்போது நம்மில் தோன்றும் கேள்விகளுக்கான பதிலைப் பெறலாம்.

துன்பங்களைக் கடவுள் அனுப்புவதாக நினைப்போர் இருக்கிறார்கள். ‘ஏன் கடவுள் இப்படிச் செய்கிறார்? ஏன் மாற்றி மாற்றி என் வாழ்க்கையில் சோதனைகளையும் வேதனைகளையும் அனுப்புகிறார்?’ என்று கேட்போர் இருக்கிறார்கள்.

தங்கள் மன்றாடல்கள் கேட்கப்படவில்லை. தாங்கள் கேட்டதைக் கடவுள் தரவில்லை. அப்படியானால், என் மீது அவருக்கு அக்கறை இருக்கிறதா? என்னை அவர் அன்பு செய்கிறாரா என்று சிலர் அங்கலாய்க்கிறார்கள்.

இந்த இரு வகையான கேள்விகளுக்கும் இயேசு சொன்ன ஒரு எடுத்துக்காட்டில் பதில் இருக்கலாம். என்ன சொன்னார் இயேசு? “உங்கள் பிள்ளை உங்களிடம் வந்து அப்பம் வேண்டும் எனக் கேட்டால் அவனுக்குக் கல்லைக் கொடுப்பீர்களா? உங்களில் யாராவது அப்படிச் செய்வீர்களா? மீன் சாப்பிட ஆசைப்பட்டு, உங்கள் மகன் மீன் வேண்டும் எனக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பீர்களா? இங்குள்ளோரில் எந்தத் தந்தையாவது இப்படிச் செய்வாரா?” என்று கேட்டுவிட்டு, தான் சொல்ல விரும்பிய உண்மையைச் சொன்னார்.

“உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வற்றை, நற்கொடைகளை மட்டுமே தர வேண்டும் என்று தீயோராகிய உங்களுக்கே புரிந்திருக்கிறதே! அப்படியானால் உங்கள் இறைத்தந்தை நல்லது அல்லாத எதையும் உங்களுக்குத் தருவாரா?” என்று கேட்டார் இயேசு.

இறைவன் தீயதைச் செய்வாரா?

இயேசு கேட்ட இந்தக் கேள்விக்குப் பின்னே உள்ள கேள்விகள் என்ன? நம்மைத் தம் பிள்ளைகளாகக் கருதி அன்பு செய்யும் இறைவன் நமக்குத் துன்பங்களை அனுப்புவாரா? எனவே, நம்முடைய துன்பங்களுக்குக் கடவுளைக் குறைசொல்வது தவறாகாதா?

கடவுள் துன்பங்களை அனுப்புவதில்லை. காரணம், அவர் நம் அன்புத் தந்தை. அப்படியென்றால், துன்பங்கள் எங்கிருந்து வருகின்றன என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும்.

சில துன்பங்கள் நாமே தேடிக்கொள்பவை என்பது எளிதில் புரியும். ஆபத்தானவற்றை உறுதியாய் உடனே விலக்காமல், அவற்றை உள்ளே அனுமதித்தால், அவை நம்மை விரைவாகவோ மெதுவாகவோ அழிக்கும் என்பது விளங்கும். ஆசைகள், தேவைகளை கட்டுக்குள் வைத்திருக்கும் கட்டுப்பாடு இல்லாவிட்டால், அவை நம்மை இழுத்துப் போய் காட்டாற்றில் தள்ளக்கூடும் என்பது புரியும்.

வேறு சில துன்பங்கள் பிற மனிதரிடமிருந்து வருபவை என்பதையும் நாம் புரிந்து கொள்வோம். தங்களின் தன்னல லாபங்களுக்காக நம்மை ஏமாற்றி, நம்மைப் பயன்படுத்துவோர், எந்த உயர்ந்த விழுமியமோ, கொள்கையோ, மனிதநேயமோ இல்லாமல் தங்களின் பேராசைகளுக்கு நம்மைத் தீனியாக்க முனைவோர் என்று இந்தப் பட்டியல் நீளும்.

சில துன்பங்கள் எங்கிருந்து வருகின்றன என்று நம்மால் எளிதில் புரிந்துகொள்ள இயலாது என்பது உண்மை. விபத்துகள், இயற்கைப் பேரிடர்கள், ஒரு சிலரின் தவறுகளால் எண்ணற்ற மக்களைப் பாதிக்கும் பெரும் துன்பங்கள் போன்றவை எளிதில் புரிந்துகொள்ள முடியாதவை. இப்படி நம் சிந்தனை விரிந்தால், துன்பங்களை அனுப்புவது கடவுள் என்று தவறாக எண்ணி, அவரைக் குறை சொல்ல மாட்டோம்.

இயேசு சொன்ன தந்தை-மகன் எடுத்துக்காட்டு இன்னொரு புதிருக்கும் விடை சொல்லலாம்.

கேட்பதை கடவுள் ஏன் கொடுப்பதில்லை?

ஏன் நான் கேட்டதைக் கடவுள் தரவில்லை? கேட்டும் தராதவருக்கு எப்படி என் மீது அக்கறையும் அன்பும் இருக்க முடியும் என்று கேட்போர் இருக்கிறார்கள். இயேசு சொன்ன இந்த எடுத்துக்காட்டை முன்வைத்து, உற்றுநோக்கினால் இதற்கும் அங்கே பதில் இருப்பதைப் பார்க்கலாம். பசியில் மகன் அப்பம் கேட்டால், அன்பான தந்தை அதை நிச்சயம் அவனுக்குத் தருவார். பத்து அப்பம் சாப்பிட்ட பிறகும், மகன் தொடர்ந்து அப்பம் கொடு என்று கேட்டால், நல்ல தந்தை என்ன சொல்லுவார்?

“நெருப்பை விழுங்கினால் எப்படி இருக்கும் என்று நான் பார்க்க வேண்டும். கொஞ்சம் நெருப்புத் தா” என்று ஒரு முட்டாள் மகன் கேட்டால், அன்பும் ஞானமும் உள்ள தந்தை என்ன செய்வார்?

தொடர்ந்து மன்றாடிய பிறகும் நாம் கேட்டதைத் தரவில்லை என்றால், எதற்காக அதைக் கடவுள் தர மறுத்திருப்பார்? அது நம் தேவை என்று நினைத்தது தவறாக இருக்கலாமோ?

ஆபத்தான ஆசையைத் தேவை என்று நாம் ஒருகட்டத்தில் நினைத்திருக்கலாம். நமது சிந்தனை ஆழப்பட்டு அந்தக் கோரிக்கையைக் கடந்த பிறகு, நாம் கேட்டதைத் தராமல் இருந்த இறைவனுக்கு நாம் நன்றி சொல்லத் தானே செய்வோம்.

“அறியாமல், ஆழமாகச் சிந்திக்காமல் அவசரத்தில் கேட்டுவிட்டேன். நான் கேட்டதைத் தராமல் இருந்ததற்கு நன்றி, இறைவா!”

(தொடரும்) கட்டுரையாளர், தொடர்புக்கு : majoe2703@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்