திருவையாற்றில் காலபைரவர் சந்நிதியில் சதாகாலமும் குங்கிலியக் குண்டம் எரிந்து கொண்டிருக்கிறது. அந்த நறுமணக் குண்டத்திலிருந்து புறப்படும் தீச்சுவாலைகள்போல், தியாகையர் சமாதியின் அருகே மெளனத்தில் உறைந்த கீர்த்தனை களில் தோய்ந்து நகரும் காவிரி போல், திருவையாற்றின் ஒரு வீட்டுத் திண்ணையில், குழந்தை ஒன்று மெளனத்தில் ஆழ்ந்திருந்தது.
எப்போதும் எங்கோ வெறித்த பார்வை. பேச்சில்லை, சிரிப்பில்லை. பெற்றோர் ஸ்ரீரங்கம் வரதராஜ பிள்ளை, ரங்கநாயகி அம்மையார். குழந்தைக்கு கிருஷ்ணசாமி என்று பெயர் சூட்டியிருந்தனர். உட்கார்ந்த இடத்தில் அப்படியே உட்கார்ந்தபடி, வானத்தைத் துழாவும் கண்களுடன் இருக்கும் குழந்தையைப் பார்க்கக் கவலையாக இருந்தது.
தன் வயதையொத்த குழந்தைகளுடன் விளையாடாமல் தனித்திருப்பதிலும் பேச்சற்று இருப்பதுமாகக் குழந்தையின் இளமைக்காலம் கழிந்தது. பள்ளிப் படிப்பும் சொற்ப மாகவே இருந்திருக்க வேண்டும். கிருஷ்ணசாமி இளமை பருவத்தை எட்டியபோது, அவரது பற்றற்ற போக்கு துலாம்பரமாகத் தெரிந்தது.
திருவையாற்றிலிருந்து திருச்சிக்கு வந்து கௌபீனம் மட்டுமே அணிந்து தெருக்களில் சுற்றித் திரிந்தவரை சித்தசுவாதீனமில்லாதவர் என்றே பார்த்தவர் கருதினார்கள்.
மாக்கான் என்றனர் மக்கள்
அதோ போகிறான் ‘மாக்கான்’ என்று அவரைப் பார்ப்பவர்கள் உரத்துச் சொல்லத் தொடங்கினார்கள். எங்கே சுற்றினாலும் அரங்கனின் கோபுர விமானத்தின் மீதே அவர் பார்வை நிலைத்தி ருக்கும். வாய் ஏதேதோ பிதற்றும்.
பிச்சை எடுத்து உண்பதும் மந்தமாக ஓரிடத்தில் இருப்பதுமாக இவரது செய்கைகள் பிறர் கேள்விகளுக்குச் சொன்ன அசட்டுப் பதில்கள், இவரை ‘மாக்கான்’ என்றே மக்களிடம் உறுதிசெய்தன.
முடிதிருத்தும் கடைகளில் ‘மாக்கான்’ பகல்பொழுதைக் கழிப்பார். முடிதிருத்துவோரிடம் மிகுந்த நட்பும் அவர்களுடன் பழகுவதில் நாட்டமும் கொண்டிருந்த அவர், அடிக்கடி முகச்சவரம் செய்துகொண்டதாகத் தெரிகிறது. முடிதிருத்தும் கலைஞர்கள் மாக்கானின் பெருமைகளைப் பற்றிப் பேசத் தொடங்கினார்கள்.
ஒருமுறை பாதி முகச்சவரம் செய்து மறுபாதியை சவரம் செய்ய முற்பட்டபோது, “டேய் நிறுத்து! அதான் ஒரு பாதி போச்சேடா! மறுபாதிதான் இருக்கு!” என்று கூறி இறங்கிப்போய் விட்டாராம். அன்று மாலை இந்தியாவிலிருந்து பிரிந்து பாகிஸ்தான் தனி நாடாகப் போய்விட்ட செய்தி வானொலியில் ஒலிபரப்பாயிற்று!
மாக்கான் மகான் ஆனார்
மக்கள் மெல்ல மெல்ல அவரது கொச்சைப் பேச்சுகளை கூர்ந்து கவனிக்கலாயினர். இவர் குடும்பத்திலும் குங்கிலியம் போட்டது போல் ஞானத்தின் தீச்சுவாலைகள் எழுந்தன. இவரது தமக்கையார் காமாட்சி அம்மாவும் தம்பியின் அடியொற்றி ஞானத் தேடலில் புறப்பட்டுவிட்டார்.
இருவருமே திருவையாற்று சுடுகாட்டு சுவாமிகளிடம் ஞானதீட்சை பெற்றனர். கிருஷ்ணசாமி என்னும் பெயர் மறைந்தது. ‘மாக்கான் சுவாமிகள்’ என்று எங்கு சென்றாலும் மக்கள் இவரை வணங்கத் தலைப்பட்டனர்.
தம்மை ரங்கம் அழைத்துச் செல்லுமாறு அன்பர் ஒருவரிடம் மாக்கான் சுவாமிகள் கூற, அவரை அலக்காகத் தூக்கி வண்டியில் வைத்தாராம். பஞ்சுபோல் லேசாக இருந்தாராம் மாக்கான் சுவாமிகள்.
ரங்கத்தில் நாலு பேர் சேர்ந்தும் அவரை வண்டியிலிருந்து இறக்க முடியவில்லை. சிரித்தபடியே வண்டியிலிருந்து இறங்கி கோயிலை நோக்கிச் சென்றார் மாக்கான் சுவாமிகள். அவரைப் பற்றிய கதைகளும் புழங்கத் தொடங்கின. ஒரு வீட்டில் அவர் சாப்பிடுவதற்காக பழைய சாதத்தைக் கொண்டுவந்து வைத்தபோது, அதிலிருந்து ஆவி பறந்து சாதம் சுடச்சுட இருந்ததாம்.
மாக்கான் என்று மக்கள் தமக்கிட்ட வசைப்பெயரை மாலையாக அணிந்த படி ஏழைகளுக்கும், ஏதிலிகளுக்கும் உதவும் மகானாக ஆனார் மாக்கான் சுவாமிகள். தன்னை நாடி வந்தவர்களின் பிணிகளைத் தீர்த்ததாகவும் நடக்கப் போவதை முன்கூட்டிச் சொன்னதாகவும் கூறப்படுகிறது. அரிதாகக் கிடைத்த புகைப்படம் ஒன்றில் ‘திருவையாற்று மாக்கான் சுவாமிகள்’ எனும் ரங்க கிருஷ்ண பிர்ம்மம் (1943) என்றும் எழுதப்பட்டுள்ளது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே காவிரிப் பாலத்தை ஒட்டினாற்போல் உள்ள சாலையில் ரயில்வே கேட் அருகே மாக்கான் சுவாமிகளின் சமாதிக் கோயில் அமைந்திருக்கிறது.
சமாதி கோயிலுக்கு அருகிருந்து பார்த்தால், ஸ்ரீரங்கம் ஆலயத்தின் விமானம் பார்வையில் படுகிறது.
உடலை உதிர்த்த பிறகும் அரங்கனைச் சேவித்துவருகிறார் மாக்கான் சுவாமிகள்.
(தேடல் தொடரும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago