முருகக் கடவுள் மீதான பக்திப் பாடல்களில் ‘உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே, அள்ளி அணைத்திடவே எனக்குள் - ஆசை பெருகுதப்பா முருகா’ என்று டி.எம். சௌந்தரராஜன் பாடிய பாடலுக்குத் தனியிடம் உண்டு.
பழனிக்குச் சென்றிருந்த டி.எம்.எஸ்., ஒரு விடுதியில் தங்கியிருந்தபோது முஸ்லிம் சிறுவன் ஒருவன் முணு முணுத்துக்கொண்டிருந்த இப்பாடலைக் கேட்டு மெய்ம்மறந்தார். பெயர் தெரியாத யாரோ ஒருவர் எழுதிக்கொடுத்திருந்த அந்தப் பாடலை, மனப்பாடம் செய்து வைத்துக்கொண்டு பாடிவருவதாக அந்தச் சிறுவன் கூறியிருக்கிறான். முழுப் பாடலையும் அவனிடம் எழுதி வாங்கிக்கொண்டு சென்னை திரும்பினார். அப்பாட்டுக்குத் தாமே இசையமைத்துப் பாடி கிராமபோன் தட்டிலே பதிவிட்டார். கிராமபோன் தட்டு சுழன்றது. தமிழ்நாட்டின் பட்டி தொட்டிகளிலும் கோவில்களிலும் திருவிழாக்களிலும் தட்டு சுழன்று, கேட்போர் நெஞ்சங்களில் எல்லாம் முருகபக்தி மூண்டெழ வைத்தது.
தாம் கச்சேரிக்குச் சென்ற இடங்களில் எல்லாம் இப்பாடலைப் பாடி இதை இயற்றியவர் யார் என்று சபையோரிடம் கேட்பது டி.எம்.எஸ். வழக்கம். யாருக்கும் தெரியவில்லை. யாரும் இப்பாடலை உரிமை கொண்டாடவும் இல்லை.
ஒரு ஜீவன் முக்தர்
பல ஆண்டுகள் கழித்து சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்கு வழிபாட்டுக்குச் சென்ற டி.எம்.எஸ்.ஸுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. பிரகாரத்தில் ஒரு கல்வெட்டில் இப்பாடல் வரிகள் செதுக்கப்பட்டு, இயற்றியவர் ஆண்டவன் பிச்சி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பிறகு நண்பர்களிடமும் மேடைக் கச்சேரிகளிலும் இப்பாடலை இயற்றியவர் ஆண்டவன் பிச்சி என்று தெரிவித்து மகிழ்ந்தார்.
ஆண்டவன் பிச்சி என்கிற மரகதவல்லி ஒரு ஜீவன் முக்தர். இவரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றுச் செய்திகள் சில பத்திரிகை நறுக்குகளிலும்,ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட ஒரு சிறிய 22 பக்கப் பிரசுரத்திலும் மட்டுமே காணக் கிடைக்கிறது.
இதைத் தவிர ஆண்டவன் பிச்சி பற்றி, செவிவழிச் செய்திகளாகத் தாம் அறிந்தவற்றை அவ்வப்போது சமயச் சொற்பொழிவாளர்களும் ஆன்மிகப் பெரியோரும் தெரிவித்து வந்ததற்குப் பதிவுகள் இருக்கின்றன.
ஏன் பிச்சி ஆனேன்?
1899-ம் ஆண்டு சென்னையில் பிறந்த மரகதவல்லி, முறையான பள்ளிப் படிப்பு படிக்கவில்லை. தமிழ், தெலுங்கு, சமஸ்கிருத மொழிகளில் பாண்டித்யம் பெற இவரது பாட்டியும் தந்தையாரும் உதவினர் என்று கூறப்படுகிறது. ஆயினும், தமது எட்டாவது வயதிலேயே பாடல்களை இயற்றத் தொடங்கி, நினைத்த மாத்திரத்தில் பாடலை இயற்றும் ஆசுகவியாக ஆனார் மரகதவல்லி.
‘ஏன் பிச்சி ஆனேன்?' என்கிற குறிப்பொன்றில் முருகப்பெருமான் மீது தாம் கொண்ட காதலே காரணம் என்று பாடியிருக்கிறார். அரங்கன் மீது ஆண்டாள் கொண்ட காதலில் பிறந்த பாடல்களைப் போல், முருகன் தன்னை ஆட்கொண்டதால் தம்மை ஆண்டவன் பிச்சை என்று அழைத்துக்கொண்டு பாடல்களைப் பொழிந்தார் மரகதவல்லி.
எட்டு வயதிலேயே பால்ய விவாகம் ஆயிற்று. இல்லற வாழ்வில் ஈடுபட மனம் ஒப்பவில்லை. எப்போதும் முருகனையே சுற்றிச் சுழன்ற இவர் பாடல்கள் எல்லாம் மனமென்னும் தேனீயின் ரீங்காரம்.
பாடுவதை நிறுத்து...
ஒன்பது குழந்தைகளை இள வயதிலேயே பெற்றெடுத்த மரகத வல்லி, எப்போதும் காகிதமும் கையுமாக இருப்பார். கந்தனைப் பற்றிய சிந்தனை களே காகிதத்தில் கவிகளாக உருமாறும். ஒரு முறை பிரசவத்தின்போது பிறந்த குழந்தையைக் கவனியாது முருகன் மீது பாடல் புனைந்தபடி இருந்த மருமகளைக் கண்டு, சீறினார் மாமியார். அவர் கவி எழுதிய காகிதங்களைப் பறித்து ஒரு டிரங்குப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டியதுடன் நிற்கவில்லை. இனி முருகன் மீது பாடல் எழுதவும் கூடாது, முருகக் கடவுளின் சிந்தனையும் கூடாது என்று சத்தியம் வாங்கிக்கொண்டார்.
24 ஆண்டுகள் கழித்து மாமியார் மறைந்தார். பெட்டியைத் திறந்து பார்த்தபோது உள்ளே இருந்த மாமியாரின் செல்வமான ரூபாய் நோட்டுகளை கரை யான் அரித்திருக்க மரகதவல்லியின் செல்வமான ஆண்டி மீது பாடிய பாடல்கள் எழுதப்பட்ட காகிதங்கள் அப்படியே இருந்தன.
சந்நியாச தீட்சை
ஆண்டவன் பிச்சிக்கு 1954-ல் சந்நியாச தீட்சை அளித்து ஆசீர்வதித்தார் சுவாமி சிவானந்தா. குடும்பத்தாருக்கு அவர் சந்நியாசி ஆனதில் சம்மதமில்லை. காஞ்சிப் பெரியவரிடம் அழைத்துச் சென்ற னர். ‘இவள் ஆண்டவன் பிச்சி’ என்று கூறிப் புன்னகைத்தார் மகா பெரியவர்.
ஆண்டவன் பிச்சி, குமரன் மீது மட்டுமின்றி போகும் இடமெல்லாம் குடிகொண்டிருக்கும் தெய்வங்கள் மீதும் பாடல்கள் புனைவது வழக்கம். இனிய தமிழ் சொற்கள், தாளக்கட்டு, இன்னிசை ஆகியவற்றால் கேட்போரை மனமுருகச் செய்யும் பாடல்களை பாடியபடியே தமிழகம் மட்டுமன்றி ரிஷிகேசம், உடுப்பி, காசி, அயோத்தி, கயை, பிருந்தாவனம் ஆகிய இடங்களில் இருந்த கோவில்கள்தோறும் யாத்திரை சென்றார் ஆண்டவன் பிச்சி.
பாடல்கள் இயற்றியதுடன் மட்டுமன்றி மெட்டுக்களையும் அமைத்திருக்கிறார். அவை பெரும்பாலும் புராதனமான ராகங்களைக் கையாண்டு பாடப்பட்டவை. அவரது பாடல்கள் பலவற்றை அவரது மகள் காமாட்சி குப்புசாமி மெட்டமைத்து பாடியிருக்கிறார்.
வைஷ்ணவி பஜனாவளியில் இடம்பெற்றுள்ள,
‘அருள்தா பொருள்தா என்றுனைக் கேட்பது
மருள்தான் நிறைந்த மனத்தின் செயல்தான்
இருள்தான் இல்லா இதயத்துள்ளே
பொருளாய் உள்ள உயிர்நீ அன்றோ?’
- என்ற வரிகளில் உள்ள தத்துவநிலை தன்னிகரற்றது.
‘உள்ளம் உருகுதய்யா’, சென்னை தம்பு செட்டித் தெருவில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கதிர்காம வேலன் சந்நிதியில் ஆண்டவன் முருகனின் அழகைக் கண்டு மனம் உருகிப் பாடிய பாடலாகும். இப்பாடலை கதிர்காம வேலன் சந்நிதியில் பளிங்குக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.
முருகனைக் கண்முன் நிறுத்தி கண்ணீர் மல்கவைக்கும் விதமாக தமிழர்களின் மனங்களில் அப்பாடலைத் தமது வெண்கலக் குரலில் நிரந்தரமாகச் செதுக்கிச் சென்றுவிட்டார் அமரர் டி.எம்.எஸ்.
(தேடல் தொடரும்)
கட்டுரையாளர்,
தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago