நேற்று, இன்று, நாளை என்றும் காலை, மாலை, இரவு என்றும் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்றும் காலங்களை வகைப்படுத்திச் சொல்கிறோம். அப்படிக் காலங்களுக்கு அதிபதியாக இருக்கும் ஈசன், திரிகாலன் (முக்காலம்) என்கிற பெயரில் காட்சிதரும் இடம் ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே உள்ள ஒழுகூர்.
தூங்கானை மாடம்
இந்தக் கோயில் பிற்காலப் பல்லவர் களால் கற்றளியாக, கஜபிருஷ்ட விமானம் (தூங்கானை மாடம்) துலங்க அழகாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஏழாம் நூற்றாண்டுக்கும் முற்பட்ட அமைப்பைக் கொண்டதாகத் தெரிகிறது. பத்தாம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட ‘விஜய மகாராஜன்’ என்னும் பெயர் கொண்ட பார்த்திவேந்திரவர்மன் ஆட்சிக் காலத்திலும், பன்னிரண்டாம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட உத்தமத்தொண்டைமான் காலத்திலும் பிறகு பதினெட்டாம் நூற்றாண்டில் ஆர்க்காட்டைச் சேர்ந்த பச்சையப்ப செட்டியார் என்பவராலும் இக்கோயிலுக்குத் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு, குடமுழுக்கு செய்யப்பட்டிருக்கிறது.
‘ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து படுவூர் கோட்டத்து ஒழுகூர் நாட்டைச் சேர்ந்த ஒழுகூர்’ என்று வரலாற்றில் இந்த ஊரைக் குறித்துக் கூறப்பட்டிருக்கிறது.
1804-ம் ஆண்டு பச்சையப்ப செட்டியார் இக்கோயிலுக்குத் திருப்பணி செய்து குடமுழுக்கு நடை பெற்ற பிறகு, எந்தத் திருப்பணியும் நடைபெறாமல் இருந்தது.
அம்பிகையின் தரிசனம்
கோயிலின் ராஜகோபுரம், வடக்கு நோக்கிய நிலையில் இரண்டு நிலை களுடன் மூன்று சுதைக்கலசங்களுடன் அழகாகக் காட்சியளிக்கிறது. பரந்து, விரிந்த ஒற்றைப் பிராகாரத்துடன் உள்ளே கோயில் அமைந்துள்ளது. வாயில் சற்று மேடாகக் காட்சியளிக்கும் கட்டட அமைப்போடு நான்கு தூண்களுடன் கூடிய முன்பகுதியைத் தாண்டி இப்பகுதி தொடங்குகிறது. கோயிலுக்குள் நுழைந்தவுடன் அம்பிகை திரிபுரசுந்தரியின் சந்நிதியைத் தரிசிக்கலாம். நான்கு திருக்கரங்களுடன் மேற்கரங்களில் அங்குசம், பாசம் ஏந்தியும் கீழ்க்கரங்களை அபயமாக வைத்துக் கொண்டும் கருணைபொங்கும் தாயன்புடன் அம்பிகை விளங்குகிறாள்.
மிகப் பழமையான கோயில்களில் உள்ள அன்னைக்கு திரிபுரசுந்தரி என்கிற பெயர் இருப்பதைக் காணலாம். அம்பிகையைத் தரிசித்தவுடன் அப்பனைத் தரிசனம் செய்ய மேற்குப்புறம் திரும்பினால், கிழக்கு நோக்கிய நிலையில் சதுரபீட ஆவுடையாருடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார் திரிகாலேஸ்வரர்.
இது அகத்திய மாமுனி சுயம்பு வடிவமாகப் பிரதிஷ்டை செய்தது. ஒழுகூருக்கு அருகே உள்ள பெருங்காட்சி என்கிற ஊரில் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் என்கிற பெயரிலும் வாங்கூர் என்கிற ஊரில் பொன் அகஸ்தீஸ்வரர் என்கிற பெயரிலும் இரண்டு சிவலிங்கங்கள் உள்ளன. இரண்டு அகஸ்தீஸ்வரர்கள் மேற்கிலும் கிழக்கிலும் காட்சியளிக்க இங்கே முக்காலத்தையும் ஆட்சி செய்யும் திரிகாலேஸ்வரராக அருள்புரிகிறார்.
கோஷ்ட மூர்த்திகள், பிராகாரத்தில் உள்ள விநாயகர், முருகர், சண்டிகேசர் போன்ற தெய்வங்கள் புதிதாகச் செய்து வைக்கப்பட்டுள்ளன. பழைய சிலைகள் களவாடப்பட்டுவிட்டன. பிராகாரத்தில் நல்ல மிடுக்கோடும் கழுத்தில் ஆபரணங்கள் துலங்க நந்தி பகவான் காட்சிதருகிறார். வடமேற்குப் பிராகாரத்தில் தனி அம்பிகை ஒரு சந்நிதியில் காட்சிதருகிறாள்.
விக்னேஸ்வரி என்கிற பெயரில் ஒரு தனிச் சந்நிதியில் விநாயகர் வீற்றிருக்கிறார். இந்த விநாயகரின் உருவத்தில் பெண் அம்சம் ஏதும் இல்லை. ஆகையால், இவர் விக்னேஸ்வரன்தான். இந்தப் பல்லவர் காலத்து விநாயகர், பிள்ளையார்பட்டி விநாயகர்போல் இரண்டு கரங்களுடன் காட்சியளிக்கிறார்.
சப்தமாதர்கள்
ஆதியில் இந்தக் கோயிலை பல்லவர்கள் கட்டியதால், சப்தமாதர்களும் இந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அவற்றில் சில மட்டுமே தற்போது எஞ்சியுள்ளன. அவற்றுடன் அய்யனாரும் இருக்கிறார். இந்தக் கோயிலின் விமானம் கஜபிருஷ்டம் என்கிற அமைப்பைச் சேர்ந்தது. இதுவே இந்தக் கோயிலின் சிறப்பு. தமிழில் ‘தூங்கானை மாடம்’ என்று சொல்வர். யானை படுத்திருந்தால் அதன் பின்பகுதி எப்படியிருக்குமோ, அது போன்று இருக்கிறது. இந்தக் கோவிலின் விமானம் அர்த்த கஜபிருஷ்டம் என்கிற அமைப்பைச் சார்ந்தது. இந்தக் கோயிலின் தலவிருட்சமாக வில்வமரம் உள்ளது.
216 ஆண்டுகளாகத் திருப்பணியே காணாத இந்தக் கோயிலுக்குத் தற்போது திருப்பணி நடைபெற்று வருகிறது. மதிலே இல்லாதிருந்த நிலையில் 750 அடி நீளம் கொண்ட பிரம்மாண்ட மதில் கட்டப்பட்டுவிட்டது. உள்ளேயுள்ள கோயில் சந்நிதிக்குத் திருப்பணி செய்யப்பட வேண்டும்.
ஒழுகூருக்குச் சென்றால் ஸ்ரீ திரிகாலேஸ்வரரைத் தரிசிப்பதுடன் லட்சுமி நாராயண பெருமாள் கோயில், சுயம்பு மாகம் பிள்ளையார் கோயில், தர்மராஜா கோயில்களையும் தரிசிக்கலாம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago