எம்.ஏ. ஜோ
கடவுள் நல்லவர்களைப் பாதுகாத்து தீயவர்களை அழிக்க வேண்டும் அல்லவா? அப்போதுதானே அவர் கடவுள்? கொடியவரை உடனுக்குடன் அழித்துவிட்டால், அவர்கள் செய்கிற எண்ணற்ற கொடுமைகளைத் தடுக்கலாம் அல்லவா? அவற்றால் பாதிக்கப்படும் மக்களைப் பாதுகாக்கலாம் அல்லவா? ஏன் தாமதிக்கிறார்?
இது போன்ற கேள்விகள் பல காலமாக மனித மனங்களில் ஒலிப்பவைதாம். இந்தக் கேள்விகளுக்குப் பதில் கூறியுள்ளார் இயேசு. அந்தக் கதையை ‘களைகளின் கதை’ அல்லது ‘கோதுமையும் களைகளும்’ கதை என்கின்றனர்.
கோதுமையும் களைகளும்
நிலக்கிழார் ஒருவர் தம் வயலில் கோதுமை விதைத்தார். அவருக்கோ, பணியாளர்களுக்கோ தெரியாமல், அவருடைய எதிரி ஒருவன் இரவில் வந்து அவர் விதைத்த கோதுமை நாற்றுகளுக்கு நடுவில் களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான்.
தொடக்கத்தில் அந்தக் களைகள் கோதுமை போன்றே இருந்தன. வளரவளரத்தான் ‘அது கோதுமை அல்ல. ஆபத்தான, நச்சுத் தன்மை வாய்ந்த களைகள்’ என்பது தெரியவந்தது.
கோதுமைப் பயிர்களுக்கு பெருத்த சேதம் விளைவிக்கக்கூடிய களைகள் இவை என்பதால், வேண்டுமென்றே இன்னொருவரின் வயலில் இக்களைகளை விதைப்பது தண்டனைக்குரிய குற்றம் என அக்கால ரோமானியச் சட்டம் கூறியது.
நிலக்கிழாரின் வயலில் கோதுமைப் பயிருடன் சேர்த்துக் களைகளும் வளர்வதை முதலில் யாரும் கண்டறியவில்லை. சிறிது காலம் கழித்தே தெரியவந்தது. பணியாளர்கள் நிலக்கிழாரிடம் வந்து, “ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? இங்கே களைகள் வந்தது எப்படி?” என்று கேட்க, “இது பகைவனுடைய வேலை” என்றார் நிலக்கிழார்.
“நாங்கள் உடனே இந்தக் களைகளைப் பறித்து எறியட்டுமா?” என்று பணியாளர்கள் கேட்க, “வேண்டாம். நீங்கள் களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்து கோதுமைப் பயிர்களையும் பிடுங்கிவிடக்கூடும். எனவே, அறுவடைக் காலம்வரை காத்திருப்போம். அறுவடை நேரம் வந்ததும், முதலில் களைகளைப் பறித்து, கட்டுகளாகக் கட்டி எரித்துவிட்டு, பின்பு கோதுமையை அறுவடைசெய்து களஞ்சியத்தில் சேர்த்துவைப்போம்” என்றார் நிலக்கிழார்.
சரியான பொருள் என்ன?
இக்கதையின் பொருளைச் சரியாகப் புரிந்துகொள்ளாத சீடர்கள் சிலர் இயேசுவிடம் கேட்க, அவர் அதை விளக்கினார். கடவுள் நல்லவர்களுக்கு வெகுமதியையும் தீயோருக்குத் தண்டனையையும் உடனே தருவதில்லை. அவர் பொறுமையாகக் காத்திருக்கிறார். உலக முடிவின்போது தீயோருக்குத் தண்டனையும் நல்லோருக்கு முடிவில்லா நல்வாழ்வும் தருகிறார் என்று விளக்கினார் இயேசு.
எதற்காகக் காத்திருக்க வேண்டும்? உடனுக்குடன் தீயோரை அழித்துவிட்டால் அவர்கள் செய்யும் குற்றங்களைத் தடுக்க முடியுமே, அவற்றுக்குப் பலியாகிற மக்களைக் காக்க முடியுமே என்றுதானே நமக்கு கேட்கத் தோன்றும்?
1971 ஆம் ஆண்டில் உகாண்டாவின் ஆட்சியைக் கைப்பற்றி, சர்வாதிகாரியான இடி அமீன் எட்டு ஆண்டுகள் பதவியில் நீடித்து தனது அரசியல் எதிரிகளை மட்டுமல்லாமல் கல்லூரிப் பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், மருத்துவர்கள், நீதிபதிகள் என்று ஏறத்தாழ மூன்று லட்சம் பேரைக் கொன்றார்.
கடவுள் உடனே அவரைப் போன்ற கொடுங்கோலர்களைப் பதவியிலிருந்து நீக்கியிருந்தால் அல்லது அழித்திருந்தால், இத்தனை லட்சம் மக்கள் உயிரிழந்திருக்க மாட்டார்களே என்று கேட்கத் தோன்றுவது இயல்பு.
காத்திருப்பது ஏன்?
எத்தனை காலமானாலும் களைகள் களைகளாகவே இருக்கும். அவை பயிர்களாக மாறப் போவதில்லை. ஆனால், மனிதர்கள் அப்படி அல்ல. தொடக்கத்தில் தவறுகள் செய்தோர், திருந்தி நல்லவர்களாக மாறும் அதிசயம் எத்தனையோ முறை நிகழ்ந்துள்ளது.
“ஒவ்வொரு புனிதருக்கும் ஒரு கடந்த காலம் இருப்பதுபோல், ஒவ்வொரு பாவிக்கும் ஒரு எதிர்காலம் இருக்கிறது” என்றார் எழுத்தாளர் ஆஸ்கர் வைல்ட்.
ஆண்டுதோறும் அமர்க்களமாக அறிவிக்கப்படும் நோபல் பரிசுகளை ஏற்படுத்திய ஆல்பிரெட் நோபல் வெடிமருந்தைக் கண்டறிந்ததில் இருந்து எப்படி மாறினார் என்பது பற்றி வாசித்திருப்போம். இத்தகைய மாற்றத்தின் மீதுள்ள நம்பிக்கையால்தான் கடவுள் காத்திருக்கிறார்.
(தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : majoe2703@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago