உயிர் வளர்க்கும் திருமந்திரம் 116: விடுதலையை அறிவதே அறிவு

By செய்திப்பிரிவு

கரு.ஆறுமுகத்தமிழன்

இருள் தனக்குள் அகப்பட்ட எதையும் அறியவிடாது; எதுவாக இருந்தாலும் மறைத்து வைத்துக்கொள்ளும். அறியாமையும் அவ்வாறே; எதையும் அறியவிடாது. ஆகவே அறியாமை இருளோடு ஒப்பிடப்படுகிறது. ஒருவகையில் பார்த்தால் அறியாமை இருளை விடவும் கொடியது. ஏன்? சைவசித்தாந்த மெய்யாசிரியர்களில் ஒருவரான உமாபதி சிவம் சொல்கிறார்:

ஒருபொருளும் காட்டாது இருள்உருவம் காட்டும்;

இருபொருளும் காட்டாது இது.

(திருவருட்பயன், இருள்மலநிலை, 3)

இருள், தான் மூடி வைத்திருப்பவற்றைத்தான் காட்டாது; தன்னைக் காட்டும். அதாவது, இருளுக்குள் இருக்கும் பொருள்தான் தெரியாதே ஒழிய, இருள் இருப்பது தெரியும். ஆனால் அறியாமையின் விவகாரம் வேறு: அறியாமை, தான் மூடி வைத்திருப்பவற்றையும் காட்டாது; தன்னையும் காட்டாது. அதாவது, அறியாமை காரணமாக நாம் பிறவற்றையும் அறியமாட்டோம்; நம்மிடம் அறியாமை என்று ஒன்று இருப்பதையும் அறியமாட்டோம்.

‘நான் ஒரு முட்டாளுங்க’ என்று தன் அறியாமையை அறிக்கை இடுவதைப்போல வரும் சந்திரபாபு பாடிய கண்ணதாசன் பாடலில்கூட ‘ரொம்ப நல்லாப் படிச்சவுங்க நாலுபேரு சொன்னாங்க—நான் ஒரு முட்டாளுங்க’ என்று வஞ்சப்புகழ்ச்சியே வெளிப்படும். அறியாமையில் இருப்பவர்கள் தங்கள் அறியாமையை அறியாமலே இன்புற்று இருக்கிறார்கள். அறியாமையின் வீச்சை எளிதாக எடுத்துக்காட்டுகிறார் அப்பர் திருநாவுக்கரசர்:

கூவல் ஆமை குரைகடல் ஆமையைக்

கூவ லோடுஒக்கு மோகடல் என்றல்போல...

(தேவாரம், 5:100:5)

கிணற்று ஆமை, கடல் ஆமையைக் கேட்டதாம்: என்னவோ பெரிதாய்க் கடல் கடல் என்று பெருமை பீற்றிக்கொள்கிறாயே, இந்தக் கிணற்றின் அளவு இருக்குமா உன்னுடைய அந்தக் கடல்?

அறியாமைக்கு ஆணவம்

அறியாமையை ஆணவம் என்று அழைக்கிறது சைவசித்தாந்தம். அறியாமைக்கும் ஆணவத்துக்கும் என்ன தொடர்பு? படர்ந்து விரியக்கூடிய உயிரின் அறிவைப் படர்ந்து பெருகவிடாமல் அணுவைப்போல சுருக்கிச் நுணுக்கிச் சிறிதாக்கிவிடுவதால் அறியாமைக்கு ஆணவம் என்று பெயர். ஆனால் ஆணவம் என்பது திமிர் இல்லையோ? ஆணவத்தைத் திமிர் என்பது இன்றைய வழக்கு. திமிருக்குக் காரணம் எது? அறியாமைதானே? திமிர் என்பது அறியாமையின் ஒரு கூறு; அவ்வளவே. ஆணவமாகிய இந்த அறியாமையே பெரும் சிக்கல். அறியாமையை நீக்கி அறிவைப் பெறுதலே சைவசித்தாந்தத்தின் தலையாய முன்வைப்பு. திருமூலர் சொல்கிறார்:

அறிவுஅறிவு என்றுஅங்கு அரற்றும் உலகம்;

அறிவுஅறி யாமை யாரும் அறிகிலர்;

அறிவுஅறி யாமை கடந்துஅறிவு ஆனால்,

அறிவுஅறி யாமை அழகிய வாறே.

(திருமந்திரம் 2362)

‘அறிவு எங்கே? அறிவு எங்கே? என்று தேடு; அது எங்கிருந்தபோதும் அதை நாடி ஓடு’ என்று அரற்றிக்கொண்டே இருக்கிறது உலகம். ‘ஆம், ஆம்’ என்று அனைவரும் ஓடுகிறார்கள், தேடுகிறார்கள், சேகரிக்கிறார்கள். இந்தக் கொரானா நுண்தொற்றியின் காலத்தில் கடையடைத்துத் தட்டுப்பாடு வருவதற்குள் பொருள்களை வாங்கிச் சேகரிக்க மக்கள் முண்டுவதைப்போல, அறிவைச் சேகரிக்கவும் மக்கள் முண்டுகிறார்கள்தாம்.

ஆனால் சேகரித்தது அறிவைத்தானா? அறியாமையை அல்லவா? ‘காற்று வாங்கப் போனேன்; ஒரு கவிதை வாங்கி வந்தேன்’ என்றதைப்போல, அறிவு வாங்கப் போனவர்கள் அறியாமையை அல்லவா வாங்கி வந்திருக்கிறார்கள்? அந்த அறியாமையை அறிவு என்று கூவல் ஆமைகளைப்போலத் தவறாக அல்லவா நினைத்துக் கொள்கிறார்கள்? இவர்கள் அறியாமையைக் கடந்து மெய்யாகவே அறிவைக் கண்டடையும்போது, இதுவரை அறிவு என்று எண்ணிக்கொண்டிருந்த எல்லாம் அறியாமை ஆவதையும் காண்பார்கள். ‘நம் அறிவின் அழகு இம்மட்டுத்தானா’ என்றும் வியப்பார்கள்.

ஆமைக்கு எப்போது புலப்படும்

‘அறிதொறும் அறியாமை கண்டற்றால்...’ என்று காமத்துப்பாலில் அறிவாராய்ச்சி செய்கிறது ஒரு குறள் (1110). அறிவு என்று நாம் நினைத்துக்கொண்டிருப்பதெல்லாம் அறியாமை என்பது எப்போது புலப்படும்? மேலும் அறிகையில்தான் புலப்படும். இதுகாறும் மிகப்பெரியது என்று தான் நினைத்துக்கொண்டிருந்த கூவல் (கிணறு) மிகச் சிறியது என்பது ஆமைக்கு எப்போது புலப்படும்? மெய்யாகவே கடலையும் அதன் பெருமையையும் காண்கையில்தான் புலப்படும். அறிய அறியவே அறியாமை புலப்படுகிறது; விலகுகிறது.

அறியாமை மலம் என்று தூற்றப்படுகிறது; அறிவோ சிவம் என்று ஏற்றப்படுகிறது. ஏனெனில், அறியாமை ஒருவரை அடிமைப் படுத்துகிறது. அறிவோ, ஒருவரை விடுதலைப்படுத்துகிறது. அறிவே விடுதலை; விடுதலையை அறிவதே அறிவு.

(அறிவது தொடரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு : arumugatamilan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்