தெய்வத்தின் குரல்: அத்வைத மோட்சம்

By செய்திப்பிரிவு

பத்தினியிடமும், பிள்ளையிட மும், மற்றவற்றிடமும் நாம் வைக்கிற பிரியத்துக்கெல்லாம் உண்மையில் நம்மிடமே உள்ள பிரியம்தான் காரணம்; நம்மில் உள்ள நிறைவுக்காகத்தான் மற்றவரிடம் பிரியம் காட்டுகிறோம், என்பது யாக்ஞ வல்கியரின் உபநிஷத உபதேசம்!

பகவானிடம் பிரியம் வைத்து நாம் பூஜை செய்தாலும் சரி, உலகத்திடம் பிரியம் வைத்து சமூக சேவை செய்தாலும் சரி, அதெல்லாம்கூடத் தனக்கு ஒரு நிறைவை உண்டாக்கிக் கொள்வதற்காக, நம்மிடமே நமக்குள்ள பிரியத்தால் செய்வதுதான். இந்த நிறைவை அடைவதற்காக, வெளியிலே எத்தனை கஷ்டம் வந்தாலும், துக்கம் ஏற்பட்டாலும், தியாகங்கள் செய்ய வேண்டியிருந்தாலும் நாம் பொருட்படுத்துவதில்லை.

நேரடியாக நமக்கே நல்லது செய்துகொள்ள வேண்டும் என்று பணத்தையும், இந்திரிய சுகங்களையும் தேடிப்போனால், இந்த உள் நிறைவு உண்டாக மாட்டேன் என்கிறது. மாறாக சுய காரியங்கள் நிம்மதியின்மையிலும் துக்கத்திலுமே கொண்டு விடுகின்றன.

மனம் என்கிற மாயக் கண்ணாடியில் பிரதிபலிக்கிற பரமாத்ம பிம்பத்தையே ‘நான்’ என்று நினைக்கிறோம். அந்தப் பிம்பத்துக்கு அழகுசெய்வது என்றால் உண்மையில் பரமாத்மாவுக்கு அழகு செய்ய வேண்டும். பரமாத்ம சொரூபமான லோகத்துக்கெல்லாம் செய்கிற சேவை இதனால்தான் நிறைவைத் தருகிறது. அம்பாளுக்குச் செய்கிற அலங்காரம்தான் நமக்கு அழகு. நமக்கே செய்துகொள்கிற அலங்காரம் அகங்காரத்துக்குத்தான் வழிகாட்டும். இதை மற்றவர்களும் ரசிப்பதில்லை. அம்பாளை அலங்கரித்தால், அதைப் பார்த்து எல்லோரும் சந்தோஷிக்கிறார்கள்.

ஆத்மாவுக்கு உதவி அதுவே

பரமாத்ம சொரூபமான உலகுக்குச் செய்கிற நல்லதேதான் உண்மையில் நமக்கும் நல்லது; ஆத்ம க்ஷேமம் அதுவே. இதை நம்முடைய உள் மனமே அறிந்திருக்கிறது. அதனால்தான் தனக்கென்று செய்துகொள்கிற சௌகரியங்களில் கூட ஏற்படாத நிறைவு, பிறருக்காக அசௌகரியப் படும்போது ஏற்படுகிறது.

உலகம் பரமாத்ம ஸ்வரூபம் என்றால் நாமும் அதே பரமாத்ம ஸ்வரூபம்தான். மனம் என்கிற கண்ணாடியை எடுத்துவிட்டு, அந்தப் பரமாத்ம சொரூபமே நாம் என்பதை அனுபவித்துப் பார்க்க வேண்டும். இதுதான் தியானம் என்பது. நாம் செய்கிற இத்தனை காரியங்களும் கடைசியில் ஒரு காரியமுமில்லாத அந்த ஆத்ம தியானத்தில்தான் நம்மைச் சேர்க்க வேண்டும். நான் எத்தனை எத்தனையோ அனுஷ்டானங்களைச் சொல்கிறேனே, அவற்றின் முடிவு இதுவே.

இதைச் செய் அதைச் செய்

முதலில் சித்தம் சுத்தமாவதற்காக ‘இதை விடு, அதை விடு’ என்று சொல்வதைவிட முக்கியமாக ‘இதைச் செய், அதைச் செய்’ என்று பலவிதமான கர்மாக்களை விதித்திருக்கிறது. ஒரு காரியத்தில் ஈடுபடுவதே நமக்கு இயல்பாக, சுபாவமாகக் கைவருகிறது. எனவே இந்த மாதிரி, நமக்குச் சொந்த விருப்பு வெறுப்பு இல்லாமல் சாஸ்திரம் சொல்கிற காரியங்களை ஆரம்பிக்கிறோம். இதிலும் ஆரம்பத்தில் விருப்பு வெறுப்பு தலைத்தூக்கத்தான் செய்யும்.

இருந்தாலும் எடுத்த எடுப்பில் சிந்தையை அடக்கித் தியானம் செய்வதைவிட, ஏதோ கொஞ்சத்தில் கொஞ்சமாவது விருப்பு வெறுப்புகளை, சௌகரி்ய அசௌகரியங்களைப் பாராமல் கர்மாக்களை அனுஷ்டானம் செய்ய முடிகிறது. இப்படி ஒரு பிரயத்தனத்தை ஆரம்பித்துவிட்டால், அப்புறம் பகவத் கிருபையால் விருப்பு வெறுப்புகள், சௌகரிய அசௌகரிய எண்ணங்கள் மேலும் மேலும் குறைந்து ஸத்கர்மாக்களை ஒழுங்காக செய்ய முடிகிறது. ஆசையும் துவேஷமும் குறைவதால் சித்தம் சுத்தமாகிறது. இப்படிச் சுத்தமான பிறகுதான் அது ஒருமுகப்பட்டு தியானத்தில் அமிழ முடியும். இந்த நிலையில்தான் எல்லாக் காரியங்களையும் விட்டுவிட்டு, காட்டுக்குபோய் மூக்கைப் பிடித்துக் கொள்ள முடியும்.

இதன் முடிவில் நல்ல தியானம் சித்தித்துவிட்டால் அப்புறம் எல்லாமே பரமாத்ம சொரூபம் என்றாகிவிடும். இந்த நிலையில் எதைவிட்டும் ஓடிப்போய் காட்டில் உட்காரப் வேண்டியதில்லை. நிஷ்டை என்று தனியாக ஒன்றைச் சொல்லி மூக்கைப் பிடித்துக்கொண்டு உட்கார வேண்டியதும் இல்லை. காடு, நாடு, ஏகாந்தம், கூட்டம் எல்லாம் பரமாத்மாதான். நம் ஆத்ம சாந்தியை எதுவுமே குலைக்காது என்றாகிவிடும். தக்ஷிணாமூர்த்தி போல உள்ள மாறாத சாந்தத்தோடு, வெளியே எத்தனை கொட்டமும் அடிக்கலாம்.

கீதையில் பகவான் அர்ஜுனனிடம் சுதர்மத்தைப் பண்ணு, அதாவது, யுத்த காரியம் பண்ணு என்றார். அவரே எந்தக் காரியத்தையும் பண்ணாத தியான யோகத்தையும் சொன்னார். தியானத்தின் எல்லை நிலத்தில் பிரம்ம நிஷ்டையில் சதாகாலமும் இருந்த ஜனகர் முதலானவர்கள் லோக க்ஷேமத்துக்காக எப்போது பார்த்தாலும் காரியம் செய்ததாகவும், தானும்கூட அப்படியே செய்வதாகவும் சொன்னார். இதென்ன, ஒன்றுக்கொன்று முரணா என்றால், இல்லவே இல்லை.

ஒன்றிலிருந்து இன்னொன்று என்று இவை வருகின்றன. நேராக மனசை அடக்கி ஆத்மாவை அநுஸந்தானம் செய்யமுடியாத ஆரம்ப நிலையில் கர்மாநுஷ்டானம்; அதனால் சித்த சுத்தி வந்தபின் கர்மம் தொலைந்த தியானம், யோகம், இத்யாதி; இதில் சித்தியானபின் எதுவுமே தன்னை பாதிக்காது என்ற நிலையில் லோக க்ஷேமத்திற்காக கர்மா - உள்ளே அடக்கி வெளியே கூத்தடிக்கிற நிலை.

‘முடிவிலே லோகமெல்லாம் மாயை, இருக்கிற ஒரே வஸ்து பிரம்மம்தான். நாம் அதற்கு இரண்டா வதாக இல்லாமல் அத்வைதமாக அதோடு ஒன்றிப்போய், ஒரு காரியமும், எண்ணமும் இல்லாமல் பிரம்மமாகவே இருக்க வேண்டும்’ என்பதுதான் ஸ்ரீபகவத்பாதரின் சித்தாந்தம். அவர் பெயரை வைத்துக்கொண்டிருக்கிற நானோ எப்போது பார்த்தாலும் பல தினுசான காரியங்கள் - வேத கர்மங்கள், பூஜை, ஜபம், பரோபகாரம் ஆகியவற்றையே - சொல்லி வருகிறேனே என்றால், நாம் இருக்கிற ஸ்திதியில் இங்கேயிருந்துதான் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இப்படி ஆரம்பித்தால் இதுவே படிப்படியாக அத்வைத மோக்ஷத்தில் கொண்டுவிடும்.

(தெய்வத்தின் குரல் முதல் பாகம்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்