மகாநாராயண உபநிடதம்: வாழ்க்கை முழுவதும் யாகம்

By செய்திப்பிரிவு

ரஞ்சனி பாசு

சுத்தமான ஆகாயத்தில் சூரியனாகவும், இடைவெளி யில் காற்றாகவும், யாக மேடையில் அக்னியாகவும், வீட்டில் அதிதியாகவும், மனிதர்களிடையேயும், தேவர்களிடையேயும், நேர்மையான நடத்தையாகவும், வானில் வாழ்வதாகவும், நீரில் பிறப்பதாகவும், சூரிய கிரணங்களில் பிறப்ப தாகவும் உலகின் அழகிலும் ஒழுங்கிலும் தோன்றுவதாகவும், மலையில் பிறப்பதாகவும், பேருண்மையான ஒன்றே உள்ளது.

பெருங்கடலில் இருந்து அலைகளைப் போல், பரமாத்மா விடமிருந்து உயிர்களுக்கு இன்ப மளிக்கும் பிரபஞ்சம் தோன்றியது. அந்தப் பரஞ்சோதியின் ரகசிய நாமமான ‘ஓம்’ எனும் மந்திரத்தை, அதை மெதுவாக ஜெபித்து ஒருவன் சாகாநிலையை எய்துவான். இது ஒளிமிக்க ஞானிகளின் நாவில் உறைவது. அழியாத ஆனந்தத்தின் நடுவில் ஆதாரமாக விளங்குவது. அகார-உகார-மகார நாதமாகிய நான்கு கொம்புகளை உடையதும், வெண்மையான ரிஷபம் போன்று சிறந்ததுமான இந்த ஓங்காரம் துதிக்கப் பெற்று, உடனிருப்பவர் காதில் கேட்கும்படி பரப்பிரம்மத்தை தோற்றுவித்தது. விழிப்பு, கனவு, உறக்கம் என்ற மூன்று நிலை களில் வைக்கப்பட்டுள்ளதும், ஆசிரியர்களால் ரகசியம் எனக் கருதப் படுவதும், பாலில் நெய் போன்று எங்கும் நிறைந்திருப்பதுமான இந்த சுயம்பிரகாசப் பொருளை தெய்விகத்தன்மை வாய்ந்தவர்கள் அடைகின்றனர்.

கிருஷ்ண யஜூர் வேதத்தில் தைத்திரீயாரண்யகத்தின் கடைசி பாகமே மஹாநாராயண உபநிடதம். இதை ‘யாஜ்ஞிகீ உபநிடதம்’ என்றும் குறிப்பிடுகின்றனர். தைத்திரீய உபநிடதத்தில் உள்ள சீஷாவல்லி, ப்ருகுவல்லி, ஆனந்தவல்லி என பொதுவாக அறியப்பட்ட மூன்று பகுதிகளுடன், ‘நாராயணவல்லி’ என்ற பெயரில் நாலாவது வல்லியாக இந்த உபநிடதம் அத்யயனம் செய்யப்படுகிறது. இது பல தகவல்களின் தொகுப்பாக அமைந்துள்ளதால் ‘ப்ரகீர்ணம்’ (சிதறியவை) என்றும் அழைக்கப்படுகிறது. உள்ளடக்கத்தின் தன்மையால் பத்து பிரிவுகளாக அமைந்துள்ளது.

“குரு சிஷ்யர்களாகிய எங்கள் இருவரையும் சேர்த்து பிரம்மம் காப்பாற்றட்டும். எங்கள் இருவரையும் சேர்த்து போஷிக்கட்டும். நாங்கள் இருவரும் சேர்ந்து வீரியத்துடன் உழைப்போமாக, எங்கள் அத்யயனம் கூர்மையுள்ளதாகவும் பிரகாசம் உள்ளதாகவும் ஆக வேண்டும். ஒருபோதும் நாங்கள் ஒருவரையொருவர் துவேஷிக்காமல் இருக்க வேண்டும். ஓம், மூவகையிலும் சாந்தி நிலவுக” என்ற சாந்தி மந்திரத்துடன் உபநிடதம் தொடங்குகிறது.

இவ்வுலகில் உள்ள எல்லாம் எதனிடம் ஒன்றாகக் கூடி வாழவும், ஒடுங்கவும் செய்கிறதோ, எதனிடம் எல்லா தேவர்களும் தத்தம் அதிகாரங்களுடன் உறைகிறார்களோ, அதுவே சென்றனவும் இனி வருவனவும் ஆகிய அனைத்துமாக உள்ளது. எவன் உயர்ந்ததற்கு எல்லாம் உயர்ந்தவனோ, பெரியதற்கு எல்லாம் பெரியவனோ, ஒப்பற்றவனோ, வெளிப்படையாகத் தோன்றாதவனோ, அளவு கடந்த வடிவம் உடையவனோ, உலகெல்லாம் ஆகியவனோ, புராதனனோ, இருளுக்கு அப்பாற்பட்டவனோ, அவனைக் காட்டிலும் வேறானதும், சூட்சுமமானதும் பிறிதொன்றும் இல்லை. அதுவே சத்தியம். அதுவே தீர்க்கதரிசிகளின் பரப்பிரம்மம்.

தவத்தின் மேன்மை

உண்மை பேசுதல் தவம், உண்மையாக நடத்தல் தவம், கேள்வி தவம், அமைதி தவம், புலனடக்கம் தவம், மனவடக்கம் தவம், ஈகை தவம், வேள்வி செய்தல் தவம், ‘பூ;புவ;ஸுவ என்பது பிரம்மம். இதை உபாசித்தலாகிய இதுவும் தவம்.

அணுவுக்கும் அணுவாகவும், பெரிதிலும் பெரிதாகவும் உள்ள ஆத்மா இந்த ஜீவனுடைய உள்ளத்தில் உறைவது, செயலைக் கடந்த அந்த ஆத்மாவை அந்தக் கரணங்களின் தெளிவால் ஒருவன் காண்கிறான். சோகமற்றவனாக அந்த ஆத்மாவின் பெருமையையும் உணர்கிறான்.

தேடலின் சிறப்பு

செம்மையான வேதாந்த ஞானத்தால் நிச்சயபுத்தி உடையவர்களும், சந்நியாச யோகத்தால் பரிசுத்தமான அந்தக்கரணம் உடையவர்களுமான துறவிகள் ஜீவன் முக்தர்களாகவே வாழ்ந்து, சரீரம் விழுந்த பின்னர், பற்று அனைத்திலிருந்தும் அறவே விடுபடுகின்றனர். ஒரு நகரத்தின் நடுவில் உள்ள அரண்மனை போன்ற இருதயக் கமலம் பரமாத்மாவின் உறைவிடம். அது சின்னஞ்சிறியது. அதனுள் இன்னும் சிறிய ஒரு ஆகாயம் (சிற்றம்பலம்) உள்ளது. அது துக்கம் நீங்கிய இடம். அதனுள் எது உள்ளதோ அதைத் தியானத்தால் தேடி அறிய வேண்டும். வேதத்தின் ஆரம்பத்தில் கூறப்படுவதும், வேதத்தின் முடிவில் உள்ள உபநிடதத்தில் நிலை பெற்றுள்ளதுமான ஓங்காரம் என்னும் எந்த ஒலி உண்டோ அது பிரகிருதி லயத்திற்கு அப்பால், மூலப் பிரகிருதியையும் கடந்து, அ-உ-ம விற்கும் அப்பால் நாதமாக எஞ்சி நிற்பது. அதுவே மகேஸ்வர சொரூபம்.

ஞான சாதன நிரூபணத்தில் பலத்தால் தவம், தவத்தால் சிரத்தை, சிரத்தையால் கூரிய புத்தி, கூரிய புத்தியால் திடசங்கல்பம், திட சங்கல்பத்தால் மனத்தெளிவு, மனத்தெளிவால் சாந்தி, சாந்தியால் உண்மையை மறவாமை, உண்மையை மறவாமையால் அதை இடைவிடாது நினைத்திருத்தல், அப்படிப்பட்ட நினைவால் விக்ஞானம், விக்ஞானத்தால் ஆத்மாவை ஒருவன் உணர்ந்து அனுபவிக்கிறான். ஓங்காரத்தை ஜெபித்துக் கொண்டு சந்நியாசி ஆத்மாவைத் தியானிக்க வேண்டும். இதுதான் சிறந்த உபநிடதமும் தேவ ரகசியமும். எவன் இங்ஙனம் அறிகிறானோ அவன் பிரம்மத்தின் மகிமையை அடைகிறான்.

இவ்வாறு அறிந்தவனது வாழ்க்கை முழுவதுமே ஒரு யாகம். அந்த யாகத்துக்கு எஜமானன் ஆத்மா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்