உயிர் வளர்க்கும் திருமந்திரம் 114: அன்பின் வழியது உயிர்நிலை

By செய்திப்பிரிவு

கரு.ஆறுமுகத்தமிழன்

‘செம்ம அடி, செம்ம படம், செம்ம அழகு’ என்று தொட்டதற்கெல்லாம் செம்மை பேசுகிறார்கள் தமிழர்கள். செம்மை (perfection) என்பது என்ன? செம்மை என்பது முழுமை; குற்றம் இன்மை; ஒழுங்கு. ‘செம்மை என்பது எதையும் கூட்டவோ குறைக்கவோ தேவையில்லாத நிறைநிலை’ என்கிறார் கிரேக்க மெய்யியலாளர் அரிஸ்டாட்டில்.

‘நிறைநிலைச் செம்மை’ என்று ஒன்று இருக்க வாய்ப்பு உண்டா? இல்லை என்கிறார்கள் இயல்பியலாளர்கள் (physicists). செம்மையான கோடு, செம்மையான வட்டம் போன்றவையெல்லாம் வடிவகணித வரைவுகளில் வேண்டுமானால் இயலுமே ஒழியப் பொருள்நிலையில் இயலாது.

ஒட்டுமொத்தப் பேரண்டத்திலும் செம்மை யானது என்று ஒன்று கிடையவே கிடையாது. இந்தப் பேரண்டமும் பேரண்டத்தில் இருப்பனவும் எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கின்றன. இயங்குதல் என்பது நிலை மாறுதல். மாறிக்கொண்டே இருப்பன எப்படி நிறைவானவையாக, செம்மையானவையாக இருக்க முடியும்? நிறைவு என்பது முற்றி முடிந்துபோன நிலை அல்லவோ? எனில், நிறைவு என்பது இயக்கமற்ற தன்மை அல்லவோ?

அங்குலிமாலன் கதை

பௌத்தத்தின் தேரகாதையில் அங்குலி மாலன் கதை என்று ஒன்று. அங்குலிமாலன் (விரல் மாலை அணிந்தவன்) என்பவன் தன் குருவின் கட்டளைப்படிக் குருதட்சிணை கொடுப்பதற்காகக் காட்டுவழியில் வருகிறவர்களைக் கொன்று, அவர்களின் ஒற்றை விரலைத் துண்டித்து, துண்டித்த விரல்களை மாலையாகக் கோத்து வைத்தி ருப்பவன். ஆயிரம் விரல்கள் கோத்த மாலை கேட்டிருக்கிறார் குருநாதர்.

அங்குலிமாலனின் மாலையில் 999 விரல்கள் சேர்ந்துவிட்டன. நிறைவுபெற இன்னும் ஒரு விரல் தேவை. அப்போது அவ்வழியில் புத்தர் வருகிறார். புத்தரை ‘நில்’ என்கிறான் அங்குலிமாலன். ‘நான் அடைவதற்கு ஒன்றுமில்லாதவன்; ஆகவே நின்றுகொண்டுதான் இருக்கிறேன்; ஆயிரமாவது விரலை அடையவேண்டும் என்பதற்காக நீதான் இயங்கிக்கொண்டிருக்கிறாய்; ஆகவே நிற்கவேண்டியவன் நீதான்’ என்கிறார் புத்தர். அங்குலிமாலன் நின்றான்; புத்தர் அவனை வென்றார்.

‘செம்மை என்பது முழுமையின்மையைச் சார்ந்து நிற்பது’ என்கிறார் மற்றொரு கிரேக்க மெய்யியலாளர் எம்பெதக்ளீஸ். முழுமையின்மையே முழுமை பெறத் தூண்டும் உந்துவிசை. பேரண்டத்தில் இயங்கும் எல்லாமே நிறைவு பெறுதலை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கின்றன. உயிரின் நோக்கமும் அஃதே. உயிர் வளர்த்தல் என்பது செம்மை நோக்கியதே. செம்மையைத்தான் சிவம் என்று முன்வைக்கிறது தமிழ்ச் சைவம்.

சைவம் சிவனுடன் சம்பந்தம் ஆவது;

சைவம் தனைஅறிந் தேசிவம் சாருதல்;

சைவம் சிவம்தன்னைச் சாராமல் நீவுதல்;

சைவம் சிவானந்தம் சாயுச் சியமே.

(திருமந்திரம் 1512)

(1) சைவம் என்பது செம்மையுடன் தொடர்புகொள்ளல்; (2) சைவம் என்பது தன்னை அறிந்து செம்மைக்கு முனைதல்; (3) சைவம் என்பது முற்றச் சாராவிட்டாலும் சாரும் முனைப்புடன் செம்மையைக் கோதித் தடவியிருத்தல்; (4) சைவம் என்பது முற்றச் சார்ந்து செம்மையில் முழுகிப்போய் இருத்தல்.

உயிர் செம்மைப்படுவதற்கு நான்கு வழிகள் சொல்கிறது சைவம்: (1) சரியை –தொண்டும் தொடர்பும், (2) கிரியை – போற்றலும் பொலிவும், (3) யோகம் – ஆற்றலும் ஆழமும், (4) ஞானம் – அறிவும் செறிவும்.

உயிர்க்குஉயி ராய்நிற்றல் ஒண்ஞான பூசை;

உயிர்க்குஒளி நோக்கல் மகாயோக பூசை;

உயிர்ப்பெறும் ஆவா கனம்புறப் பூசை;

செயிர்க்கடை நேசம் சிவபூசை ஆமே.

(திருமந்திரம் 1444)

(1) அறிவால் செம்மை அடைந்து, அதனை உயிருக்கு உயிராய்ச் செறிய வைத்துக்கொள்வது அறிவு நிலை; (2) ஆற்றலால் செம்மை அடையத் தனக்குள் ஆழ்ந்து அதைத் தன் உயிரின் ஒளியாகப் பார்த்தல் யோக நிலை; (3) புறத்திலே வைத்துப் போற்றலால் செம்மை பெற்றுப் பொலிய நினைத்தல் போற்றல் நிலை; (4) குற்றமில்லாத அன்பால் செம்மை பெற நினைத்தல் தொண்டு நிலை என்னும் அன்பு நிலை; அன்பினால் வருவதே செம்மை; மற்ற எல்லாம் புறத்த; புகழும் இல. ‘செம்ம அறிவு, செம்ம ஓகம், செம்ம பூசை’ எல்லாவற்றிலும் சிறந்தது ‘செம்ம அன்பு.’ இல்லையா? அன்பின் வழியது உயிர்நிலை.

(அன்பால் உயிர் வளர்ப்போம்)

கட்டுரையாளர், தொடர்புக்கு : arumugatamilan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்