என். கௌரி
கோயில் கருவறையில் உள்ள மூலவரைத் தீபராதனையின் போது வணங்குவது மெய்சிலிர்க்கும் அனுபவம். அந்த மூலவரையே பல மணிநேரம் மனத்தில் நிறுத்தி சித்திரமாக்கும் பேறு பெற்ற அரிய ஓவியக் கலைஞர் ஆர். இளங்கோ. சென்னை ஆர்.கே. நகரைச் சேர்ந்த இவர், ஓவியத் துறையில் முப்பத்தைந்து ஆண்டு அனுபவம்கொண்டவர்.
திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய அறுபடை வீடுகளில் வசிக்கும் முருகப்பெருமானுக்குத் தன் ஓவியங்கள் வழியாக உயிர்கொடுத்திருக்கிறார். திருச்சி உச்சிப்பிள்ளையார், சென்னை வடபழனி முருகன், சிறுவாபுரி முருகன், திருப்போரூர் முருகன், திருவண்ணாமலை அருணாசலேசுவரர், உண்ணாமுலையம்மை என இவர் வரைந்திருக்கும் இறை ஓவியங்களின் பட்டியல் நீளமானது.
ஓவியங்களாகும் மூலவர்கள்
பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னர், திருவண்ணாமலை ஆலயத்தின் மூலவர்களான அருணாசலேசுவரர், உண்ணாமுலையம்மையை இவர்தான் முதன்முதலில் ஓவியமாக்கினார். “ஒரு விளம்பர நிறுவனத்துக்காக திருவண்ணாமலை குடமுழுக்கையொட்டி மூலவர்களை நான் ஓவியங்களாக வரைந்தேன். நான் வரைந்த ஓவியங்களையே இப்போது அனைவரும் பயன்படுத்துகிறார்கள். அதுவரை எழுபது ஆண்டுகளுக்குமுன் ஓவியர் ஒருவர் வரைந்த
‘நீர் வண்ண’ ஓவியத்தைத்தான் அனைவரும் பயன்படுத்திவந்தனர். இசையமைப்பாளர் இளையராஜா வெளியிட்ட ‘ரமண மாலை’ தொகுப்பில் அச்சடிக்கப்பட்டிருந்த ரமண மகரிஷி படத்தைப் பார்த்து ரமண மகரிஷியை ஓவியமாக வரைந்திருந்தேன். அந்த ஓவியத்தை இளையராஜாவிடம் சென்று காட்டியபோது, நான் வரைந்திருந்த ரமண மகிரிஷியைத் தொட்டுக் கும்பிட்டார். அது ஒரு மறக்க முடியாத அனுபவம்.
அந்த ஓவியத்தைப் பார்த்தபிறகுதான், எனக்குத் திருவண்ணாமலை அருணாசலேசுவரர், உண்ணாமுலையம்மனை ஓவியங்களாக வரையும் வாய்ப்பு கிடைத்தது. என் ஓவிய வாழ்க்கையில் அது ஒரு மாபெரும் அனுபவம். இரண்டரை மாதங்களுக்கு மேலாக மூலஸ்தானத்தில் அமர்ந்து மூலவர்களைக் கவனித்து மாதிரி வரைபடத்தை உருவாக்கிக்கொண்டேன். அதற்குப் பிறகு, முழுமையாக நுணுக்கங்களுடன் மூலவர்களை வரைந்துமுடிக்க நான்கு மாதங்கள் எடுத்துகொண்டேன்” என்று தன் ஓவிய அனுபவத்தை உற்சாகமாகப் பகிர்ந்துகொள்கிறார் இளங்கோ.
இறை ஓவியங்களுடன் உருவச் சித்திரங்கள் வரைவதிலும் ஓவியர் இளங்கோ கைதேர்ந்தவர். இவர் முறைப்படி ஓவியக்கல்லூரிக்குச் சென்று ஓவியக் கலையைக் கற்றுகொண்டவரல்ல. ஓவியரான தன் தந்தை ராமனிடம்தான் இளங்கோ, ஓவியக்கலையைக் கற்றுகொண்டுள்ளார். “அந்தக் காலத்தில், என்னுடைய அப்பா ராமன் வடசென்னையில் ‘ராமன் ஆர்ட்ஸ்’ என்ற ஓவிய ஸ்டுடியோவை நடத்திவந்தார். முதியவர்கள், இறந்துபோனவர்களின் அரிய, சிதைந்து போன புகைப்படங்கள், உருவச் சித்திரங்களை மறுசீராக்கம் செய்து ஒளிப்பட ஓவியங்களாக்குவதில் அவர் கைதேர்ந்தவர்.
நான் எட்டாம் வகுப்பு வரைதான் படித்துள்ளேன். என் தந்தையிடம் இருந்துதான் ஓவியங்களை வரையக் கற்றுகொண்டேன். முதலில் ஒளிப்படங்கள் எடுப்பதில்தான் எனக்கு ஆர்வமிருந்தது. அதற்குப் பிறகு, தந்தையின் ஓவியப் பணிகளைப் பார்த்து ஓவியங்கள் வரைய ஆரம்பித்தேன். அத்துடன், இறை ஓவியங்களை நான் தத்ரூபமாக வரைவதற்கு என் குரு மகரிஷி மலையரசனும் தூண்டுகோலாக இருந்தார். இறைவனை ஓவியங்களாக்கும் இலக்கணத்தை எனக்கு அவர்தான் கற்றுக்கொடுத்தார்,” என்று சொல்கிறார் இளங்கோ.
மெய்சிலிர்க்கும் அனுபவம்
மூலஸ்தானத்தில் அமர்ந்து இறைவனை ஓவியங்களாகப் பிரதியெடுப்பது அற்புதமான அனுபவம் என்று சொல்லும் இவர், “சில கோயில்களில்தாம் மூலவரை அருகில் அமர்ந்து பார்த்து வரையும் வாய்ப்புக் கிடைக்கும். சில கோயில்களில் அனுமதி கிடைக்காது. அனுமதி கிடைக்காத பட்சத்தில், அன்றாடம் கோயிலுக்குப் போய் அரை மணிநேரம் நின்றபடி, தீபராதனை ஒளியில் மூலவர்களை என் மனதில் நிறுத்திக்கொள்வேன். முதலில் அலங்காரம் இல்லாமல் இறை உருவங்களைப் பார்த்து மனத்தில் நிறுத்திக்கொள்வேன். அதற்குப் பிறகு, அலங்காரக் கோலத்தில் இருப்பதைக் கவனிப்பேன்.
இப்படிப் பல நாட்கள் தொடர்ந்து சென்று என் மனத்தில் முழுமையாக இறையுருவம் நிலைபெற்றபின், ஓவியங்களாக்குவேன். திருத்தணி முருகனையும், சிறுவாபுரி முருகனையும் மூலஸ்தானத்தில் அருகில் அமர்ந்து வரையும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. தனிப்பட்ட முறையில் அது எனக்கு ஒரு மெய்சிலிர்க்கும் அனுபவமாக அமைந்தது. பல சந்தர்ப்பங்களில், மூலவர்களை வரையும்போது நேரங்காலம் தெரியாமல் விடியவிடிய வரைந்துகொண்டிருப்பேன்,” என்கிறார். தற்போது, திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர், வடிவுடையம்மனை ஓவியங்களாக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறார் இளங்கோ.
அவரது ஓவியங்களைப் பார்க்க: https://elangoarts.com/https://elangoarts.com/
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago