உட்பொருள் அறிவோம் 50: ஆசை விடவிட ஆனந்தம்

By செய்திப்பிரிவு

சிந்துகுமாரன்

நாம் வாழ்ந்து அனுபவம் கொள்ளும் இந்த உலகம் ஒரு துன்பமண்டலம். இது பிரபஞ்சத்தின் ஒரு தனிப் பரிமாணம். பொதுவாக நாம் துன்பத்தில் ஆழ்ந்து போகும்போது, ‘ஏன் இறைவன் நமக்கு இவ்வளவு துன்பத்தைத் தருகிறான்? நாம் சந்தோஷமாக அல்லவோ வாழவேண்டும்?

நான் ஏதோ தவறு செய்கிறேன். அதனால்தான் துன்பம் அனுபவிக்கிறேன். அந்தத் தவறைச் சரிசெய்துவிட்டால் துன்பம் நீங்கி, இங்கே, இந்த உலகத்தில் நான் இன்பமாக வாழ முடியும்,’ என்றுதான் நாம் நம்புகிறோம். அவ்வாறுதான் நமக்குப் போதிக்கப்படுகிறது. இதனால், ‘துக்கம்’ என்பது இந்தப் பரிமாணத்தின் அடிப்படைக் கட்டமைப்பிலேயே பொதிந்திருக்கிறது என்னும் ஆழமான உண்மை மறைக்கப்படுகிறது.

ஏன் வாழ்க்கை துன்பம் நிறைந்ததாக இருக்கிறது? இறைவன் ஏன் என்னை இப்படிச் சோதிக்கிறான்? நான் என்ன தவறு செய்தேன்? சென்ற பிறவிகளில் நான் செய்த தீச்செயல்களா? இதற்குக் காரணம் ஏதாவது உண்டா? இதனால் பயன் ஏதாகிலும் உண்டா? இவைதானே நம் எல்லோருடைய மனங்களிலும் தொடர்ந்து எழுந்துகொண்டிருக்கும் வேதனை மிகுந்த கேள்விகள்?

துக்கம், பரிணாமம்

உலகம் என்னும் இந்தத் துக்கமண்டலம் பரிணாம வளர்ச்சியில் முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்த உலகம் இப்போது மனம் என்னும் தளத்தில் மையம் கொண்டு இயங்கிக்கொண்டிருக்கிறது. மனம் என்பது அனுபவத்தின் விளைவான நினைவுப் பதிவுகளின் அடிப்படையில் இயங்குவது.

‘காலம்-இடம்’ என்னும் கட்டமைப்பில் இந்தத் தளம் இயக்கம் கொள்கிறது. நினைவுகள் இல்லையேல் கால உணர்வு இல்லை. இங்கு காலம் பரிணாமமாக விரிகிறது. இறந்தகாலம் - நடந்து முடிந்தது, நிகழ்காலம் - நடப்பது, எதிர்காலம் - நடக்க இருப்பது, என்று காலம் இப்போது மூன்றாகப் பிளந்திருக்கிறது.

இப்போதைக்கு இந்த உலகின் உயிர்கள், வெறும் இருப்பு என்பதிலிருந்து தொடங்கி, மனம் என்னும் நிலைவரைக்கும் வந்தடைந்திருக்கின்றன. மனம் தோன்றுவதற்குமுன் இல்லாத சுயவுணர்வு, மனத்தளத்தில் பிம்பங்கள் சார்ந்து முதல் முறையாக மனித இனத்தில் வெளிப்பட்டிருக்கிறது. ஆனால் உயிர் நேரடியாகத் தன்னை இன்னும் சுயமாக உணர்ந்துகொள்ளும் நிலையை அடையவில்லை. இன்னும் சில கட்டங்கள் கடந்தபின்தான் அது நடக்கமுடியும்.

இப்போது மனச்சுயம் (Ego) மட்டும்தான் தோன்றியிருக்கிறது. உயிருணர்வு மனச்சுயத்தின் வழியாகத் தன்னை அறிந்து கொண்டிருக்கிறது. மனச்சுயம் தன்னைத் ‘தான்’ என்று அறிந்து கொண்டாலும், அந்தத் தன்னுணர்வு இன்னும் அனுபவத்தைச் சார்ந்தும், நினைவுகளைச் சார்ந்தும், மற்றவர் களைச் சார்ந்தும், அகம்-புறம் என்னும் இரட்டை நிலையைச் சார்ந்தும்தான் நிலைகொண்டிருக்கிறது.

என் நிம்மதியும் மகிழ்ச்சியும் என்னைச் சார்ந்து இல்லை. எப்போதும் மற்றவர்கள் என்ன செய்துவிடுவார்களோ என்ற பயம், என்ன நடந்துவிடுமோ என்ற கவலை மனத்தின் நிரந்தரமான நிலையாக இருக்கிறது. நடந்து முடிந்தததைப் பற்றிய துயரம், நடந்துகொண்டிருப்பதைப் பற்றிய கோபம், நடக்கப்போவது குறித்த அச்சம், இவையே இந்த உலகத்தின் இயக்கவிதி. ஆசை, அச்சம், போட்டி, பூசல், பொறாமை, ஆத்திரம், அகங்காரம், பேராசை, வன்முறை, இவையே இதன் உள்ளடக்கம்.

மிஞ்சுவது துக்கம்

ஆசை என்பது மனம் தன் அறிவை அடிப்படையாகக் கொண்டு, ஒரு விஷயத்தைப் பற்றித் தனக்குள்ளே உருவாக்கிக்கொள்ளும் பிம்பத்தின் மீது வைக்கும் பிடிப்பு, அதை அடையும் ஏக்கம். மனம் ஆசைப்படும் இந்தப் பிம்பம் உண்மை இல்லை. இந்தக் காரணத்தினால் அது என்றைக்குமே கிடைக்காது. ஆசையை வளர்த்துக்கொள்வதால் வெறும் துன்பமும் வேதனையும் மட்டுமே மிஞ்சும்.

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள் ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள் ஆசை விடவிட ஆனந்தம் ஆமே! என்கிறார் திருமூலர். ‘ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்,’ என்னும்போது ஈசன் என்பதையும் மனம் ஒரு பிம்பமாக ஆக்கிவைத்திருக்கிறது என்பதுதான் பொருள்.

இறைவனைப் பற்றிய பிம்பம் இறைவன் இல்லை. மனம் அது கட்டிவைத்துள்ள பொய்யுலகத்தினுள்ளே சிறைப்பட்டுத் தவிக்கிறது. இதிலிருந்து தப்பிப்பதற்கு இந்தத் தளத்தினுள் வழியேதுமில்லை. ஆனால் மனம் அதன் அறிவின் எல்லைக்குள்ளேயே விடுபடலின் வழிகளைத் தேடுகிறது. இது சாத்தியமில்லை.

இதன் காரணமாக இந்தத் தளம் துன்பத்தின் மண்டலமாக விளங்குகிறது. இந்த வாழ்க்கை முறையில் துன்பமில்லாமல் வாழ வழியில்லை. துக்கம் என்பது இங்கே வெறும் உள்ளடக்கமாக மட்டுமில்லாமல் இதன் கட்டமைப்பிலேயே பொதிந்து, இந்த உலகத்தின் ஊடும் பாவுமாக நிற்கிறது. பல நூற்றாண்டுகளாக உலகத்தில் மாற்றத்தைக் கொண்டுவர விழைந்தவர்கள் எல்லோரும் இதன் உள்ளடக்கத்தை மட்டுமே மாற்ற முயன்றிருக்கிறார்கள்.

இதனால் எந்தவிதமான பயனும் இல்லை. உள்ளடக்கத்தை மாற்றினால் உலகத்தை மாற்றிவிடலாம் என்று இவர்கள் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கை பொய்யானது. உண்மையில் நாம் சிறைக்குள் இருக்கிறோம். சிறைச்சுவரில் அழகான வண்ணங்கள் தீட்டி, ஓவியங்கள் வரைந்து அழகுபடுத்தலாம். அழகான சிறையானாலும், அலங்கரிக்கப்பட்ட சிறையானாலும் இது சிறைதான் என்னும் உண்மையை மாற்ற முடியாது. அடிப்படைக் கட்டமைப்பிலேயே மாற்றத்தைக் கொண்டுவந்தாலொழியத் துன்பத்தை மாற்ற முடியாது. வேறு எந்த விமோசனமும் கிடையாது.

ஒவ்வொரு தனிமனிதனும் இந்தத் துன்பத்தில் இருக்கிறான். துன்பம் மனத்தில் இருந்தாலும், மனத்தளவில் இந்தத் துன்பத்திலிருந்து விடுபட வழியேதுமில்லை. ‘எந்தத் தளம் ஒரு பிரச்சினையை உருவாக்கியதோ அந்தத் தளத்தில் அந்தப் பிரச்சினைக்கான தீர்வு இருக்காது. அதைவிட உயர்தளத்தில்தான் அந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்,’ என்று சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன். அப்படியென்றால் இந்தத் தீர்வுதான் என்ன? இதை விட உயர்தளம் எது?

மனச்சுயத்தைப் பலப்படுத்தும் நூல்கள்

மனிதனுக்கு மூன்று தளங்கள் இருக்கின்றன: உடல், மனம், அறிவுணர்வு. இப்போதைக்கு உடலும், ஓரளவுக்கு மனமும்தான் விழித்துக்கொண்டு செயல்படுகின்றன. உலகம் முழுவதிலும் கல்வித் திட்டங்கள் மனத்தை மையப்படுத்தி அதன் வளர்ச்சிக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றன. சுய-உதவி (Self-Help) நூல்கள் எல்லாம் மனச்சுயத்தை பலப்படுத்தும் நோக்கிலேயே எழுதப்பட்டுள்ளன. இவற்றால் எந்தப் பயனும் இல்லை. இவை நம்மை அமைதிக்கும் நிம்மதிக்கும் சந்தோஷத்துக்கும் இட்டுச் செல்லாது. இவற்றின் மூலம் நமக்கு எந்தவிதமான புரிதலோ வெளிச்சமோ கிடைக்காது.

விலங்கு என்னும் நிலையில், உடலைத் ‘தான்’ என்று கொண்ட நிலையிலிருந்து விடுபட்டு வளர்ச்சி கொண்டு, மனிதன் என்ற நிலையை அடைந்த பிறகு மனமே ‘தான்’ என்று கருதிக்கொண்டு வாழ்கிறோம். ஆனால் மனத்துக்கே ஆதாரமாக உள்ள ‘அறிவுணர்வு’ என்னும் தளத்தில்தான் உண்மையான சுய அடையாளம் நமக்குத் தெரியவரும்.

அறியாத முழுமை நிலையிலிருந்து, அறிந்த துன்பமண்டலத்தில் முழுமையிழந்த அரைவிழிப்பிலிருந்து, அறிவுணர்வின் முழுமையில் அறுதியான விழிப்பு அடைவதுதான் பரிணாமம். மனிதன் தன் முழுமையில் விழித்துக்கொள்ளும்போது, பிரபஞ்சமும் தன் முழுமையில் விழித்துக்கொள்ளும் அதிசயம் நடைபெறும். இரண்டும் ஒன்றென்றும், தானே பிரபஞ்சமென்றும் விளக்கமுற்று, காலவெளி எல்லைகள் கடந்த அகண்டப் பிரக்ஞை வெளிப்பட்டு நிலைக்கும்.

(விழிப்போம்...)

கட்டுரையாளர், தொடர்புக்கு : sindhukumaran2019@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்