உயிர் வளர்க்கும் திருமந்திரம் 111: ஆற்றலே அவரைக் காட்டிக்கொடுக்கும்

By செய்திப்பிரிவு

கரு.ஆறுமுகத்தமிழன்

குடில் என்றால் குடிசை. குடிலில் குடியிருப்பது குடிலை. வேறு பெயர் குண்டலி. குடிலில் உள்ள இடம் குறுகியது என்பதால் குண்டலம்போல வளையமிட்டுச் சுருண்டு கிடக்கும் ஆற்றல்.

குண்டு என்பது உருட்டாகப் பந்துபோல இருப்பது. குண்டுக்கட்டாகக் கட்டுதல் என்பது ஒருவரைப் பந்துபோலச் சுருட்டிக் கட்டுதல். வளைந்து உருட்டாகப் பந்துபோல இருக்கும் வாய் அகன்ற பெரிய பாத்திரத்துக்குப் பெயர் குண்டான் சட்டி; அதுவே வாய் சுருங்கிச் சிறியதாக இருந்தால் குண்டிகை (கமண்டலம்).

குறைகொண்டு, நான்முகன் குண்டிகை நீர்பெய்து

மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தக் – கறைகொண்ட

கண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான்,

அண்டத்தான் சேவடியை ஆங்கு.

(திருமழிசை ஆழ்வார், நான்முகன் திருவந்தாதி, 9)

திருமால் மாணிக்குள்ளனாக வந்து மாவேலி அரசனிடம் மூன்றடி மண் கேட்டான். மாவேலி கொடுத்தான். வான்முட்ட வளர்ந்த மாணிக்குள்ளன் ஓரடியால் மண்ணை அளந்து மற்றோர் அடியால் விண்ணை அளந்தான். விண்ணை அளப்பதற்காக மேலே வந்த மாணிக்குள்ளனின் திருப்பாதத்தைப் பிரம்மன் தன்னுடைய கமண்டல நீரால் கழுவினான். திருமாலின் காலைக் கழுவிய அந்த நீரைத் தலையில் தாங்கித் தன் குறையைப் போக்கிக்கொண்ட சிவன், பின் அதைக் கங்கையாக உலகத்துக்கு வழியவிட்டான் என்று நான்முகனின் கமண்டல நீரை முன்வைத்துத் திருமால் பெருமை பேசுகிறார் திருமழிசை ஆழ்வார்.

‘ஊரோடும் குண்டுணியாய்த் திரியவேண்டாம்’ என்கிறது உலகநீதி (பாடல் 8). குண்டுணித்தனம் என்பது சொல்ல வந்த செய்தியை நேராகச் சொல்லாமல் நெளித்து வளைத்துச் சொல்லி கலகம் உண்டாக்கிவிடுவது. இது நிற்க.

குண்டலியும் பாம்பும் நேர்

வளையமிட்டுச் சுருண்டு கிடக்கும் ஆற்றலான குண்டலி பாம்பின் வடிவத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஏன் குண்டலிக்குப் பாம்பு வடிவம்? பாம்பு நிமிர்கையில் ஆற்றலைத் தலைப்பாகத்துக்கு ஏற்றிப் படமாக விரிக்கிறது. குண்டலியும் அவ்வாறே சுருண்ட நிலையிலிருந்து மேலேறி ஆற்றலை விரிக்கிறது என்பதால் குண்டலியும் பாம்பும் நேர்.

குடில் என்கிற மூலாதாரத்தில் குடிலை என்கிற குண்டலி ஆற்றல் கோரிக்கை அற்றுச் சுருண்டு கிடக்கிறது. அதன் சுருட்டை விரித்துப் பயன்கொள்வது குண்டலி ஓகம். இந்த ஆற்றல் சுருட்டு விரித்துத் தலைப் பாகத்துக்கு ஏறும் வழியில் சில முடிச்சுகள் குறுக்கிட்டுப் பாதை மறிக்கும். தலை விரித்தெழும் ஆற்றலே அந்த முடிச்சுகளை முட்டியும் மோதியும் அவிழ்த்து மேலேறும். ஆகவே குண்டலி ஓகம் செய்வார் முடிச்சவிழ்க்கியும் ஆவார்.

தோட்டத்தில் மாம்பழம் தொண்டி விழுந்தக்கால்

நாட்டின் புறத்தில் நரிஅழைத்து என்செய்யும்?

மூட்டிக் கொடுத்து முதல்வனை முன்னிட்டுக்

காட்டிக் கொடுத்துஅவர் கைவிட்ட வாறே.

(திருமந்திரம் 2933)

தொண்டு என்பது கனிந்த நிலை. தொண்டு கிழம் என்று சொல்வதில்லையா? தொண்டு கிழம் பழுத்த கிழம் என்றால், தொண்டு பழம் பழுத்த பழம். மாம்பழம் தொண்டி விழுதல் என்பது கனிந்த மாம்பழம் தானே விழுதல்.

யார் ஊளையிட்டால் என்ன?

மாம்பழம் வேண்டும். மாமரத்தைத் தேடி ஊருக்கு வெளியில் உள்ள காட்டுப்புறத்துக்குப் போனால் அங்கே நரி ஊளையிடுகிறது. அச்சம். மாம்பழம் பிடுங்கப்போய் நரியிடம் பிடுங்குப்பட முடியுமா? இந்நிலையில், நம் வீட்டுத் தோட்டத்திலேயே மாமரம் இருந்துவிட்டால்? ஆகா! அதில் காய்த்திருக்கும் மாமரம் தானாகவே பழுத்து விழுந்துவிட்டால்? அடடா! அப்படி நிகழ்ந்துவிட்டால் மாமரம் தேடிக் கண்ட இடங்களுக்கு அலைய வேண்டியதில்லை அல்லவா? பிறகு நாய் ஊளையிட்டால் என்ன, நரி ஊளையிட்டால்தான் என்ன?

மூலாதாரத்து அடுப்பை மூட்டினால் ஆற்றல் முடிச்சவிழ்ந்து மூண்டு கிளம்பும். முதல்வர் முன்னிலைப்படுவார். ஆற்றலே அவரைக் காட்டிக்கொடுக்கும். மூட்டி விடுதலும் முடிச்சவிழ்த்தலுமே குண்டலி ஓகத்தின் சாரம் என்று கண்டுகொள்க.

(கண்டுகொள்க...)

கட்டுரையாளர், தொடர்புக்கு : arumugatamilan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்