உட்பொருள் அறிவோம் 47: மறைந்து அடங்கியிருத்தல் அவசியம்

By செய்திப்பிரிவு

சிந்துகுமாரன்

ராமர் யுவராஜனாகப் பட்டமேற்கப் போகிறார் என்று மக்கள் ஆவலாகக் காத்துக்கொண்டிருந்தனர். பட்டாபிஷேகத்துக்குத் தயாரான நிலையில் அவர் வனவாசம் மேற்கொள்ள வேண்டி வந்தது. பல இடர்களுக்கும் துன்பத்துக்கும் ராமபிரான் ஆளானார் . அரண்மனை வாசம் இழந்து, அதன் வசதிகளைத் துறந்து, கானகமேகி, சீதையைப் பிரிந்து, வாலிவதம் செய்து, கடல் கடந்து இலங்கை சென்று ராவணனை வதம் செய்த பின்னர், வனவாசம் முடிகிறது.

இந்தக் கட்டம் ஒவ்வொன்றும் ஆழமான பொருள் கொண்டது. சுந்தர காண்டத்தில் அனுமன் பல இடையூறுகளைக் கடந்து கடல் மீது பறந்து சென்றான். (இது பற்றி விவரமாக, அனுமன் கடலைத் தாண்ட வேண்டும்,’ என்ற கட்டுரையில் ஏற்கனவே எழுதியுள்ளோம்.) கல்லின்மேல் ராமனின் பெயரை எழுதிக் கடலில் போட்டால் கல் மிதக்கிறது! அந்தப் பாலத்தின் மீது நடந்து ராமனும் வானரசேனையும் இலங்கை போய்ச் சேருகின்றனர்.

ஆன்ம சக்தியின் மீது வைக்கும் நம்பிக்கை

கற்பாறைகள் மிதக்கும் பாலத்தின் மேலேறிக் கடலைக் கடப்பது என்பது எதைக் குறிக்கிறது? சமூகம் தந்த பொய் ஆதாரங்களை இழந்த நிச்சயமின்மையில், அந்தச் சமூகம் கட்டிய மனம் நிலைகொள்ள முடியாமல் தவிக்கிறது. இப்போது என்ன நடக்கிறது, மேற்கொண்டு என்ன நடக்கப் போகிறது என்பது குறித்த தெளிவு அந்த நிலையில் இருப்பதில்லை.

இந்த ஆதரவற்ற நிலையில் ஆன்மசக்தியின் மேல் நாம் வைக்கும் முழு நம்பிக்கைதான் அந்த கட்டத்தைக் கடக்க உதவும் என்னும் உண்மையைத்தான் இந்தச் சம்பவம் குறிக்கிறது. இதுதான் வனவாசத்தின் கடைசிக் கட்டங்களில் ஏற்படும் பெரும் சோதனை. அகவளர்ச்சி அல்லது விழித்தெழும் செயல்முறையின் கடைசிக் கட்டங்கள் மிகவும் சிக்கலானவை; சங்கடங்கள் நிறைந்தவை. இந்தக் கதை முழுவதையும் அகவளர்ச்சியின் பல்வேறு கட்டங்களைக் குறிப்பதான கோணத்தில் வாசிக்க முடியும்.

மகாபாரதக் கதையில், காண்டவ வனத்தை அழித்து, மயனின் துணையுடன் இந்திரப்பிரஸ்தம் என்னும் நகரத்தை அமைத்து அரசாட்சியை நிலைநிறுத்தும் நேரத்தில், அனைத்தையும் சூதில் இழந்து பாண்டவர் வனவாசம் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. பன்னிரண்டு ஆண்டு வனவாசம் முடிந்து ஓராண்டு அஞ்ஞாதவாசத்தில் இருக்கவேண்டும்.

பாண்டவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கௌரவர்களால் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கவேண்டும். அப்படிக் கண்டுபிடித்துவிட்டார்களேயானால் மீண்டும் பன்னிரண்டு ஆண்டு வனவாசம் போகவேண்டும். அப்போதுதான் விராட பர்வத்தில் விராட ராஜனிடம் மாறுவேடத்தில் பாண்டவர்களும் திரௌபதியும் ஒரு வருடம் மறைந்து வாழ்ந்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேடத்தில் இருந்தனர். இந்த விஷயம் எல்லாவற்றுக்கும் ஆழமான பொருள் இருக்கிறது.

சுயபிம்பமே மாறுவேடம்

பாண்டவர் ஒவ்வொருவருக்குள்ளும் தத்தம் ஆழ்மனத்தில் இருக்கும் சுயபிம்பமே அவர்களுக்கு அந்த நேரத்தில் மாறுவேடமாக அமைகிறது. இதை மறுசுயம் (Alter Ego) என்று சொல்வார்கள். யுதிஷ்டிரன் கங்க பட்டர் என்னும் அந்தணவேடம் அணிந்தார். வீமன் பலாயனன் என்னும் சமையற்காரனாக வேடமணிந்தான்.

வீர பராக்கிரமசாலியான அர்ஜுனன் பிருகன்னளை என்ற பெயரில் நபும்ஸகனாக ஒரு வருடம் வாழ்ந்தான். விராடனின் மகளான உத்தரைக்கு நாட்டியம் சொல்லிக் கொடுத்தான். நகுலன் தாமக்கிரந்தி என்ற பெயரில் பசுக்களை மேய்ப்பவனானான். மகாஞானவனாகிய சகாதேவன் தந்திரிபாலன் என்ற பெயரில் குதிரை லாயத்தில் குதிரைகளைப் பார்த்துக்கொண்டான். திரௌபதி ஸைரந்திரி என்ற பெயரில் அரசி சுதேஷ்ணைக்குச் சிகையலங்காரம் செய்யும் பணிப்பெண்ணாக வாழ்ந்தாள்.

அப்போதுதான் சுதேஷ்ணையின் சகோதரனான கீசகன் திரௌபதியின்மேல் மோகம் கொண்டு, அவளை இச்சித்து வீமனால் வதம் செய்யப்பட்டான். கீசகனை வதம் செய்யும் பராக்கிரமம் வீமன், துரியோதனன் போன்ற சிலருக்குத்தான் உண்டு. இதனால் பாண்டவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது வெளியே தெரிந்துவிடும் ஆபத்து இருப்பதனால், ஸைரந்திரி கந்தர்வர்களின் மனைவி என்றும் கந்தர்வர்கள் கீசகனைக் கொன்றுவிட்டார்கள் என்றும் நம்பும்படிச் செய்தனர்.

இல்லாமல் இருப்பது

மறைந்து வாழ்வது என்பது முக்கியமானதொரு விஷயத்தைக் குறிக்கிறது. தன்னை உலகில் யாராக நினைத்திருக்கிறோமோ, அந்த நபராக இல்லாமல் இருப்பது என்பதைத்தான் இது சொல்கிறது. இந்தக் கட்டங்களில் தன் சமூக பிம்பமான மனச்சுயத்தைப் (Ego) பின்தள்ளி வைத்துவிட்டு, அதை முன்னிறுத்தாமல் பின்னணியில் மறைந்து அடங்கியிருக்க வேண்டிய அவசியத்தை இது சொல்கிறது.

ராமாயணத்தில் வனவாசத்தின் கடைசிக் கட்டத்தில், ராமனும் வானர சேனையும் கடல் கடந்து இலங்கை செல்வதற்கு ஒப்பானதுதான் பாண்டவர்களின் அஞ்ஞாதவாசம். உள்ளுருமாற்றத்தின் கடைசிக் கட்டங்கள் மிகவும் சிக்கலும் கடினமான சோதனைகளும் நிறைந்தவை என்பதை இந்தக் கதைகள் காட்ட விழைகின்றன.

வனவாசம் என்பது மனம் கட்டமைத்து வைத்திருக்கும் சட்டதிட்டங்களுக்குட்பட்ட நகரம் போன்ற வாழ்க்கை நிலையை விடுத்து, கட்டற்று மரங்களும் செடிகொடிகளும் அடர்ந்து வளர்ந்து, மிருகங்களும் பிற உயிர்களும் இயற்கையின் இயல்பான விதிகளுக்கு மட்டுமே கட்டுப்பட்டு வாழும் காட்டு வாழ்க்கையை மேற்கொள்வதாகும்.

கட்டுப்பாடுகள் கொண்ட சட்டகங்கள் அமைத்து, அவற்றின் எல்லைகளுக்குள் இயங்கும் நனவு மனத்தின் வரையறைகளைக் கடந்து, நனவிலியின் இருளில் உலகின் சட்டதிட்டங்களுக்கு உட்படாத இயற்கையின் இயல்பூக்க வாழ்வெளியில் நுழைந்து, அங்கே எதிர்ப்படும் சக்திகளின் உள்ளியக்கங்களை அறிந்துகொண்டு, அவற்றையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் உன்னதமான வேலையில் தன்னை ஆட்படுத்திக்கொள்வதுதான் வனவாசம்.

வனவாசத்தின் முடிவில், அதுவரையில் அறிந்திராத புதிய உண்மைகளை அறிந்துகொண்டு, அவற்றின் புதிய தெளிவில், உலக வாழ்க்கையையே மீண்டும் புதிய கோணத்தில் கண்டு, அறிவுணர்வின் புத்தொளியில், இதுவரை கண்டிராத சுதந்திரத்தில் வாழும் சாத்தியம் வெளிப்படுகிறது.

‘நனவிலியின் இருளில் மறைந்திருக்கும் உண்மைகளை அறிந்துகொண்டு. அவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டுவராமல் போனால், அவை நம் வாழ்க்கையைப் பெரிதும் பாதித்துக்கொண்டிருக்கும்; நாம் புரிந்துகொள்ளாமல் அதை விதி என்று சொல்லிக்கொண்டிருப்போம்,’ என்கிறார் நம் கீழைத்தேசங்களின் ஞானிகளுக்கு நிகரான கார்ல் யூங் என்னும் நவீன உளவியலின் பிதாமகர்.

நனவுமன எல்லைக்குள் இருக்கும் மங்கிய ஒளியிலிருந்து, நனவிலியின் இருள்வெளிக்குள் நுழைந்து அதன் ரகசியங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதுதான் வனவாசம். மனிதகுலத்தின் விடுதலை இதில்தான் அடங்கியிருக்கிறது.

(விடுதலை அடைவோம்)
கட்டுரையாளர், தொடர்புக்கு: sindhukumaran2019@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்